Events
User registration
article thumbnailநன்றி
இந்த இணைய தள முயற்சியை எனக்கு சாத்தியப்படுத்தி கொண்டிருக்கிற என் இனிய நண்பர் ஆர்.எம். பரணீதரன் அவர்களுக்கு நன்றி!!.                                         -பிரபஞ்சன்
Who is online
We have 3 guests online
Visitors Counter
Visitors:You are visitor number 383028You are visitor number 383028You are visitor number 383028You are visitor number 383028You are visitor number 383028You are visitor number 383028

கட்டுரைகள்

கதாநதி 3: பாக்கியம் சங்கர் - வடசென்னையில் இருந்து ஒரு கலைக் குரல்

 

வடசென்னை என்பதும் மனிதர்கள் அடர்ந்து வாழும் பகுதிதான். என்ன சொன்னேன்? வாழும் பகுதி என்றா? அல்ல. வாழ முயற்சிக் கும் ஊர்தான். ஏனைய ஒரு மற்றும் தென் சென்னைகளின் சிலர் நினைப்பது போல கொசுக்கள், ஈக்கள், மூட்டைகள், பாம்பு தேள்கள் வாழும் ஊர் அல்ல. அங்கும் காதல், அன்பு, துரோகம், மது, வன்முறைகள் என்கிற மனித இலக் கணங்களோடு மானுட விவசாயம்தான் நடந்துகொண்டிருக்கிறது. திருவொற்றி யூர் மண்ணைத் திருநீறு என்றார் ஒரு அடிகள். ஒரு வள்ளலார் அங்கே தருமம் தழைதோங்குகிறது என்றார். அங்கேயும் புல் முளைக்கிறது. பூ பூக்கிறது. அப்புறம் என்ன வழக்கு?

தண்டையார்பேட்டை, வண்ணாரப் பேட்டை முதலான பல பிரதேசங்களில் எனக்குப் பரிச்சயம் உண்டு. என் நண் பர்களான கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் அங்கு தமிழ் முகத்தை நவீனமாக் கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர் களில் முக்கியமானவர் அண்மை வரவு கவிஞரும் எழுத்தாளருமான பாக்கியம் சங்கர். ‘நான் வடசென்னைக்காரன்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுதி, அவசியம் வாசிக்கப்பட வேண்டிய சுயமானம் தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத் தகுந்த படைப்பாக மிளிர்கிறது.

பாக்கியம் சங்கர் யாரை எழுதியிருக் கிறார்? பிச்சைக்காரர்கள் பற்றி, பாலியல் தொழிலாளி பற்றி, காமத் தரகர்கள் பற்றி, கானாக் கலைஞர் பற்றி, காதலர்கள் பற்றி, சுடுகாட்டில் எரியும் பிணத்தருகே காதல்செய்வோர் பற்றி, வேலை முடித்துத் தருவதாகக் கூறி, வியர்வைக் கூலி வாங்கும் அரசியல் தரகர்கள் பற்றி, படிக்க வேண்டிய பையன்களை போஸ்டர் ஒட்டவும் கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் இழிஞர்கள் பற்றி. இந்த உதாரணப் பட்டியல், இந்தக் கட்டுரைத் தொகுதி, ஏதோ வாசகர்களைக் கண்ணீர்த் தொட்டி யில் முக்கிச் சோப்புப் போடும் என எண்ண வேண்டாம். அந்த மனிதர்கள், தங்கள் சோகங்களுக்கு முன் கொண்டாட்டங் களை நிறுத்துகிறார்கள். தங்கள் வதை களுக்கு முன் அன்பை, கருணையை நிறுத்துகிறார்கள். இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு முன் இசையை நிறுத்துகிறார்கள். சாவுப் பாடைகளுக்கு முன் குத்தாட்டம் போட்டு மரணத் தின் முகத்தில் கரி பூசுகிறார்கள். பாக்கியம் சங்கர், இவைகளைத்தான் எழுதுகிறார்.

