மானுடம் வெல்லும்

நாவல்

1735ம் ஆம் ஆண்டு புதுச்சேரியை ஆள்வதற்கு என்று பிரான்சில் இருந்து தூய்மா என்பவன் வந்தான். அந்த ஆண்டு தொடக்கம், அடுத்த ஏழாண்டு புதுச்சேரியின் வரலாறே இந்தப் பதினம். ஆனந்தரங்கப் பிள்ளை, அரசியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கின காலமும் இதுதான். இக்கால கட்டத்து உழைக்கும் மக்களது, நிலச்சுவான்தாரர்களது, அதிகாரிகளினது, தாசிகளினது வாழ்வு எங்ஙனம் இருந்தது என்கிற காலாபூர்வமான, இலக்கிய ரீதியான விமர்சனமே இப்புதினம்.

முதற் பதிப்பு 1990
வெளியீடு
கவிதா பதிப்பகம்

வானம் வசப்படும்

நாவல்

நடந்ததைத் திரும்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே. நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள், என்காலத்து மனிதர்களிடமும் பேசுவதற்கு நிறைய வைத்திருக்கிறார்கள். அவர்களின் மொழி எனக்குக் கை வந்திருக்கிறது. ஆகவே, இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாயிற்று. இக்கதை நிகழ்காலம் 1740 50 என்று வைத்துக் கொள்ளுங்கள். துய்ப்ளெக்ஸ் மற்றும் ஆனந்தரங்கப் பிள்ளையின் இறுதிக்கால நிகழ்ச்சியை இனிதான் நாம் எழுத வேண்டும். அதைத் தொடர்ந்து, எங்கள் புதுச்சேரி மாநிலம், சுதந்திரத்துக்கு என்று எடுத்த போராட்டங்களை, அந்த யுத்தகளத்திலே நின்று சமர் செய்த வீரப் பெருமக்களை மற்றும் துரோகிகளை நான் நாட்டுக்கு இனம் காட்ட வேண்டியிருக்கிறது. செய்வேன்!

முதற் பதிப்பு 1993
வெளியீடு
கவிதா பதிப்பகம்

இன்பக் கேணி

நாவல்

ஜன சமூகம் என்கிற சமூகக் கண்ணி அறுபடாமல் இருக்க. மனிதர்கள், மனிதர்களை உற்பத்தி செய்கிறார்கள். மனிதர்கள் அத்தனை பேருமே, ஒரு விதமாகவே தரிக்கிறார்கள்! ஒரு வழியாகவே ஜனிக்கிறார்கள். என்பு தோல் போர்த்த உடம்பும், நிணமும், குருதியும், எல்லார்க்கும் ஒப்பவே இருக்கின்றன. எனினும் மனிதர்களுக்குள் உயர்வையும் தாழ்வையும் நாம் கற்பிதம் செய்து கொண்டோம். அறம்பொருள் இன்பம்வீடு என்று புருஷார்த்தங்களை நிறையவே ஆராய்ந்தோம் அறிவைப் பெருக்கிக் கொண்டோம். எனினும் நம் ஆத்மாவைப் போஷித்தோமோ என்றால் இல்லை.

முதற் பதிப்பு 1995
வெளியீடு
கவிதா பதிப்பகம்

காகித மனிதர்கள்

நாவல்

விலங்கியல் படித்துவிட்டு, வங்கியில் கூட்டல் கழித்தல் கணக்குப் போடும், பல பட்டதாரி இளைஞர்களை நான் அறிவேன். ஏன் இந்த நிலை? அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, இந்த தேசத்துக்கு எத்தனை டாக்டர்கள் தேவை. எத்தனை பொறியியலாளர்கள் தேவை என்கிற கணக்கு எந்தப் பல்கலைக் கழகத்திடமாவது இருக்கிறதா எனறு கேட்டுப் பாருங்கள். எவரிடமும் இந்த கணக்கும் இல்லை. கண்ணோட்டமும் இல்லை.

முதற் பதிப்பு 1995
வெளியீடு
கவிதா பதிப்பகம்

தீயிலே வளர்சோதி

நாவல்

திருமணம், அதைச் செய்து கொள்பவர்களால் தீர்மானிக்கப்படும் காலம் நோக்கி, விரைவாக நடக்கிறது இந்த வையம் என்று நான் கருதுகிறேன். அது, இருமனம் சேர்தல், ஒன்றாக இருக்கவேண்டும். பெற்றோர்கள், அடிப்படைச் சம்பளம், சாதி, மதம், இனம், தேசம், சட்டம், நீதிமன்றம், காவல்துறை என்ற மனித குலத்தடைகள் எதுவும் அன்றி நிகழ்வுற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பெண் ஆண் இணைவதில் அன்பே முழுமுதலாய் விளங்குவதோடு அவர்கள் பிரிவிலும், அதுவே நிலைபெற வேண்டும். அன்பு காரணமாகவே இணைவதும், அன்பு காரணமாகவே பிரிவதுமான தட்ப வெட்பம் தமிழகத்தை, உலகைத் தழுவுமாக!

