நடிகைகளை உறுப்புகளாகவே ஊடகங்கள் பார்க்கின்றன!

விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள்

வாசகர் கேள்விகள், படம்: கே.ராஜசேகரன்

 

அ.ராமநாதன், ஒரத்தூர்.

''சரித்திர நாவல்கள் தமிழில் எப்படி இருந்தன? 'வானம் வசப்படும்அவற்றில் இருந்து எப்படி வேறுபட்டது? நாவல்கள் அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''ஜன்னல் ஓரம் நின்று தங்கள் பூரித்த மார்பகங்களை வெளியே தெரியக் காட்டிக்கொண்டு, தங்களைச் சிறைமீட்க இளவரசர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள் இளவரசிகள், ஒருகாலத்து நாவல்களில். அரசர்கள், அவர்களது மனைவிமார்கள், காதலிகள், குடும்பம் என்பதான வட்டங்களுக்குள் இருந்தன வரலாற்று நாவல்கள், இந்திய அளவிலுமே!

எந்தக் காலகட்டத்துக் கதையோ, அந்தக் காலகட்டத்து சமுதாயச் சொல்நெறி, மொழி, கலாசார விழுமியங்கள், மக்கள் வாழ்ந்த முறை, அவர்களின் போராட்டங்கள் என்பதுபோன்ற ஒரு 'சமூகக்கதையாக, படைப்பாக வரலாற்று நாவல்கள் அபூர்வமாகத்தான் பின்னர் வெளிவரத் தொடங்கின. சரித்திரம் தேர்ச்சிகொள்ளச் சொன்னார் பாரதி. வரலாறு என்பது, பழைமை அல்ல; நிகழ்காலத்தோடு உரையாடுகிற நீட்சி.

'மானுடம் வெல்லும்’, 'வானம் வசப்படும்இரண்டு நாவல்களும், சமூகத்தின் அடித்தட்டில் வைக்கப்பட்ட தாசிகள், நாட்டியக் கலைஞர்கள், மதம் மாறிய தலித்துக்கள், ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்த உலுத்தர்கள், அந்நிய ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்த ஆட்சியாளர்கள் என்று விரிகிற நாவல்கள். அண்மையில் பா.வெங்கடேசன் எழுதிய 'தாண்டவராயன் கதைஎன்ற நாவல் ஒரு முக்கிய படைப்பு. அசோகன் நாகமுத்து, 'போதியின் நிழல்நாவல் மூலம் குறிப்பிட்ட வரலாற்றுவெளியை உருவாக்க முயன்றிருக்கிறார்!''

து.அஸ்வகோஷ், தீர்த்தமலை.

''மூத்த செம்மொழியான தமிழுக்கு இதுவரை இரண்டு ஞானபீட விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது நம் படைப்பிலக்கியவாதிகளின் குறையா? அரசியல்வாதிகளின் அக்கறையின்மையா?''

''முதல் தமிழுக்கான ஞானபீட விருது, பாரதிதாசனுக்கு என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தலைமையிலான குழு தீர்மானித்திருந்தது. விருது கொடுப்பதற்கு முன்பு பாரதிதாசன் காலமானதால், வாழும் படைப்பாளிக்கே விருது தரப்பட்ட வேண்டும் என்ற கமிட்டியின் நிபந்தனைபடி, அகிலனுக்கு முதல் ஞானபீட விருது அளிக்கப்பட்டது. அகிலனுக்குப் பிறகு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகே ஜெயகாந்தனுக்குச் சென்றது அந்த விருது. மலையாளிகள், தங்கள் மாநிலத்தில் சக எழுத்தாளர்கள் மேல் எத்தனை வெறுப்பு காட்டினாலும், தேர்வுக் கூட்டத்தில் 'யாரேனும் ஒரு மலையாளிக்குக் கொடுஎன்று கோரிக்கை வைக்கிறார்கள். தமிழ்ப் பிரதிநிதிகள், அழுத்தமாக அப்படிப்பட்ட கோரிக்கைகளை, உரிய சான்றுகளோடு வைப்பதில்லை என்றும், கூடுமானவரை அமைதிகாத்துக் கூட்டத்தைச் சிறப்புற நடத்திக்கொடுத்து ஊர் திரும்புகிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன. தமிழர்கள், யார் அடைய வேண்டும் என்பதைவிடவும், யார் அடைந்துவிடக் கூடாது என்பதில் முனைப்போடு செயல்படுகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். செத்த பிறகு சிலை வைக்கும் முயற்சிகளை நாம் சிறப்பாகச் செய்வோம்தானே!