இல்லாமல்லி, பர்மா பஜாரில் புகழ் கொடி ஏற்றியவள். ஒரு மழைக்காலத்தில் வந்து சேர்கிறாள், கதை சொல்லியின் கடைக்கு. சாம்பல் நிறக் கண்கள். நதியா கம்மல். பாவாடைத் தாவணியில், இரட்டை சடை போட்டு குஞ்சலம் வைத்துக் கட்டியிருந்தாள். சற்றுப் பூசினாற்போல வாகு. தாவணியின் முனையைப் பிழிந்து கொண்டு கதை சொல்லியைப் பார்க்கிறாள்.

‘‘அலோ, சீத்தாராமன் எப்ப வரு வான்?’ என்று இவனிடம் கேட்கிறாள்.

‘‘இன்னைக்கு வரமாட்டார். என்ன விஷயம்?’’

‘‘ம்… வேலையைப் பார்த்துட்டு காசு கொடுக்கல நாதாரி நாயி. காத்தால வரேன்னு சொல்லு. காசு கொடுத்தா வாங்கி வையி… என்ன புரியுதா?’’

இவனுக்குப் புரிகிறது. முதலாளி யும் காசு கொடுத்துச் சென்றார். இல்லா மல்லியும் வந்து வாங்கிக்கொண்டு அதை எண்ணும்போது, இவனைப் பார்த்து ‘‘சாப்டியா?’’ என்கிறாள். ‘‘இல்லை’’ என்கிறான். ‘‘பிரியாணி சாப்பிட்றியா?’’. இப்படித்தான் இவனுக்கும் இல்லா மல்லிக்கும் நட்பு துளிர்க்கிறது. இலாவுக்குப் பிடித்த நடிகர் அர்ஜுன். ஏன்? அவர்தான் தீவிரவாதிகளிடமிருந்து இந்திய தேசத்தைக் காப்பாற்றுகிறார். பிடித்த பாடகர் சந்திரபாபு.

ஒருநாள் உடம்பு சரியில்லை என்று அவனுடன் மருத்துவமனைக்குச் சென்று திரும்பும் வழியில், காவல் நண்பர்களால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப் படுகிறாள். இலா மருந்து சீட்டை காட்டுகிறாள். கடமையே கண் என்று நம்புகிறவர்கள் நம் காவல் சகோதரர்கள். அப்புறம் விடுதலை பெற்று வருகிறாள் இலா. இவனும் அவளும் சரக்கு சாப்பிடுகிறார்கள். அவள் தொடையைக் காட்டுகிறாள். சூடு போட்டு சதை கண்ணிப் போயிருக்கிறது. ஏன் சூடு? சட்ட பரிபாலனத்தில் அப்படி ஒரு விதி இருக்கிறது. காலம் செல்கிறது. இவனுக்குப் பணமுடை. இலாவிடம் கேட்கலாம் என்று தரகருக்குப் போன் செய்கிறான். அப்போதுதான் தெரிகிறது இலா இறந்துவிட்டாள் என்பது. ஆஸ்பத் திரி பிணவறையில் இருந்தவளை இவனும் தரகரும் போய் பார்க்கிறார்கள். ஒரு கஸ்டமரோடு கடலில் குளிக்கப் போயிருக்கிறாள். அலை அவளைக் கொண்டு போயிற்று. ஒரு தொப்பிக்காரர் வருகிறார். ‘‘என்னய்யா, பாடியை நீ வாங்கிக்கிறியா, இல்ல அநாதைப் பொணம்னு ஃபைல் பண்ணிடவா?” என்கிறார். இவனால் அழத்தான் முடிந்தது. அவள் ஒரு காலத்தில் பாடி ஆடிக் காட்டிய சந்திரபாபுவின்

‘பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை/காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை/ மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை/ சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை’

பாடலில் கரைந்து நிற்கிறான் இவன்.

