என் பிழைப்பு அறியாது

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

(சிலம்பில் மாதவி)

மழைக்கண் அம்மா அரிவை

நெய்யொரு துறந்த மை இருங்கூந்தல்...

(புறநானூறு)

முதல் வரிகள் கோவலன் பிரிவை அறிந்தபோது எல்லையற்ற துயரத்தோடு மாதவி எழுதிய கடித வரிகள்.  'அடிகளே.  உம் திருவடிகளில் நான் வீழ்ந்து வணங்குகிறேன். நான் எழுதுபவை தெளிவற்ற சொற்கள் என்றாலும் தாங்கள் மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும். உம் தாய் தந்தையர் முதுமைப்பருவம் அடைந்தவர்கள். அவர்களுக்குத் தொண்டு செய்வதைத் துறந்து விட்டீர்கள். நல்ல குலத்தில் பிறந்த உம் மனைவியுடன் நள்ளிரவில் வெளியேறினீர்கள். (என்னிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினீர்கள்!) நான் செய்த பிழை என்ன? என் துன்பத்தைப் போக்குவீர்களாக. பொய்யைத் தவிர்த்து உண்மையையே காணும் பெரியவர் தாங்கள்...’

எவ்வளவு நுட்பமான உரையாடல். நான் என்ன குற்றம் செய்தேன் என்று மாதவி கேட்கும் கேள்வி, கோவலன் பதில் அளிக்க முடியாதது. எந்தக் காலத்திலும் அவனாலும் அவனைப் போன்றவர்களாலும் பதில் அளிக்க இயலாத வினா இது. கோவலனே தேடி வந்தான். மாதவி வீட்டில் உண்டு உறங்கினான். திடுமென ஒரு நாள் நினைத்துக் கொண்டு 'மாயப்பொய்க்காரி, சாகசக்காரி, நடிகை’ என்று அவதூறுகளை வாரித் தூற்றிவிட்டு திருடன்போல இருட்டில் வெளியேறுகிறான். இரண்டு, மிகக் கூர்மையான அஸ்திரங்களை அவன் மேல் விடுக்கிறாள் மாதவி. வெளித் தோற்றத்தில் பணிவு, வணக்கம் எல்லாம் தென்பட்டாலும், மூடிய கைகளில் ஆயுதம் மறைந்திருக்கிறது. நல்ல குலத்தில் பிறந்தவள் அல்லவா, உன் மனைவி என்கிற அங்கதம், பொய் தீர்ந்த ஒழுக்கவாதியல்லவா நீ என்கிற விமர்சனம். மாதவி, கோவலனை விடவும் புத்திசாலி. மேலும் அவள் கலையரசி!

இரண்டாவது, புறநானூற்று வரிகள். பேகன், வள்ளல்களில் ஒருவன். மயில் ஆடியதைக் கண்டு, குளிரால் நடுங்குவதாக நினைத்து தன் போர்வையை மயிலுக்குப் போர்த்திய கொடை மனம் படைத்தவன். அவன், தன் மனைவியைப் பிரிந்து வேறு ஒருத்தியுடன் சிநேகம் கொண்டு அவள் வீட்டிலேயே தங்கிவிட்டான். மனைவி கண்ணகி (இவள் பெயரும் கண்ணகிதான்!) ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாள். புலவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பேகனிடம் சென்று, 'இது நியாயம் அல்லவே. குடிமக்கள் குறை தீர்க்கும் மன்னவன், மனைவியைத் துயரம் செய்வது என்ன முறை?’ என்று தட்டிக் கேட்டார்கள். தமிழ்ப்புலவர்கள் சும்மா புகழ்வதும், பலன் பெறுவதுமாக வாழ்ந்தார்கள் என்பது தவறு. கணவன் மனைவி அகப்பிரச்னைகளையும் பொதுப்பிரச்னையாகக் கண்டு பேசியவர்களும் கூட, தமிழ்ப்புலவர்களே!
 
காட்டு மயிலுக்குப் போர்வை கொடுத்தவனை, வீட்டு மயிலுக்கு ஏன் தீயை வழங்குகிறாய் என்று கேட்கிறார்கள் அவர்கள்.

