சார்வாகன் - பிரபஞ்சன்ஹரி சீனிவாசன் என்ற பெயர் கொண்ட மருத்துவ டாக்டர், சார்வாகன் என்ற புனைப் பெயரில் கவனிக்கத்தக்க சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்தார். தாமரை, எழுத்து, ஞானரதம், பிரக்ஞை போன்ற இலக்கிய பத்திரிகைகளில் அவர் கதை கள் வெளிவந்தன. அக்கதைகளுக்கு நான் ரசிகன்.

வாழ்க்கையை, அதன் சமதளத்தில் விசாரியாமல், நுண்தளத்தில் பார்த்து எழுதியவர். அவர் கதைகளின் அடிப்படை பண்பு அங்கதம்.

சார்வாகன் என்ற பெயர், மிகப் பழங்காலத்துத் தத்துவவாதியைக் குறிப்பது. அவன் நாஸ்திகனாக, கடவுள் மறுப்பாளனாக இருந்து அக்காலத்தில் அதிர்வூட்டியவன். வாசகன், அந்தப் பெயரால் கவரப்படக் கூடும். தனி மனித வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் புரையோடிய பொய்மைகளை மிதமான தொனியில், கலை வரம்புக்கு உட்பட்டு எழுதியவர் சார்வாகன்.

‘சின்னூரில் கொடியேற்றம்’ என்று ஒரு கதை. ராமாஞ்ஜுலு நாயுடு என்கிற ‘அந்தக் காலத்து’ காங்கிரஸ்காரர், சுதந்திரத் தினத்தில் கொடியேற்றப் புறப்படுகிறார். அந்தக் காலத்துக் காங்கிரஸ்காரர் என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் இருப்பது வாசகர் களுக்குப் புரியும். அந்தக் காலம் என்பது சுதந்திரத்துக்கு முந்தைய, விடுதலையை முன்வைத்து வீரர்கள் போராடிக்கொண்டிருந்த காலம். அரசியல் என்றால் அடி, சிறை என்பது அர்த்தமாக இருந்த காலம். நாயுடு அப்படிப்பட்டவர்.

ஒரு ஆண்டு சிறை வாசம் அனுபவித்தவர். சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் பொதுத் தேர்தல் வந்த போது, தன்னை வேட்பாளராகக் கட்சி நிறுத்தும் என்று அவர் எதிர்பார்த்தார். என்ன அப்பாவி பாருங்கள், அந்த மனிதர். ரத்தம் சிந்த ஒருத்தன், பதவி சுகம் காண இன்னொருத்தன் என்பதுதானே சுதந்திர இந்தியாவின் நியதி? நாயுடு ஒதுக்கப்பட்டுவிட்டார். என்றாலும் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, சின்னூர் நகரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆக்கப்பட்டுவிட்டார். அந்த ஹோதாவில் கொடி ஏற்றவும் புறப்பட்டுவிட்டார். அவர் மகனுக்கு, இது, இந்த வயசில் அனாவசியமான வேலை என்று தோன்றுகிறது.

ஆனால், நாயுடு நன்மைகளை மட்டும் மேய்ந்து வாழும் சாதுப் பசு. அவர், ‘யோக்யன் எல்லாம் ஒதுங்கிப் போயிட்டா, தேசம் குட்டிச் சுவராய்த்தானே போகும்’ என்று (ஏதோ தேசம் மணிமாளிகையாக இருப்பது போல) பேசுகிறார்.