பிச்சைக்காரர்கள் பற்றி பாக்கியம் சங்கர் எழுதியிருக்கிறார். பிச்சைக்காரர் என்றதும் அழுக்கடைந்து, கை கால் களில் பஞ்சு வைத்துக் கட்டிக் குளிக் காமல்… இல்லை. அப்படி இல்லை. வெளுத்த உடையும் புதுக் கைலியுமாக ஜொலிஜொலிப்புமாக இருந்தார் ஒரு பிச்சைக்காரர். பிச்சைக்காரர்கள் பற்றிய ஒரு படத்துக்கு நிஜப் பிச்சைக்காரர் களைத் தேடி அலைகிற குழுவில் நம் கதைசொல்லியும் இருக்கிறார்.

‘‘நடிக்க வர்றீங்களா?’’

‘‘எவ்ளோ தருவே?’’

‘‘மாசம் ஐயாயிரம். சாப்பாடு போட்டு.’’

‘‘ராஜா… இப்படி நிழல்ல உக்காந்து கினு காலாட்டிகினே பத்தாயிரம் ரூவா சம்பாரிச்சிருவேன். என்னைப் போய்க் கஷ்டப்படச் சொல்றியே…’’

இரு கால்களும் இல்லாத இன்னொரு பிச்சைக்காரர். பூக்கட்டும் மனைவி. அவர் பேசுகிறார். ‘‘பிச்சைனு யார்கிட்ட யும் கேக்கறதில்லை. கொடுத்தா வாங்கிக்கிடுவேன். பேத்திக்கு ஏதாச்சும் பண்ணிட்டோம்னா நிம்மதியா போய்ச் சேர்ந்துருவோம்…’’ அப்போது ஒரு பெண் பெரியவரை நோக்கி ஓடி வந்தது. கையில் ஒரு பொட்டலம் இருந்தது.

‘‘தாத்தா, முதலாளியம்மா கொடுத் தாங்க. நீயும் ஆயாவும் சாப்டுங்க, தேடுவாங்க. நான் போறேன்.’’

பாக்கியம் சங்கர் எழுதுகிறார்: ‘துள்ளிக் குதித்து வந்து தாத்தாவிடம் கொடுத்த அந்தப் பொட்டலத்தில் அவள் அன்பைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்…’

அந்தப் பெண்ணின் பெயர் மோஸம். பருவநிலை என்று அதற்கு அர்த்தம். சில மாதங்களுக்குப் பிறகு, சங்கர் அந்த இடத்துக்குச் செல்கிறார். விசாரிக்கிறார். பெரியவர் சாலையைக் கடக்கும்போது விபத்தில் இறந்துபோனார். மனைவி, மோஸம் என்கிற பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கு போனாள்? தெரியவில்லை.

சங்கர் இப்படி எழுதுகிறார்: ‘திரும்ப நடந்தேன். கையில் பொட்டலத்தோடு ஓடிவந்த மோஸத்தின் முகம் திரும்பத் திரும்ப வந்து போனது. மோஸம் இப் போது எங்கே இருப்பாள்? அவளுக்கு யாரைத் தெரியும்? வாழ்வின் சகல அவஸ்தைகளோடும் வாழ்ந்துகொண் டிருந்த அந்த எளிய ஜீவன்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? மோஸம் என்றால் பருவநிலை. ஏதாவ தொரு பருவநிலையில் மோஸத்தைப் பார்த்துவிட மாட்டேனா..?’

பாக்கியம் சங்கரின் மொழி, அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகு டையதாக இருக்கிறது. அசலான மனிதர் களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது. செய்யும் பணியில் தம்மை ஒப்புக் கொடுத்து, உண்மைகளை முன்வைத்து இயங்குகிறபோது, எழுத்து எழுதுபவர் நகங்களைப் போல உடம்பின் உறுப் பாகவே மாறிவிடும். சங்கருக்கு மாறியிருக்கிறது.