மாதவி, கோவலனின் மனைவிக்குப் பின், சேர்ந்தவள். கண்ணகியோ, பேகனின் மனைவியாக இருந்து, சில காலம் அவனால், ஒதுக்கப்பட்டவள். தமிழில், மனைவிக்குப் பின் வாய்த்தவளை 'மாற்றாள்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். மனைவியோ, மாற்றாளோ அவர்களின் துன்பம் ஒன்றுதான். மனைவி என்பவளுக்குச் சமூக அங்கீகாரம், ஆதரவு, தொடர்ந்து கிடைக்க, மாற்றாளுக்கு அவை மறுக்கப்படும். அவமானம் புறக்கணிப்பு இரண்டும் இந்த இரண்டாவது பெண்களுக்கே உரிமையாக இருக்கப் புருஷர்கள் தப்பித்து விடுகிறார்கள்.

ஓர் அருமையான கதை.

பகல் நேரம். அவன், சுற்றுமுற்றும் பார்த்தபடி, அந்த வீட்டுக்குள் நுழைகிறான். கதவையும் சாத்திக் கொள்கிறான். அந்த வீட்டுக்கு உரிய அவனை வரவேற்கிறாள். அப்போது கதவு தட்டப்படுகிறது. ஒரு பெண்ணின் குரலும் கேட்கிறது.

''பெண்ணே. அவனை வெளியே அனுப்பு. அவன் மனைவிதான் நான்.''

திடுக்கிட்ட அவன் எழுந்து, சமையல் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொள்கிறான். சிநேகிதி கதவைத் திறக்கிறாள். வெளியே ஒரு பெண், ஆக்ரோஷமாக, சினத்தின் உச்சியில் நிற்கிறாள்.

'என்ன’ என்கிறாள் சினேகிதி.

'என்னவா? வீட்டுக்குள்ள ஒளிச்சு வெச்சிருக்கியே, அவன் என் புருஷன். அவனை வெளியே அனுப்பு.’

'எவனும் இங்க இல்ல. இடத்தைக் காலி பண்ணு.’

'காலி பண்றேன். என் கணவனை வெளியே அனுப்பு. அவன் என் புருஷன் மட்டுமல்ல. என் இரண்டு குழந்தைகளுக்கும் அப்பன். அங்க என் புள்ளைங்க பட்டினியா துடிக்குது. உனக்கு கோழி இறைச்சி வாங்கி வந்திருப்பானே. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தின்னிருப்பீங்களே. என் குடும்பத்தைப் பட்டினி போட்டுட்டு... நீ விளங்குவியாடி...’
மனைவி போட்ட சத்தத்தில் கூட்டம் கூடிவிட்டது. வேடிக்கை பார்ப்பதற்கும், முடிந்தால் பஞ்சாயத்து பண்ணுவதற்கும் என்றே சில பேர் பிறப்பெடுத்து வருவார்களே. அந்தப் பொது ஜனம். மனைவியைப் பார்த்து, 'என்னம்மா, என்ன சங்கதி’ என்றார் ஒருவர். அந்த நபரைப் பிடித்துக் கொண்டாள் மனைவி.

'பாருங்க ஐயா, என் புருஷனை வளைச்சுப் போட்டுட்டாயா, இவ. அவன் சம்பாதிக்கிறதெல்லாம் இவள்கிட்டதான் கொடுக்கிறான். நானும் என் ரெண்டு குழந்தைகளும் தவியாய்த் தவிக்கிறோம்யா?

மக்கள், சிநேகிதியை இழிவு தோன்றப் பார்த்தார்கள். கூசிப் போய் நின்றாள் அவள்.

'அது மட்டுமா, என் காதில், கழுத்தில் கிடந்த நகைகளையும் இவளிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டான், என் புருஷன்.’ என்று கத்தினாள். அவமானத்துடன் தன் மேல் உள்ள நகைகளை எடுத்து மனைவியிடம் கொடுத்தாள் சிநேகிதி. 'உள்ளே நீ வீட்டுக்குள் வைத்துள்ள நகைகளும் என்னுடையவைதான்’ என்று சொன்னாள்.  உள்ளே சென்று, தன் நகைப்பெட்டியைக் கொண்டு வந்து, அதை மனைவி முன் கவிழ்த்தாள் சிநேகிதி. எடுத்து வைத்துக் கொண்டாள் மனைவி. இது எதுவும் அவளுடையது இில்லை. மனைவி புறப்பட்டாள்.
சிநேகிதி உள்ளே வந்து படுக்கையில் விழுந்து அழத் தொடங்கினாள். அவள் அருகில் அவன் வந்தான். 'நீ எப்போதும் ஒரு குண்டு மணி நகையாவது, பணமாவது எனக்குக் கொடுத்திருக்கிறாயா’ என்று சிநேகிதி கேட்டாள். தலைகுனிந்தபடி 'இல்லை’ என்றான்.