முதற் பதிப்பு 1995
வெளியீடு
கவிதா பதிப்பகம்

பூக்களை மிதிப்பவர்கள்

சிறுகதைகள்

அழுகைக் குரல் என்னை மிகவும் துன்புறுத்துகிற ஒன்றாக இருக்கிறது. யார் அழுதாலும் எனக்கு அது சகிக்க முடியாத அனுபவமாகவே இருக்கிறது. மனிதனின் ‘அழுகை‘ அவனது மாபெரும் துர்பாக்கியம். கைவிடப்பட்ட கடைத்தேற முடியாத ஒரு தொய்மையான சந்தர்ப்பத்தில் அழுகை புறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் அழுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் எதன் பொருட்டும் அழக்கூடாது. அழ வைக்கிற சமூகம் குற்றவாளிகளின் சமூகம்.

முதற் பதிப்பு 1996
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

தீவுகள்

நாவல்

நம் இப்போதையக் கவலை வேறாக இருக்கிறது. மனிதர்கள் தீவுகளாகிக் கொண்டிருக்கிறார்கள். நான் தனி, அவன் தனி என்பது அவர்கள் எண்ணமாக இருக்கிறது. நாம், மனித குலம் என்கிற அகண்டத்தின் ஓர் அங்கமே என்கிற எண்ணம் நமக்கில்லை. நம் இன்பமும் துன்பமும், வாழ்வும், வளமும், முன்னேற்றமும் தாழ்வும் ஒட்டுமொத்த மனித குலத்தின் பேறுகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது என்பதை நாம் அறியவில்லை. மூடிய நம் அறைக்குள்ளாகவே நம் உலகம் அடங்கிவிட்டது. என்று நம் அறியாமை காரணமாக நாம் நினைக்கிறோம்.

முதற் பதிப்பு 1996
வெளியீடு
கவிதா பதிப்பகம்
 

 

வசந்தம் வரும்

நாவல்

குடும்பம் என்கிற அமைப்பு என்று உதிரும்? பெண்கள் மேல், கட்டி வைத்திருக்கும் கருத்தியல்களும், பொருள், மற்றும் அரசியல் தடைகளும் இன்று விழுகிற ஒரு சமூக அமைப்பில் மட்டுமே, குடும்பம் என்கிற அமைப்பு உதிரும். ஆனால், குடும்ப அமைப்பை உடனடியாகச் சிதறடிக்க முடியுமா என்றால் முடியாது என்பதும் உண்மை. ஆக, பெண்ணின் ஆளுமையை வளர விடாமல், தடுத்து நிறுத்துகிற குடும்ப அமைப்பின் இரத்த உறவுகளை அறுத்துவிட்டு, மாற்று உறவாக, ‘தோழமை‘யைக் கொள்ளலாம் என்கிற கருத்து, எனக்குச் சரியாகப்படுகிறது.

முதற் பதிப்பு 1996
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

நானும், நானும்... நீயும், நீயும்...

நாவல்

மாப்பிள்ளை, பெண் பார்க்கும் தரகர்கள் அல்லர், தாயும் தந்தையும். அவர்கள் பெற்றோர்கள் மட்டுமேயாவர். ஒரு தாயிடம் இருந்து தாயும், மீனிடமிருந்து மீனும் வருவது மாதிரி, மனிதர்களிடமிருந்து குழந்தைகள். அதனாலேயே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் துணைதேடும் கடமைப்பட்டவர்கள் அல்லர். நல்லது. இந்தக் கதையை 1998ம் ஆண்டு தினத்தந்தி குடும்ப மலரில் தொடர்கதையாக எழுதினேன்.