‘நான் வடசென்னைக்காரன்’ என்னும் இத்தொகுதி பாக்கியம் சங்கருக்கு சரி யான முகத்தையும், அடையாளத்தையும் கொடுத்திருகிறது. ‘பாவைமதி’ புத்தக வெளியீட்டு நிறுவனம் முதல் முயற்சியாக இப்புத்தகத்தை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

நன்றி: தமிழ் இந்து

 

கதாநதி 2: சார்வாகன் - வீழ்ச்சிகளை எதிர்த்த மேன்மை

சார்வாகன் - பிரபஞ்சன்ஹரி சீனிவாசன் என்ற பெயர் கொண்ட மருத்துவ டாக்டர், சார்வாகன் என்ற புனைப் பெயரில் கவனிக்கத்தக்க சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்தார். தாமரை, எழுத்து, ஞானரதம், பிரக்ஞை போன்ற இலக்கிய பத்திரிகைகளில் அவர் கதை கள் வெளிவந்தன. அக்கதைகளுக்கு நான் ரசிகன்.

வாழ்க்கையை, அதன் சமதளத்தில் விசாரியாமல், நுண்தளத்தில் பார்த்து எழுதியவர். அவர் கதைகளின் அடிப்படை பண்பு அங்கதம்.

சார்வாகன் என்ற பெயர், மிகப் பழங்காலத்துத் தத்துவவாதியைக் குறிப்பது. அவன் நாஸ்திகனாக, கடவுள் மறுப்பாளனாக இருந்து அக்காலத்தில் அதிர்வூட்டியவன். வாசகன், அந்தப் பெயரால் கவரப்படக் கூடும். தனி மனித வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் புரையோடிய பொய்மைகளை மிதமான தொனியில், கலை வரம்புக்கு உட்பட்டு எழுதியவர் சார்வாகன்.

‘சின்னூரில் கொடியேற்றம்’ என்று ஒரு கதை. ராமாஞ்ஜுலு நாயுடு என்கிற ‘அந்தக் காலத்து’ காங்கிரஸ்காரர், சுதந்திரத் தினத்தில் கொடியேற்றப் புறப்படுகிறார். அந்தக் காலத்துக் காங்கிரஸ்காரர் என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் இருப்பது வாசகர் களுக்குப் புரியும். அந்தக் காலம் என்பது சுதந்திரத்துக்கு முந்தைய, விடுதலையை முன்வைத்து வீரர்கள் போராடிக்கொண்டிருந்த காலம். அரசியல் என்றால் அடி, சிறை என்பது அர்த்தமாக இருந்த காலம். நாயுடு அப்படிப்பட்டவர்.

ஒரு ஆண்டு சிறை வாசம் அனுபவித்தவர். சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் பொதுத் தேர்தல் வந்த போது, தன்னை வேட்பாளராகக் கட்சி நிறுத்தும் என்று அவர் எதிர்பார்த்தார். என்ன அப்பாவி பாருங்கள், அந்த மனிதர். ரத்தம் சிந்த ஒருத்தன், பதவி சுகம் காண இன்னொருத்தன் என்பதுதானே சுதந்திர இந்தியாவின் நியதி? நாயுடு ஒதுக்கப்பட்டுவிட்டார். என்றாலும் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, சின்னூர் நகரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆக்கப்பட்டுவிட்டார். அந்த ஹோதாவில் கொடி ஏற்றவும் புறப்பட்டுவிட்டார். அவர் மகனுக்கு, இது, இந்த வயசில் அனாவசியமான வேலை என்று தோன்றுகிறது.

ஆனால், நாயுடு நன்மைகளை மட்டும் மேய்ந்து வாழும் சாதுப் பசு. அவர், ‘யோக்யன் எல்லாம் ஒதுங்கிப் போயிட்டா, தேசம் குட்டிச் சுவராய்த்தானே போகும்’ என்று (ஏதோ தேசம் மணிமாளிகையாக இருப்பது போல) பேசுகிறார்.