'இல்லை’ என்று சொன்னபடி தன் கோட்டை அணிந்து கொண்டான். அவளைப் பார்த்து, 'என் மனைவி எப்படிப்பட்ட உத்தமி. அவள் உன் காலில் விழும்படியாயிற்றே... கேவலம் உன்னிடம்’ என்றபடி வெளியேறினான் புருஷன்.

ஆசிரியர் செகாவ் இதற்கு 'நடிகை’ என்று பெயர் கொடுத்திருக்கிறார். இதை நான் படித்த பல பத்தாண்டுக்கு முன், என் மனதில் ஏற்பட்ட சித்திரத்தை, என் வழியாகத் தந்திருக்கிறேன். மாதவிக்கும், இந்த நடிகைச் சகோதரிக்கும் என்ன வித்தியாசம்? கடந்த 2,000 ஆண்டு  கால வளர்ச்சியில் பெண் நிலை, குறிப்பாக மாற்றாளாக வாழ நேர்ந்த பெண் நிலை மாறவே இல்லை.

'நடிகை’ கதை எழுதப்பட்டு 100 ஆண்டுகள் ஆயின. மாற்றாளாக வாழ்ந்த பெண்கள் நிலை மாறிற்றா என்றால் இல்லை. சங்க காலம் எனப்படும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சூழல் மேலும் மோசமாகவே இருந்துள்ளது. பரத்தையர் என்ற பெயரில் ஒரு சமூகத்தையே உருவாக்கிய காலம் அது. பரிபாடல் என்ற நூலில் ஒரு பாவப்பட்ட பரத்தையை (பாடல் 20) நாம் சந்திக்க முடிகிறது. தலைவி (மனைவி)க்கும் மாற்றாள் ஒருத்திக்கும் இடையே நடந்த வாய்ச்சண்டையே அப்பாடல்.

மழை பெய்து, வைகை ஆற்றில் வெள்ளம் வருகிறது. வெள்ளம் பாயும் அழகைக் காண மக்கள் கூடுகிறார்கள். தலைவியும் மாற்றாளும் கூட வருகிறார்கள். தலைவி, தன் தலைவனுடனும், தோழிகளுடனும் வந்திருக்கிறாள். நீர் விளையாட்டின் போது, தோழிகள் ஒரு பெண்ணைக் குறிப்பாகக் கவனிக்கிறார்கள். அவள் அணிந்திருக்கும் மாலையும், கைவளையும் எங்கோ பார்த்ததாகத் தோன்றுகிறது. எங்கே? புரிந்துவிட்டது. அவை, தலைவி அணிந்தவை. எங்கோ தொலைந்துவிட்டன என்று தலைவி சொல்லிக்கொண்டிருந்தாளே! தோழிகள், அந்தப் பெண்ணைத் தொடர்கிறார்கள். அவள், அவர்கள் கண்ணில்படாமல் மறைந்து வெளியேறுகிறாள். ஓரிடத்தில் அவளை மடக்கி, அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.
மாற்றாள், அந்த தோழிகளிடம், 'ஏன் என்னைத் தொடர்கிறீர்கள்’ என்கிறாள்.

தோழிகளில் ஒருத்தி மாற்றாளை வைகிறாள். 'வஞ்சனை, பொய் இரண்டையும் சேர்த்து ஆண்களை மயக்கி இழிவாழ்க்கை வாழ்பவளே! காமுகப் பன்றிகள் வாய் வைத்து உண்ணும் தொட்டியே! அழகெனும் வயலில் கள்ளையே நீராகப் பெய்து போதையாகிய கலப்பையால் உழுகின்ற பழைய சாலே! யார் வேண்டுமானாலும் படிந்து குளிக்கும் நீர்த்துறையே! எங்கள் தலைவியின் நகையை வேறு அணிந்துகொண்டு வந்து மினுக்குகிறாயா? ஓடிப் போன எருதைத் தேடிப்பிடித்துக்கொண்டு வந்து உழவு செய்பவர் உழவர்கள். உன்னையும் இந்தக் கூட்டத்தின் மையத்தில் வழக்குரைத்து உண்மையை நிலை நாட்டுவோம். எம் தலைவியின் நகைகளை அணிந்திருக்கும் நீயும், எம் தலைவியும் சமானமா?’ என்று இழிவு செய்கிறாள் தோழி.