முதற் பதிப்பு 1998
வெளியீடு
கவிதா பதிப்பகம்
 

 

கண்ணீரால் காப்போம்

நாவல்

ஒரு மாபெரும் புனிதப் போரை, புனிதப் போராளிகளை, தலைவர்களை, நம் கலாச்சாரத்தை இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்பது ஒன்றதான் என் ஆசை. என் விருப்பம். என் அன்னை பூமிக்கு நான் செய்யும் நன்றி இது. புதுச்சேரியின் 300 ஆண்டு கால வரலாற்றை சுமார் 3000 பக்கங்களில் எழுத வேண்டும் என்று தொடங்கினேன். என் “மானுடம் வெல்லும்“ “வானம் வசப்படும்“ இரண்டும் இந்த அடிப்படையில் எழுந்தவை. இப்போது “கண்ணீரால் காப்போம்“

முதற் பதிப்பு 1998
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

பெண்மை வெல்க

நாவல்

நாளை வரலாற்றை உருவாக்குபவர்கள், இன்றைய வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று என்கிற நிகழ்காலத்தை உணர்ந்துகொள்ள ஆசைப்படுபவர்கள். நேற்றைச் சரியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். மூதாதையர்களை அறிந்துகொள்ளாத சமூகம் நாளைய இளைய சமுதாயத்தை எடைபோட முடியாது. இந்தத் தொடர் நேற்றை உணர்ந்தும், இன்றையப் புரியவைக்கும், நாளையைத் தட்டி எழுப்பும்.

முதற் பதிப்பு 1999
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

நீலநதி

நாவல்

இல்லாத ஒன்றை எவருமே கற்பனை செய்துவிட முடியாது. இருப்பதில் இருந்து கிளைப்பதே கற்பனை. ஒரு தலை இருப்பதால் மட்டுமே, பத்து தலை ராவணன் சாத்தியமானான். தலை என்கிற பொருளே உலகத்தில் இல்லாமல் ஆகி இருக்குமானால், பத்து தலை தோன்றி இருக்கவே முடியாது! நெருப்பு, எண்ணெய், கொப்பரை ஆகிய பொருள்கள் கண்டு அடையப்பட்ட பிறகே, ‘நரகம்‘ என்கிற உலகம் பிறந்திருக்கிறது என்பதை யோசித்தால் புரிந்து கொள்ளலாம்.

முதற் பதிப்பு 1999
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

முதல் மழைத்துளி

நாவல்

முரண்களுக்கு எல்லாம் காரணம், நிறுவன எதிர்பார்ப்புகள் மனிதர்களின் சுதந்திரத்தை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன என்பதே யாகும். சட்டம் என்னும் சதுரத்துக்குள்ளே, அல்லது வேலிகளுக்கே தங்கள் செடிகள் வளர வேண்டும் என்று அவைகளின் எதிர்பார்ப்பை, இயற்கை, ஒவ்வொரு கணமும் உடைத்துக் கொண்டே இருக்கிறது. புல், மேன்மை பொருந்திய நீதிபதிகளின், அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருப்பவர்கள் உத்தரவுக்கெல்லாம் அடிபணிவது இல்லை. புல், பாதை ஓரத்தில் கூட, தன்னியல்பாக முளைக்கிறது என்பதுதான் அதன் விசேஷமே.

முதற் பதிப்பு 2000
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

விட்டு விடுதலையாகி

சிறு கதைகள் கதைகள்

மனித உணர்வுகளை எதார்த்தத்தோடு இணைத்துப் பார்க்கும் இவரது எழுத்து, தெளிந்த நீரோடையைப் போன்றது. நல்ல இனியதமிழ், ஆழமான சிந்தனை, அங்கத நடை இவரது சிறப்புகள். இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றிலும், சில ஐரோப்பிய மொழிகளிலும் இவர் கதைகள் மொழி ஆக்கம் பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பில் 11 சிறு கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் படிப்பவர் மனதில் மீண்டும் மீண்டும் அசை போட வைக்கும் திறன் கொண்டவை.

முதற் பதிப்பு 2001
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

சந்தியா

நாவல்

பெண்களால் பிறந்தோம். பெண்களோடு வாழ்கிறோம். எனினும் பெண்களுக்கான நியாயத்தை வழங்கினோமா, என்றால் இல்லை. ஏன்? இது ஆண்களின் உலகம். சட்டங்கள், சமூக மரபுகள், விதிகள், அனைத்தும் ஆண்களால் உருவாக்கப்பட்டவை அல்லவோ? ஆகவே தான் பெண்களுக்கு, இன்னமும் நீதி மறுக்கப்படுகிறது. பெண்ணை, ஒருவனின் தாயாகப் பார்த்திருக்கிறோம். மகளாகப் பார்க்கிறோம். மனைவியாகப் பார்க்கிறோம். எனினும் தனி மனுஷியாகப் பார்த்திருக்கிறோமோ, என்றால் இல்லை. அந்தச் திசையில், ஒரு முயற்சியே இந்தச் ‘சந்தியா‘.