மார்பளவு காந்தி சிலை. அவரைச் சுற்றி இரும்பு வேலி. காந்தி விரும் பினாலும் சின்னூரைவிட்டு வெளியேற முடியாது. இங்கிலீஷ் பேண்டு காதைத் துளைத்தது. ஒருத்தன், இடது கையால் காந்தியின் நெற்றியில் குங்குமம் பூசுகிறான். நாயுடு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து ‘வெள்ளையனோடு போராடிய நாம் இப்போது விலைவாசி ஏற்றத்தோடு போராடிக்கொண்டிருக்கிறோம்' என்று ஆரம்பிக்கும்போது, பெரும் கூப்பாடு எழுந்தது. ஒருவர் தின்பண்ட விநியோகம் செய்ததைத் தொடர்ந்து கூட்டம் அவருக்கு முன் கை ஏந்திப் பெரும் கூச்சல் செய்தது. வெற்றிகரமாக நாயுடு பேச்சை முடித்துக்கொண்டார்.

மூவர்ண மிட்டாய் வழங்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அந்த பேண்டு மட்டும் திரும்பத் திரும்ப, ‘இட்ஸ் எ லாங் லாங் வே டு டிப்பரேரி’ என்ற ஐரிஷ் பாடலின் முதல் வரியை வாசித்துக்கொண்டிருந்தது.

அழகான சொல்முறையோடு வளர்ந்து அழகாக முடியும் கதை இது. இப்படியான கதைகள் பல சார்வாகனிடம் இருக்கின்றன. பாரதி சுதந்திரத்துக்கு 30 ஆண்டுகளுக்கும் முன் ‘வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று…’ என்று எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. எல்லாம் தாழ்வுற்று என்றார். அரசியல், அறம், பண்பாடு முதலான பல சமூக விழுமியங்களும் தாழ்வுற்றுவிட்ட இந்தியா, அதன் காரணகர்த்தாவான ஆங்கிலேயர் பற்றி பாரதி கவனம் கொள்கிறார். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியா பற்றிப் பாரதி அறியாதது, அவரது பாக்கியம். ஆனால், சார்வாகன் இந்தக் காலத்து எழுத்தாளர். அவர் அதை எழுதுவது அவர் கடமை. மிகக் கூர்மையான தொனியில், ஆனால் கூர்மை தெரியாத விதத்தில் அங்கதத் தொனியில் எழுதி இருக்கிறார். அந்தத் தொனியில் எழுதிய மிகச் சிலரில், முக்கியமானவர்.

தபால்காரக் கதிர்வேலு பற்றிய ஒரு கதை. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஊடாக ஊசலாடும் அப்பாவியின் கதை. சார்வாகனின் வசனத்துக்கு உதாரணமாக சில வரிகள்:

‘தபால்காரக் கதிர்வேலு ரொம்பச் சாதாரணமான மனுஷன்தான். தன் வேலையைத் தனக்குத் தெரிந்த முறையில் நாணயமாகச் செய்து நல்ல பேர் வாங்கி, பெரியதொரு குடும்பத்தைப் பெற்றெடுத்து வளர்த் துக்கொண்டு, நல்லநாள் என்றைக் காவது வராதா என்ற நம்பிக்கையில் ஓட்டிக்கொண்டு தவம் செய்யும் லட்சோபலட்ச ஜனங்களில் அவரும் ஒருவர். அவரைக் குற்றம் சொல்வதற் கில்லை. யாரையும் குற்றம் சொல்வதற் கில்லை. அவர் பிறந்த வேளை அப்படிப் பட்டது போலும். ஆனாலும், நாட்டிலே இருக்கிற முக்காலே மூணு வீசம் ஜனங்களும் அதே வேளையில்தானா பிறந்திருக்க வேணும்!’

சார்வாகன் எத்தனை நம்பிக்கை களை, மரபுகளை, நிறுவனப்பட்ட வாழ்க்கை முறைகளை இடித்துக் கொண்டு நடக்கிறார். நடந்தபடி விதைத் தூவுவது போல எத்தனைகளைத் தூவுகிறார். கிண்டல் இல்லை, நகைச்சுவையும் இல்லை இந்தத் தொனி. நடுத்தர வர்க்கத்தை விமர்சிக் கும் தாட்சண்யத்தோடு கூடிய தொனி அது. சரி, நபர் எப்படி?