அப்போது சில முதுபெண்டிர் தலையிட்டுத் தலைவிக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். 'அடியே, இந்தத் தலைவி  தன் கற்பால், பிறர் பாவத்தைப் போக்கும் இயல்புடையவள். உன் பாவத்தையும்கூட. இவளை வழிபடு, பாவத்தைப் போக்கிக்கொள்!

இந்த நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்த தலைவன் நாணித் தலை கவிழ்கிறான். மாற்றாள் தீர்மானமாகச் சொல்கிறாள். 'அது முடியாது. எனக்கு அவள் பகை. நான் அவளுக்குப் பகை. பகைவர்கள் எப்படி வணங்கிக் கொள்ள முடியும்?’

தலைவி இப்போது பேசுகிறாள்.  'நாணமற்று, பாட்டு பாடிக் கொண்டு மத்தளத்தைத் தூக்கி வந்து ஆடுபவளே! என் தந்தை எனக்களித்த வளையும் மாலையும் உன்னிடம் எப்படி வந்தன.  திருடினாயா? திருடவில்லை என்றால், இவற்றை உனக்குக் கொடுத்தவனைச் சொல்..’

'உன் பக்கத்தில் இருப்பவன்தான். உன் புருஷன் எனக்கும் புருஷன். அவன்தான், நான் அவனுக்குத் தந்த புத்துணர்ச்சி இன்பத்துக்கு விலையாகக் கொடுத்தான். ஏன், உன் காலில் இருக்கும் சிலம்பையும், நாளை எனக்குத் தரப் போகிறான். முடிந்தால் அவற்றைக் காப்பாற்றிக்கொள்.’

முதுபெண்டிர் இப்போது தலையிடுகிறார்கள். மாற்றாளை நோக்கி, 'இவள் புருஷன் உனக்குத் தந்தவை, தந்தவைதான். நீ புறப்படு’ என்றார்கள். பிறகு, தலைவியிடம் பேசுகிறார்கள்.
இந்தப் பேச்சு முக்கியமானது. அக்கால இல்லற வாழ்க்கை நெறி வெளிப்படும் இடம் இது.

'பரத்தையிடம் செல்பவனைத் தடுக்க முடியுமா? முடியாது. அதுபோல, பரத்தையிடம் சென்றான் என்பதற்காகக் கணவனை நாம் விலக்கி வைக்க முடியுமா? அதுவும் முடியாது. கணவன் இகழ்ந்து பேசினாலும் கற்புடைய பெண்கள் அவனைப் போற்றி வணங்க வேண்டும். தன்னைப் புறக்கணித்து, தாம் விரும்பிய பரத்தையைச் சேர்கிற கணவனைச் சேர்ந்து வாழமாட்டேன் என்பது பெண்களுக்குச் சாத்தியம் இல்லை. ஒரு சமூகத்தின் குரலைப் பரிபாடல் வையைப் பகுதியை எழுதிய ஆசிரியன் நல்லந்துவனார் எதிரொலிக்கிறார். இத்தனைக்கும் கணவன் அந்த இடத்தில்தான் நிற்கிறான். அவன் குற்றவாளி என்று ஒரு விரல்கூட அந்தக் கூட்டத்தில் சுட்டிக் காட்டவில்லை. குளிக்க வந்த மக்கள் சேற்றைப் பூசிக்கொண்டு, தலைவிக்கு ஆதரவாக, அதனைவிடக் கணவனுக்கே ஆதரவு நிலை எடுக்கிறார்கள்.

அவமானத்துக்கு உள்ளானது மாற்றாள் மட்டும்தான். மாதவி, துறவை மேற்கொள்கிறாள்.

தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு காரணமாகத் தன் மகள் மணிமேகலையையும் வற்புறுத்தி துறவு ஏற்கச் செய்கிறாள். மாதவி என்கிற கலையரசி, அரசு விருது பெற்ற நடனமணி தொலைந்தே போகிறாள். மணிமேகலை, தன்காதலைக் காதலனுக்குச் சொல்ல முடியாமலேயே மறைந்து போகிறாள்.

நன்றி: விகடன்

Last Updated ( Wednesday, 02 September 2015 09:27 )