ஆனால், உண்மையான படைப்பிலக்கியவாதிகள் இதில் எல்லாம் கவனம் குவிப்பதில்லை!''

அ.சுவாமிநாதன், குன்றத்தூர்.

 ''உங்கள் குடும்பம் பற்றிய பகிர்வுகள் எதுவும் இல்லையே... ஏன்?''

 ''மிக எளிய குடும்பப் பின்னணி. நான்தான் முதல் தலைமுறைப் படிப்பாளி. குடும்பம் புதுச்சேரியிலும், நான் சென்னையிலுமாக வாழ நேர்ந்துவிட்டது. குடும்பத்துக்குள் மனிதர்க்கு விடுதலை இல்லை என்பது, குடும்பத்துக்குள் இருந்தும் இல்லாமலும்தான் புரிந்துகொள்கிறேன். பாதி வானத்தைத் தாங்குகிறவர்கள் பெண்கள். அவர்களின் சிறகுகள், குடும்ப அமைப்புக்குள் வெட்டப்பட்டுவிட்டன. மனிதகுல நெடும் பயணத்தின் இடையில் ஏற்பட்ட 'குடும்பம்என்ற அமைப்பு, அரசுகள் ஆதிக்கம் செய்ய ஆசைப்பட்ட வர்க்கு உதவ என்றே உருவாக்கப்பட்டது. இது விரைவில் உதிரும்; உதிர வேண்டும்!''

அ.சத்தியநாராயணன், மேகளத்தூர்.

''நடிகைகள் சில்க், ஷோபா, விஜி போன்றோரின் தற்கொலைக்கு யார் காரணம்?''

 ''நடிகைகள் என்பவர்கள், சொந்த விருப்பங்கள், வெறுப்புகள், தேர்வுகள் உள்ளவர்கள் என்பதை சினிமாவும் சமூகமும் ஒப்புக்கொள்வது இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் பணம்கொழித்த பிரமுகர்கள் என்று பலரும், நடிகைகளை விளையாட்டுப் பொருட்களாக, தங்கள் அந்தரங்கத்துக்கான வசந்த பொருட்களாக ஆக்க விரும்புகிறார்கள். அதிகாரம் உள்ளவர்கள், நடிகைகளை அச்சுறுத்தி தங்கள் வசம் ஆக்க முயல்கிறார்கள். நடிகைகள், தாங்கள் விரும்பும் வெளிகளில் சஞ்சரிக்க அனுமதி மறுக்கப்படு கிறார்கள். நடிகைகளின் குடும்பங்கள், தங்கள் தேவைகளை நிறைவேற்றும் இயந்திரமாக அவர்களை இயக்குகிறார்கள். தகர்க்கமுடியாத வளையத்துக்குள் சிக்கவைக்கப்படுகிறார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடுமோ என்ற அச்சத்தில் நடிகைகள் உழல்கிறார்கள். அந்த மன உளைச்சலே தற்கொலையை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது.

நடிகைகளை, வெறும் உறுப்புகளாகவே நம் ஊடகங்கள் பார்க்கின்றன. அந்தரங்க வெளி மறுக்கப்படும் நடிகைகள், மனம் சலித்து தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். ஒரு நடிகையின் தற்கொலைக்குப் பின்னால், இயக்குநர்கள், முதலாளிகள், அரசியல்வாதிகள் கட்டாயம் இருக்கிறார்கள். இவர்களே கொலைகாரர்கள். ஆனால், தப்பித்து வாழ்பவர்கள்!''

த.சத்யா, விக்கிரவாண்டி.

 ''உங்களுக்கு இசையில் ஈடுபாடு இருக்கிறது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்கள் கதைகளிலும் அதைப் பார்க்க முடிகிறது. சங்கீதம் கற்றிருக்கிறீர்களா?''

''எட்டாம் வகுப்பு வரும்போது, சங்கீதம் கற்ற ஒரு நண்பரிடம் சரளி வரிசை வரை வந்தேன். பிறகு நின்றுபோனது. சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என்று நினைத்தேன். நானும் என் நண்பரும் (அவர் பெரிய இலக்கியவாதி) வெண்ணாற்றங்கரைக்குப் போனோம். பெரும் ஆசிரியர் அங்கு இருந்தார். ஏதோ கொஞ்சம் மொழிப் பயிற்சி தொடங்கும்போது, நண்பர் ஆசிரியர் மகளுக்கு லவ் லெட்டர் கொடுத்து, வெற்றிகரமாக மொழிப் பயிற்சியை முடித்துவைத்தார். அதனால் என்ன? அவர் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் கொடுத்திருப்பேன்!