மார்பளவு காந்தி சிலை. அவரைச் சுற்றி இரும்பு வேலி. காந்தி விரும் பினாலும் சின்னூரைவிட்டு வெளியேற முடியாது. இங்கிலீஷ் பேண்டு காதைத் துளைத்தது. ஒருத்தன், இடது கையால் காந்தியின் நெற்றியில் குங்குமம் பூசுகிறான். நாயுடு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து ‘வெள்ளையனோடு போராடிய நாம் இப்போது விலைவாசி ஏற்றத்தோடு போராடிக்கொண்டிருக்கிறோம்' என்று ஆரம்பிக்கும்போது, பெரும் கூப்பாடு எழுந்தது. ஒருவர் தின்பண்ட விநியோகம் செய்ததைத் தொடர்ந்து கூட்டம் அவருக்கு முன் கை ஏந்திப் பெரும் கூச்சல் செய்தது. வெற்றிகரமாக நாயுடு பேச்சை முடித்துக்கொண்டார்.

மூவர்ண மிட்டாய் வழங்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அந்த பேண்டு மட்டும் திரும்பத் திரும்ப, ‘இட்ஸ் எ லாங் லாங் வே டு டிப்பரேரி’ என்ற ஐரிஷ் பாடலின் முதல் வரியை வாசித்துக்கொண்டிருந்தது.

அழகான சொல்முறையோடு வளர்ந்து அழகாக முடியும் கதை இது. இப்படியான கதைகள் பல சார்வாகனிடம் இருக்கின்றன. பாரதி சுதந்திரத்துக்கு 30 ஆண்டுகளுக்கும் முன் ‘வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று…’ என்று எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. எல்லாம் தாழ்வுற்று என்றார். அரசியல், அறம், பண்பாடு முதலான பல சமூக விழுமியங்களும் தாழ்வுற்றுவிட்ட இந்தியா, அதன் காரணகர்த்தாவான ஆங்கிலேயர் பற்றி பாரதி கவனம் கொள்கிறார். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியா பற்றிப் பாரதி அறியாதது, அவரது பாக்கியம். ஆனால், சார்வாகன் இந்தக் காலத்து எழுத்தாளர். அவர் அதை எழுதுவது அவர் கடமை. மிகக் கூர்மையான தொனியில், ஆனால் கூர்மை தெரியாத விதத்தில் அங்கதத் தொனியில் எழுதி இருக்கிறார். அந்தத் தொனியில் எழுதிய மிகச் சிலரில், முக்கியமானவர்.

தபால்காரக் கதிர்வேலு பற்றிய ஒரு கதை. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஊடாக ஊசலாடும் அப்பாவியின் கதை. சார்வாகனின் வசனத்துக்கு உதாரணமாக சில வரிகள்:

‘தபால்காரக் கதிர்வேலு ரொம்பச் சாதாரணமான மனுஷன்தான். தன் வேலையைத் தனக்குத் தெரிந்த முறையில் நாணயமாகச் செய்து நல்ல பேர் வாங்கி, பெரியதொரு குடும்பத்தைப் பெற்றெடுத்து வளர்த் துக்கொண்டு, நல்லநாள் என்றைக் காவது வராதா என்ற நம்பிக்கையில் ஓட்டிக்கொண்டு தவம் செய்யும் லட்சோபலட்ச ஜனங்களில் அவரும் ஒருவர். அவரைக் குற்றம் சொல்வதற் கில்லை. யாரையும் குற்றம் சொல்வதற் கில்லை. அவர் பிறந்த வேளை அப்படிப் பட்டது போலும். ஆனாலும், நாட்டிலே இருக்கிற முக்காலே மூணு வீசம் ஜனங்களும் அதே வேளையில்தானா பிறந்திருக்க வேணும்!’

சார்வாகன் எத்தனை நம்பிக்கை களை, மரபுகளை, நிறுவனப்பட்ட வாழ்க்கை முறைகளை இடித்துக் கொண்டு நடக்கிறார். நடந்தபடி விதைத் தூவுவது போல எத்தனைகளைத் தூவுகிறார். கிண்டல் இல்லை, நகைச்சுவையும் இல்லை இந்தத் தொனி. நடுத்தர வர்க்கத்தை விமர்சிக் கும் தாட்சண்யத்தோடு கூடிய தொனி அது. சரி, நபர் எப்படி?

