நண்பர்களே!
 
இந்தியா, பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உட்பட்டுச் சுதந்திரத்துக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, எங்கள் சிறு பூகோளப் பிரதேசமான  புதுச்சேரி (பாண்டிச்சேரி ), பிரஞ்ச் ஆட்சிக்குக் கீழ் வதைபட்டுக் கொண்டிருந்தது. எங்கள் பகுதியிலும் பிரஞ்ச் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மிகுந்த கொந்தளிப்பு மிகுந்த அச்சூழலில் என் தந்தை இந்திய தேசிய காங்கிரசில் ஈடுபாடு  கொண்டு உழைத்தார். 1954 - ல் எங்கள் புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் பெற்றது. அதற்கு முந்தைய 1945 - ல் நான் பிறந்தேன். என் பிறப்புக்கும் புதுச்சேரி சுதந்திரத்துக்கும் சம்பந்தம் இல்லை தான். பிறந்த சுதந்திரத்தை ,அதன் பிரதான  போராட்டக்காரர்களை, புரட்சியாளர்களை, சிந்தப்பட்ட ரத்தத்தை, கொட்டிய வியர்வையை  அர்ப்பணிக்கப் பட்ட தியாகத்தை, தியாகிகளின் கனவுகளை, சுதந்திர அறுவடைக்குப் பிறகு அதன் விளைச்சலைப்  பங்கு போட்டுக்கொள்ள வந்த பதவிப் பதர்களை நான் எழுதினேன் என்பது தான் என் எழுத்து வாழ்க்கையில் காரசாரமான பகுதிகளாக நான் நம்புகிறேன். 

1954 - ல் இந்தியப் பேரரசுடன் இணைந்து, புதுச்சேரி சுதந்திரம் பெற்றபோது ,பிரதமர்  ஜவகர்லால்  நேரு, புதுச்சேரியைப் "பிரஞ்சு கலாச்சாரத்தின்  ஜன்னல்" என்றார். உலகுக்குச் சுதந்திரம், சமாதானம், சகவாழ்வு எனும் மகத்தான மானுடப் பிரகடனம் செய்த பிரஞ்சுக் கலாச்சாரத்தில் சாரலில் நாங்கள் திளைத்தோம். தொடக்கத்தில் போர்ச்சுகீசியர்களாலும், பின்னர் பெரும்பாலும் பிரஞ்சியராலும் உருவாக்கப்பட்ட எங்கள் நகரம் மிக அழகானது. வட்ட வடிவமாக, அது ஒரு பிருமாண்ட கோழி முட்டை வடிவம். எல்லா தெருக்களும் கடலை நோக்கிச் செல்லும். அகன்ற அழகிய தெருக்கள், மழைக் காலத்திலும் சொட்டு நீர் தருவில் தேங்காத அமைப்பு நேர்த்தி.

பக்கத்தில் உள்ள தமிழ் நாட்டுக்காரர்கள், புதுச்சேரி வீதி அழகே தவிர, நீதி அழகில்லை என்பார்கள். இது உண்மை. ஆதிக்க வர்க்கத்தினரிடம் எங்ஙனம் நீதியை எதிர் பார்க்க முடியும்? பிரிட்டனோ, பிரான்சோ, எல்லா ஆதிக்கச் சக்திகளும் எரியும் கொள்ளிகள். எல்லா நெருப்பும் சுடத்தான் செய்யும்.

மிக அழகான எங்கள் ஊர் கடற்கரை, மண்ணையும் விண்ணையும் இணைவிக்கிற 'சப்தம்' பற்றிய புரிதலை எனக்குத் தந்திருக்கிறது. சப்தங்களின் ஒரு அலகு தான் சொற்கள். தரப்படுட்டப்பட்ட ஒசைகளாகிய வார்த்தைக் களஞ்சியத்தை, எங்கள் கடல் காற்றில் இருந்துதான் என் மூளை அடுக்குகளில்  ஏற்றிக்கொண்டிருக்கிறேன். ஐயாயிர ஆண்டு மொழிச் சொற்கள் என் அறிவுக் கிடங்கில், கடற்காற்று மூலம் தான் வந்து படிந்திருக்கிறது. 