முதற் பதிப்பு 2001
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

ஜீவநதி

நாடகங்கள்

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மூன்று நாடகங்கள், ஒரே புத்தகமாக இத்தலைப்பில் வெளிவந்துள்ளது. மூன்று நாடகங்களிலும் (ஜீவநதி, அகல்யா, முட்டை) மூன்று விதமான பரிமாணங்களில் இன்றைய சமூகத்தின் பொறுப்பின்மையையும், ஆங்காங்கே, விதி விலக்காக ஒரிருவர் சாதனையாளர்களாக, கொள்ளைப் பிடிப்புடன் விளங்குவதை சிறப்பாக, அழுத்தமாக கதாபாத்திரங்களின் வாயிலாக தத்ரூபமாக அமைத்துள்ளார். நல்ல நூலினை வாங்க விரும்பும் புத்தகப் பிரியர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த கருத்தோவியமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே வழியில்லை! ‘ஜீவநதி‘ ‘கல்கி‘ வார இதழில் தொடராக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதற் பதிப்பு 2003
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

பொன் முடிப்பு

கதைகள்

வெகு யதார்த்தமாக மனதைச் சுண்டியிழுக்கும் அற்புதமான பதினொரு கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. எளிய நடையில், புதிய கோணங்களில், சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டும், நூலாசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர், எழுத்தாளர் பிரபஞ்சன் பாராட்டுக்குரியவர். ‘பொன்முடிப்பு‘ எனும் இச் சிறுகதைத் தொகுப்பை வாசக அன்பர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறோம்.

முதற் பதிப்பு 2003
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

பிரபஞ்சன் சிறுகதைகள் -1

பல கதைகளில் பிரபஞ்சன் நேர் கூற்றாகவே பேசுவதும், தன்னையே ஒரு பாத்திரமாக்கி இணைத்துக் கொள்வதும் காவிய மரபின் தொடர்ச்சி போல் நிகழ்கின்றன. இதனால் ஒரு சுய அனுபவ வெளிப்படையாகச் சிறுகதைகள் அமைந்து வாசகனை வசப்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் அல்லது கீ்ழ்த்தட்டு வர்க்கத்தின் வாழ்வியல் அசைவுகளே பிரபஞ்சனின் சிறுகதைகளில் ‘பண்பும் பயனுமாக‘ வடிவெடுத்திருக்கின்றன. அந்நியத் தன்மையின் மாசு படியாததும், சமகால வாழ்வின் ஒற்றையடிப் பாதைகளின் புழுதி படிந்ததுமான பாத்திரங்கள் ஒவ்வொரு கதையிலும் நம்மால் சந்திக்க முடிகிறது.

முதற் பதிப்பு 2004
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

பிரபஞ்சன் சிறுகதைகள் -2

பிரபஞ்சனின் கதை உலகம் அபூர்வ கற்பனைகளால் நிரம்பியதோ, அமானுஷ்யமான பாத்திரங்களால் திணிக்கப்பட்டதோ அல்ல. ஒரு ஞானியின் தொனியில் அவர் எழுத்து பேசுவதே இல்லை. நிதர்சனமான வாழ்க்கைப் பிரவாகத்தை அதன் அலைகளிலும் துளிகளிலும் ஒரு பகுதியாக இருந்து கொண்டே, அதன் ஓட்டத்தோடு தானும் ஓடிக்கொண்டே நம்மையும் தன்னுள் ஐக்கியப்படுத்துகிற கலை பிரபஞ்சனுடையது. ஆலிலையில் படுத்துக்கொண்டே பிரளய வெள்ளத்தில் மிதந்த கண்ணனைப் போலச் சற்றும் விலகிவிடாமல் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி புரண்டு மறிந்து கதை சென்றடையும் இலக்குக்கு வாசகனும் பயணமாகி விடுகிறான்.

முதற் பதிப்பு 2004
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

சுகபோகத் தீவுகள்

நாவல்

ஓர் அருமையான காதலை காதலர்களை சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் பிரித்து வேடிக்கைப் பார்த்தாலும் உண்மையான காதல் ஜெயித்தே தீரும்! என்பதை மையமாகக் கொண்டு பின்னப்பட்டு்ளள அருமையான சமூக நாவல். இந்நாவலில் சமூக அவலங்களை தேவையான அளவுக்கு கலந்து விறுவிறுப்பான கதையோட்டத்தி்ற்கு வழிவகுத்துள்ளார் ஆசிரியர்.