கதிர்வேலு, அலுவலகப் பணி போக, ஒழிந்த நேரத்தில் கனவு காண்பார். கனவுகள் காணக் காசு தேவையில்லை. ஆகவே காண்பார். அசாதாரணக் கனவுகள். டார்ஜான் போல பயங்கர மிருகங்கள் மத்தியில் அவர் வாழ்வார். சிந்துபாத் போல, விக்கிரமாதித்த மகாராஜா போல… எல்லம்மாவுக்கு மணியார்டர் வந்திருக்கிறது. வழக்கம் போல அஞ்சு, பத்து இல்லை. சுளையாக ஐநூறு. வடக்கே போன மகன் அனுப்பியது. என்ன துரதிருஷ்டம் எல்லம்மா ‘போய்’ இரண்டு மாதமாயிற்றாம். பாலு நாய்க்கர்தான் சொன்னார். பணமா? மணியார்டரா? பாலுவுக்கு உலகம் வர்ணமயமாகி இருந்தது. கிழவிக்கு இப்போ பணம் எதுக்கு? பணம் கொடுத்துவிட்டாற் போல கணக்குக் காட்டிவிட்டால் என்ன? கதிர்வேலு (சுரத்தின்றி) மறுக்கிறார். இத்தனைக் காலம் மரியாதையான வாழ்க்கையை (அவமரியாதையாக) வாழ்ந்துவிட்டு இப்போது? பாலு நழுவியபடி, ‘நான் தமாஷ்னா பண்ணேன். நமக்கெதுக்கு நாய்ப் பணம்?’ என்கிறார்.

‘நரி, தந்திரமான பிராணி’ என்று மனிதர்கள் பேசுகிறார்கள். எந்த நரி, இன்னொரு நரியை மோசம் பண்ணியது?

கதிர்வேலு, வண்ணமயமான கனவு காண்கிறார். ஐநூறு ரூபாய். வீட்டிலே இருக்கிறவளுக்கு புடவை. குழந்தைகளுக்கு ஆடைகள், சில்லறைக் கடன்கள் தீர்ந்து எத்தனை நிம்மதி. பணம் அனுப்பிய மகன், விபத்தில் மரணம் அடைந்தது என்கிற மணியார்டர் செய்தி, ஒரு பச்சைக்கொடி! பாலு வேறு மூளையில் குதிக்கிறான்.

தபால்காரர், மணியார்டர் படிவத்தை எடுத்து ‘விலாசதாரர் காலமாகிவிட்டார்’ என்று எழுதித் தபால் ஆபீஸை நோக்கி நடக்கத் தொடங்கினார். பணத்தை ஆபீஸில் கட்ட வேணுமே!

சார்வாகனின் புகழ்பெற்ற குறு நாவல் ‘அமரப் பண்டிதர்’. இது, அரசியல் தொடங்கி பல்வேறு தளங்களில் பயணப்பட்டு, ஒரு குள்ள மனிதனை அமரனாக்கி முடிகிறது. தொழுநோய் மருத்துவத்தில் பெரிய நிபுணர் சார்வாகன் என்கிற டாக்டர் சீனிவாசன். அதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர். குறைவாகவே எழுதியவர். அது நல்லதும் கூட. குறைவாக எழுதியதில், நிறைவுடைய பல கதைகள் சார்வாகனின் பலம். மனித இயல்பை, இயல்பாக, பக்கச் சார்பு இன்றி பரிவோடு சொல்ல முயன்று வெற்றியும் கண்ட எழுத்தாளர் சார்வாகன். 1929-ல் பிறந்து மிக அண்மையில்தான் மறைந்தார். தமிழில் மறக்கக் கூடாத எழுத்தாளர் இவர்.