கதிர்வேலு, அலுவலகப் பணி போக, ஒழிந்த நேரத்தில் கனவு காண்பார். கனவுகள் காணக் காசு தேவையில்லை. ஆகவே காண்பார். அசாதாரணக் கனவுகள். டார்ஜான் போல பயங்கர மிருகங்கள் மத்தியில் அவர் வாழ்வார். சிந்துபாத் போல, விக்கிரமாதித்த மகாராஜா போல… எல்லம்மாவுக்கு மணியார்டர் வந்திருக்கிறது. வழக்கம் போல அஞ்சு, பத்து இல்லை. சுளையாக ஐநூறு. வடக்கே போன மகன் அனுப்பியது. என்ன துரதிருஷ்டம் எல்லம்மா ‘போய்’ இரண்டு மாதமாயிற்றாம். பாலு நாய்க்கர்தான் சொன்னார். பணமா? மணியார்டரா? பாலுவுக்கு உலகம் வர்ணமயமாகி இருந்தது. கிழவிக்கு இப்போ பணம் எதுக்கு? பணம் கொடுத்துவிட்டாற் போல கணக்குக் காட்டிவிட்டால் என்ன? கதிர்வேலு (சுரத்தின்றி) மறுக்கிறார். இத்தனைக் காலம் மரியாதையான வாழ்க்கையை (அவமரியாதையாக) வாழ்ந்துவிட்டு இப்போது? பாலு நழுவியபடி, ‘நான் தமாஷ்னா பண்ணேன். நமக்கெதுக்கு நாய்ப் பணம்?’ என்கிறார்.

‘நரி, தந்திரமான பிராணி’ என்று மனிதர்கள் பேசுகிறார்கள். எந்த நரி, இன்னொரு நரியை மோசம் பண்ணியது?

கதிர்வேலு, வண்ணமயமான கனவு காண்கிறார். ஐநூறு ரூபாய். வீட்டிலே இருக்கிறவளுக்கு புடவை. குழந்தைகளுக்கு ஆடைகள், சில்லறைக் கடன்கள் தீர்ந்து எத்தனை நிம்மதி. பணம் அனுப்பிய மகன், விபத்தில் மரணம் அடைந்தது என்கிற மணியார்டர் செய்தி, ஒரு பச்சைக்கொடி! பாலு வேறு மூளையில் குதிக்கிறான்.

தபால்காரர், மணியார்டர் படிவத்தை எடுத்து ‘விலாசதாரர் காலமாகிவிட்டார்’ என்று எழுதித் தபால் ஆபீஸை நோக்கி நடக்கத் தொடங்கினார். பணத்தை ஆபீஸில் கட்ட வேணுமே!

சார்வாகனின் புகழ்பெற்ற குறு நாவல் ‘அமரப் பண்டிதர்’. இது, அரசியல் தொடங்கி பல்வேறு தளங்களில் பயணப்பட்டு, ஒரு குள்ள மனிதனை அமரனாக்கி முடிகிறது. தொழுநோய் மருத்துவத்தில் பெரிய நிபுணர் சார்வாகன் என்கிற டாக்டர் சீனிவாசன். அதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர். குறைவாகவே எழுதியவர். அது நல்லதும் கூட. குறைவாக எழுதியதில், நிறைவுடைய பல கதைகள் சார்வாகனின் பலம். மனித இயல்பை, இயல்பாக, பக்கச் சார்பு இன்றி பரிவோடு சொல்ல முயன்று வெற்றியும் கண்ட எழுத்தாளர் சார்வாகன். 1929-ல் பிறந்து மிக அண்மையில்தான் மறைந்தார். தமிழில் மறக்கக் கூடாத எழுத்தாளர் இவர்.

சார்வாகனின் 41 சிறுகதைகள், 3 குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு சார்வாகன் கதைகள் என்ற பெயரில், நற்றினை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

Last Updated ( Monday, 24 October 2016 02:57 )