முதற் பதிப்பு 2005
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

நேசம் மறப்பதில்லை

நாவல்

இரவுகள், இங்கு, நகப்பூச்சு மாதிரி கவர்ச்சியாக இருக்கிறது. அழுத்தமாக இருக்கிறது. அதிகக் குளிர் இல்லை. பனிக்கட்டிகள், பாரீசில் விழுவது போல இங்கு விழுவதில்லை. அந்தப் பொழுதிலும் பூங்காவுக்குள் முத்தம் கொடுத்திருக்கும் காதல் ஜோடிகள், இங்கு காணப்படவில்லை. கணவனும் மனைவியும் தெருவிலும், வீட்டுக்குள்ளும் தள்ளியே நடக்கிறார்கள். பேசுகிறார்கள். பழகுகிறார்கள். நிறைய நண்பர்கள் வீட்டுக்கு மாமி அழைத்துப் போனார். எந்தக் கணவனும் தன் மனைவியைக் கட்டி முத்தம் இடவில்லையே ஏன்? அன்பை மனசுக்குள் வைத்துப் பூட்டுவது எதற்காக?

முதற் பதிப்பு 2007
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்

நாவல்

உடம்போடு வாழும் உடம்பர்கள், உடம்பைப் பற்றி எழுதினால் ஏன் சினமுறுகிறார்கள். உடம்பு, உயிரின் புறவெளிப்பாடு என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள். அபத்தங்களால் ஆனதாக இருக்கிறது உலகம். பிரமைகள், தவிப்புகள், தடுமாற்றங்கள், பதற்றங்கள் நம் வாழ்க்கை நடைமுறைகளாகின்றன. வயல் வெளிச்சத்துக்கு மத்தியி்ல் வைக்கோல் மனிதர்கள் நாம் குல்லாய் அணிந்து ஆடைபோர்த்தி நாம் காலம் காலமாக நிற்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த சில கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.

முதற் பதிப்பு 2007
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

காதலெனும் ஏணியிலே...

நாவல்

காதல், உடம்பு என்கிற சட்டத்துக்குள்ளேயே முடங்கிப் போனதால், அதன் எதிர் விளைவாக, பெண்களைக் குறித்த நம் கருத்துகளும், செயல்பாடுகளும் அவர்களின் உடம்பைக் குறித்து மட்டுமே நிலைபெற்று விட்டன. பெண்ணை நாம் மகளாகவும், சகோதரியாகவும், தாயாகவும், மனைவியாகவும் மட்டுமே பார்ப்பதால், அவளைத் தனி மனுஷியாகப் பார்க்கிற பக்குவம் நமக்கு வந்தாலன்றி, அவளுக்குத் தனி மனம், தனி ஆசைகள், தனி அபிப்பிராயங்கள், தனி விருப்பு. வெறுப்புகள், இருக்கக் கூடும் என்று நாம உணர்வது சாத்தியப்படாது.

முதற் பதிப்பு 2007
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

எனக்குள் இருப்பவள்

குறுநாவல்கள்

இத்தொகுதியில் இரண்டு குறுநாவல்கள் அடங்கியுள்ளன. ஒன்று ‘பிறந்த இடம் நோக்கி‘ என்பதாம். எனக்குப் பிடித்த என் கதைகளில் இதுவும் ஒன்று. தமிழில் மிகக் குறைவாகவே அறியப்பட்ட குறுநாவல் என்கிற கலைவடிவம் இதில் மிக நேர்த்தியாக அமைந்திருப்பதாக இலக்கிய வல்லுநர்ககள் அபிப்பிராயப்பட்டார்கள். வாசகர்களில் அறிவார்ந்த பலரும் இச்சிறப்பை எனக்குக் குறிப்பிட்டுக் கூறி இருக்கிறார்கள்.

முதற் பதிப்பு 2008
வெளியீடு
கவிதா பதிப்பகம்

 

 

உள்ளங்கையில் ஒரு கடல்

நாவல்

புகழ்பெற்ற ஒரு சினிமா இயக்குநர் காணாமல் போவதில் தொடங்குகிறது இந்தத் தொடர்கதை. அவனைத் தேடிப் புறப்படுகிறாள் இளம் பத்திரிகையாளர் ஒருத்தி. அவன் உலகமும், உறவும், அவள் தேடலும் தான் கதை. உள்ளங்கையில் ஒரு கடல்... தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்த போதே பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நாவல் என நிரூபணம் செய்யப்பட்டு விட்டது.

முதற் பதிப்பு 2009
வெளியீடு
கவிதா பதிப்பகம்