அப்புறம் மிருதங்கம். தஞ்சை ஐயன் கடைத் தெரு, அக்ரஹாரமே விதிர்விதித்துப்போயிற்று. சாதகம் என்றால் சாதாரண சாதகம் இல்லை; அசுர சாதகம். ஒருநாள் திடுமென என் மற்றும் நண்பரின் பார்வை வீணையை நோக்கித் திரும்பியது. என் அறையில் புதிய வீணை, என் படுக்கையில் வீற்றிருந்தது. வீணை வாங்கிய மறுநாளே, சிட்டிபாபு அணிகிற மாதிரியான ஜிப்பாக்கள் தைத்துக்கொண்டேன். இரவு 12 மணி வரை வாசிப்புதான். வீணை வாங்கிய இரண்டாம் நாளே 'கிருஷ்ணா நீ பேகனே...வந்துவிடும் என்று நான் நம்பினேன். ஆனால், நல்ல காது உள்ளவனுக்கு, அபஸ்வரம் மிகப் பெரிய அவஸ்தை. தெருவைப் பார்த்திருக்கும் என் அறையைக் கடந்து செல்லும் மாமிகளில் யாராவது ஒருத்தி என்னை ஒரு நாள் கொலையே செய்துவிடுவாள் என்று நம்புவது மாதிரி அவர்களின் முகத்தில், ஏனோ ஆத்திரத்தைக் கண்டேன். ஆனால் மாமிகளில், இளம்பெண்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு போவார்கள். அது கேலிச்சிரிப்பு என்பதை உணர்ந்துகொள்ள பல நாட்கள் ஆயிற்று.

இசையைக் கேட்டு, பெண்கள் காதலிப்பார்கள் என்றுதான் நான் எண்ணி இருந்தேன். என்னுடையது இசை இல்லை... இம்சை என்று அவர்கள் உணர்ந்தார்கள். மாமிகள் மாமாக்களிடம் சொல்லி, மாமாக்கள் வீட்டுக்காரருக்கு அழுத்தம் கொடுத்து என்னை அறையைக் காலிபண்ணச் செய்துவிட்டார்கள். என் வீணை ஆசிரியர் சத்யவான், 'ஏதோ கவிதை கிவிதையெல்லாம் எழுதறேளே... அத்தோடு நிறுத்திண்டா என்ன?!’ என்று வேறு ஒருநாள் மெள்ளச் சொன்னார். 'என் வாசிப்பு எப்படி?’ என்று ஒருநாள் கேட்டேன். அதற்கு சுமதியும்கூட, 'ஏதாவது நல்ல விஷயம் பேசலாமேஎன்றாள்.

ஒன்று தெரிகிறது, சார். இன்னும் ஒரு 'ஈமணி சங்கர சாஸ்திரி’(வீணை வித்வான்) உருவாகும் அரிய வாய்ப்பைக் கொடுக்கச் சமூகம் தயாராக இல்லை.

ஆனால், என் கேள்வி ஞானம் மிகவும் அடர்த்தியானது. சங்கீதத்தின் அடிக்கரும்பின் ருசியும் எனக்குத் தெரியும்; நுனிக்கரும்பின் கைப்பும் தெரியும். 'சித்தூரார்’ (சித்தூர் சுப்ரமணிய பிள்ளை) முதல் 'சிக்கில் குருசரண்வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். வசந்த கோகிலம் முதல் ரஞ்சனி காயத்ரி வரை, ராம்நாட் கிருஷ்ணன் முதல் இன்று வரும் குழந்தைகள் வரை கேட்டுக்கொண்டிருக்கிறேன். தனிமையில் எனக்குத் துணையாக, என் துன்பங்களில் ஆறுதலாக, என் ஆத்மாவை நிரப்புவது சங்கீதம்தான். இப்போது நான் சஞ்சய் சுப்ரமணியத்தின் ரசிகன்!''

ஜே.பரஞ்சோதி, அம்பத்தூர்.

 ''உலகத்தில் உங்களுக்குப் பிடித்த 'ஹீரோயார் சார்?''

''சந்தேகமே வேண்டாம். 'பிரபஞ்சன்தான்!''

 நன்றி: விகடன்