வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இன்று இப்போது எனக்கான இணையதளம் தொடக்கம் காண்கிறது.

எல்லையற்றதும் அகண்டாகாரமும் ஆன வான்வெளிச்சுருள் சங்கேதங்களுள் ஒன்றாக இதுவும் இன்று இணைகிறது.

இது எனக்கான புதிய திறப்பு.

பல்லாண்டுகளாக அச்சு ஊடகத்தின் வழியாகவே உங்களைச் சந்தித்து வந்த நான், இந்த ஊடகத்தின் வழியாக மேலும் பலப்பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு புதிய சக இருதயர்களைக் கண்டுகொண்டு என் நட்பு வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்ளவுமான பேறு கிடைக்கும் என்பதே இந்த முயற்ச்சியின் நோக்கம்.

இந்த ஊடகத்துக்கு நான் முற்றும் புதியவன் இல்லை. அவ்வப்போது இதிலும் நான் பங்கு கொண்டே வந்திருக்கிறேன். இதன் சாதாரணமானுதும் அசாதாரணமானதுமான சக்தியை நான் உணர்ந்தே இருக்கிறேன். அசட்டை, அலட்சியம், அக்கப்போரும் ஒரு பக்கம்  என்றால் ஆழமும் அறிவார்த்தமும் அக்கறைகளுமாக இன்னொரு பக்கமாக எல்லா ஊடகமும் போலவே இதுவும் செயல்படுகிறது.

இதில் இரண்டாம் பக்கமாக, இன்னொரு பக்கமாகச் செயல்படவே ஆசைப்படுகிறேன்.

என் வாசக நண்பர்களோடு குறிப்பாக இளைஞர்களோடு உரையாடவே நான் விரும்புகிறேன். முதலில் இலக்கியம் முதலான வாழ்க்கையோடு தொடர்புடைய கேள்வி பதிலில் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கேள்விகளை எதிர்பார்க்கிறேன்.

நான் படித்தவை, பார்த்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வாருங்கள். நாம் கூட்டாக உரையாடுவோம்!

இறுதியாக நண்பர்களே!

இந்த வலைதள முயற்ச்சியைச் சாத்தியப் படுத்தியதில் என் சிங்கப்பூர் நண்பர், இலக்கிய ஆர்வலர் ஆர். எம். பரணீதரன்  அவர்களை நன்றியுடன் இப்போது நினைவு கூர்கிறேன். இந்த வலைதள முயற்சியில் தொடக்கத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்த என்னைத் தொடர்ந்து வற்புறுத்தி இந்தப் பக்கம் கொண்டு சேர்த்த நண்பர்கள் பிரபாகர், Purple Rain மற்றும் ஆர். எம். பரணீதரன் ஆகியோரின் இடையறாத உழைப்பிற்கும் தூண்டுதலுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

தோழமையுடன்,
பிரபஞ்சன்