என் சட்டைப் பையில் இருந்த செல்லுக்கு அழைப்பொன்று வந்தது. அப்புறம் ஒலி அடங்கியது. மாலை நடையை முடித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். செல்லைப் பார்த்ததும் தேனுகாதான் அழைத்தார் எனத் தெரிந்தது. தெரு, இயந்திரங்களால் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குப்போய் நிதானமாகப் பேசலாம் என்று நினைத்துக் கொண்டேன். வழியில் அடுத்த நாளுக்கான காய்கறிகள் வாங்க வேண்டி இருந்தது. வீடு திரும்பும்போது காலனியே இருட்டில் இருந்தது. எல்லா வெட்டுகளும் இப்போதெல்லாம் பழகிவிட்டது. எந்தக் குந்தகமும் இல்லாத நாள் என்பது ஏது?

இருட்டிலேயே தேனுகாவை அழைத்தேன்.

தொந்தரவு செய்துவிட்டேனாஎன்றார்.

நிச்சயமாக இல்லை. சொல்லுங்கள். நலம்தானே, வீட்டார் எல்லாரும் நலம்தானே?’

எல்லாரும் நலம். வரும் 30ஆம் தேதி, நான் பணி ஓய்வு பெறுகிறேன். அந்த நாளை நண்பர்களைக் கொண்டு சின்ன சந்திப்பு நிகழ்ச்சியாக வைக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.

அடடா. விடுதலை நாள் என்று சொல்லுங்கள். ஞானக்கூத்தன் சொல்வதுபோல ஏதோ ஒரு பிடுங்கி உத்தியோகம் செய்துதானே தீர வேண்டியிருக்கிறது. பணி ஓய்வு பலருக்குப் பூதமாகத்தானே இருக்கிறது. உங்களுக்கு அது புது வாழ்க்கைத் தொடக்கம் இல்லையா. கொண்டாடுவோம், அந்த நாளை.

அதுக்குத்தான் உங்களை அழைக்கிறேன்.

கண்டிப்பாய் வருகிறேன். எவ்வளவு இழந்திருப்பீர்கள்? உங்கள் தெருவுக்கு யானை வந்ததைப் பார்க்கத் தவறி இருப்பீர்கள். ரோஸ்கலரில் கையில் வாட்ச் கட்டிவிடும் ஜவ்வு மிட்டாய்க்காரர், சாவதானமாகக் காலை நேரத்து கும்பகோணம் பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள், தயிர் விற்கும் பெண்மணி, வாசலுக்கு வரும் பச்சைக்கீரை, நண்பர்களுடன் கடிகாரத்தை மறந்து காபி குடித்துக்கொண்டு அவசரம் சுமக்காமல் பேசலாம். மத்தியானம் நிம்மதியாகத் தூக்கம் போடலாம். எங்கிருந்தோ வரும் காபிக்கொட்டை வறுபடும் வாசனையைக் கடைத்தெருவில் நடக்கும்போது நுகரலாம். நிறைய படிக்கலாம். வாங்கி வைத்துப் படிக்காமல் இருக்கும் புத்தகங்களைப் படித்து முடிக்கலாம். தேனுகா, இனிதான் நீங்கள் வாழப் போகிறீர்கள்.

எல்லாவற்றையும் அவர் அமைதியாகக் கேட்பது தெரிந்தது. இடையிடையே சிரித்துக்கொண்டார்.

எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேனோ, அதையே படம் வரைவதுபோலச் சொல்கிறீர்கள். அவசியம் வாருங்கள்... வர வேண்டும்.

நான் ஒப்புக் கொண்டேன். சரியாக அந்நேரம் மின்சாரம் வந்தது.

அதன்பிறகு எனக்கே உரிய பிரத்யேகமான பிரச்னையை நான் எதிர்கொள்கிறேன். நான் பிறந்த விருத்தாசலத்து மேட்டுத்தெரு வீட்டின் தோட்டத்தில் மூன்று மரங்கள் இருந்தன. அவைகளில் ஒன்று நுணா மரம். மற்றவை நாவலம் மரம், இலந்தை மரம். நுணா மரத்தில் ஒரு பேய் இருந்தது, இருக்கிறது. அது என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதன் முக்கியமான பணி. நான் ஏதாவது பயணத்தை ஒப்புக்கொள்ளும் போதெல்லாம் என் காதுகளுக்கருகில் வந்து பேசத் தொடங்கும். மிகவும் பழைய பேய். விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோயில் கட்டும் காலத்திலேயே அது இருந்திருக்க வேண்டும். அது என்னிடம் பேசத் தொடங்கும்.

ஊருக்குப் போகிறாயா

ஆமா. போகத்தான் வேண்டும்

எதையாவது சொல்லித் தட்டிக் கழிக்கலாமே. மார்பு வலி. பாத்ரூமில் வழுக்கி விழுந்து விடுகிறாய். மாமனார், பாட்டி, தாத்தா யாரேனும் சாகலாம் இல்லையா.

எல்லோரும் ஏற்கனவே செத்துவிட்டார்கள்

வாழ்பவனுக்கு மரணம் வராதா. இப்போதெல்லாம் எமராஜா எருமையிலா வருகிறார். பஸ்ஸில், ரயிலில் வருகிறார்.

எனக்கு மரண பயம் இல்லை.
 
நன்றி:காலச்சுவடு 

Last Updated ( Thursday, 18 December 2014 06:34 )