எங்கள் புதுச்சேரி தெருக்களில் ஒவ்வொரு அங்குல மண்ணின் வரலாற்றையும் நான் அறிவேன். இதைச் சொல்லியும் எழுதியும் இருக்கிறேன். எனக்கு இது ஒரு ஞான பூமி. இந்த மண்ணின் ஈர்ப்பு விசையால் பாரதியும், அரவிந்தரும் இன்னும் பலப்பல சித்தர்களும் இங்கு வந்து அடைந்தார்கள். எங்கள் வானம், பறவைகளாலும் அவைகளின் பேச்சரவத்தாலும்  நிரம்பி வழிகிறது. வானத்துப் பறவைகளின் சிறகசைப்பில் எழும் காற்றலைச் சுழிப்பைத் தான் நாங்கள் சுவாசிக்கிறோம்.

பிரஞ்சு அரசு, புதுச்சேரியில் தொடங்கி இருந்த தமிழ், பிரஞ்ச், ஆங்கில நூலகம், ஒரு அறிவுச் சுரபி. உலகத்து மொழிகளிலிருந்தெல்லாம் தமிழுக்கு வந்த புத்தகங்கள் அனைத்தையும்  அங்கு தான் நான் படித்தேன். அந்தக் காலத்தில் நான் படித்த மாப்பசான் ,விக்தோர் யூகோ, ஜோலா, தூமாஸ், ஸ்டெக்தால், பிளோ பேர், செகாவ், கோகல், லெர்மந்தோவ், கார்க்கி, உலக இலக்கியச் சிகரங்களாக இன்றும் துலங்கும் தொல்ஸ் தோய், தாங்தாவ்ங்கி முதலான பலரும் என் பதின் பருவத்துக்குள்ளேயே என்னிடம் வந்து சேர்ந்திருந்ததே நான் எழுதும் தொழிழுக்கு வந்ததன் மூல காரணம் என்று இப்போது தோன்றுகிறது. 

என் கல்லூரிப் படிப்பு தஞ்சையில் நிகழ்ந்தது, என் பேறுகளில் ஒன்று. தஞ்சை பிரகாஷ் வழியாக நவீன தமிழ் இலக்கியாசிரியர்களை நான் அறிமுகம் செய்து கொண்டேன்.காவிரிக் கரைக் கலாச்சாரம், தமிழின் மரபார்ந்த சாகைகளில் ஒன்று. அந்தக் கலச்சாரத்தின் செழித்த பங்களிப்பான கர்நாடக இசை என் ஓடும் குருதியில் கலந்து கொண்டது.

இலக்கியத்துக்குப் பிறகு எனக்கு இசையே  பிரதானமான வாழ்விடம். என்னைத் தளிர்க்கச் செய்வன வாசிப்பும், இசை கேட்புமே. இன்னும் என் இயக்கம் தொய்வில்லாது நடக்கிறது என்றால், இன்று வரை தொடர்ந்த  ஒரு தீவிரமான வாசகனாக நான் நீடிக்கிறேன்  என்பதால் தான்.

1961 - ல் என் கதை, கட்டுரை, கவிதையை  அச்சில்  கண்டேன். இலக்கியப் பிரக்ஞையோடு நான் எழுதத் தொடங்கியது 1970 - க்குப் பிறகு தான். சுமார் 300 கதைகள், நாலைந்து நாவல்கள் இருநூருக்கு வரும் கட்டுரைகள் என் பங்களிப்பகத் தமிழுக்குத்  தந்திருக்கிறேன். மிகச் சிறந்த ,ஆகச் சிறந்த  'அந்தப்' படைப்பு ஒரு காலத்தில் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையின் சுடர் என்னுள் எரிந்து கொண்டே இருக்கிறது.

எழுத்து, இசை,கலை,பண்பாடு எல்லாம் மனிதர்களை ஒருவரோடு ஒருவரை இசைவிக்கத்தானே அன்றி வேறு எதற்கும் இல்லை. அன்பால் இணைந்து, அன்பால் புரிந்து கொண்டு அன்பே பிரதானமாக ஒரு உலகத்தை உருவாக்கும் தொழிலையே நான் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மனித குலம் அன்பினால் மட்டுமே தழைக்கும், என்பதே என் செய்தி.