சார்வாகனின் 41 சிறுகதைகள், 3 குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு சார்வாகன் கதைகள் என்ற பெயரில், நற்றினை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

Last Updated ( Monday, 24 October 2016 02:57 )

 

கதாநதி 1: சூடாமணி - உளவியல் கலைஞர்

வளர்ப்புப் பூனை வீட்டுக்குள் சாவதானமாக, எப்பக்கமும் திரும்பாது நடந்து வந்து, நீங்கள் அமர்ந்திருக்கும் சோபாவின் மேல் தாவி ஏறி, உங்கள் மடியில் தலை வைக்கும்போதுதான் பூனையையே நீங்கள் பார்ப்பீர்கள். பூனை சத்தம் எழுப்பாது. அறிவுக்கும் ஞானத்துக்கும் சத்தம் சத்ருவாகவே இருக்கிறது. மனம், இன்னொரு மனதைச் சத்தம் போட்டுக்கொண்டு தொடுவதில்லை. மவுனம் என்ற சக்திவாய்ந்த மொழியை நாம் அறிவோமே!

எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் (1931 2010) கதைகள் , தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் முக்கியமான இடம் வகிப்பவை. சூடாமணியின் கதைகள் தமிழ், இந்திய விழுமியங்களின் வேர்களின் நிலை கொண்டு, மாற்றங்களை உட்செரித்துக் கொண்டு வெறுப்புகள் இல்லாத மனோ நிலைகளைக் கட்டமைக்கும் தத்துவப் பார்வை கொண்டவை. சத்தம் போட்டு பேசாதவை. பூனையின் காலடிகள் சத்தம் எழுப்புவதில்லை.

சூடாமணியின் தோள் பையில் பல உலகங்கள். அவரது கைவிரல்கள் போல அவருக்கு நெருக்கமானவை. அதில் ஒன்று குழந்தைகளின் அற்புத உலகம்.

யமுனா, கந்தனுடன் பாண்டி ஆடிக் கொண்டிருக்கிறாள். அம்மா, காரடையான் நோன்புக்கான சரடு கட்டிக்கொள்ள அழைக்கிறாள். ‘எனக்கு எதுக்கு சரடு’ என்கிறாள் யமுனா.

‘‘நல்ல புருஷன் கிடைத்து, அவன் ஷேமமாக இருப்பான். அதுக்குத்தான்.’’

‘‘எனக்கு எட்டு வயசுதானே ஆகிறது. அக்காக்கள் கல்யாணம் ஆனவர்கள். அவர்கள் கட்டிகிடட்டுமே.’’

கடைசியில் யமுனா, கட்டிக்கொள்ள வேண்டி இருந்தது. அவளுடைய சினே கிதன் கந்தனுக்கு உடம்பு திடுமென சரியில்லாமல் போயிற்று. நாளுக்கு நாள் நோய் முற்றிப் படுத்த படுக்கையானான். கந்தனின் தந்தையிடம் அவள் தாத்தா மருந்து கொடுத்துக் கந்தனுக்குத் தரச் சொன்னார். யமுனாவின் அப்பா, இங் கிலீஷ் டாக்டரை ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அம்மா, நாட்டு வைத்தியரை அழைக்கச் சொன்னாள். பாட்டி, திருப் பதிக்கு வேண்டச் சொன்னாள். யமுனா யோசித்தாள். அவள் கையில் கட்டிய சரடு அவளுக்குப் புதிய எண்ணத் தைக் கொடுத்தது. அவள், கந்தனுக்கு மனைவி ஆகிவிட்டால் புருஷனை சரடு காப்பாற்றிவிடுமே! அவள் பெருமா ளிடம் ‘நான் கந்தனைக் கல்யாணம் பண் ணிக்கொள்கிறேன். என் வரப் போகிற புருஷனைக் காப்பாற்றிவிடு’ என்று வேண்டிக்கொள்கிறாள். கந்தன் பிழைத் துக் கொண்டான். மருந்து, இங்கிலீஷ் டாக்டர், நாட்டு வைத்தியர், வெங்கடா சலபதி எல்லோருமே கந்தன் பிழைத்த துக்கு உரிமை கொண்டாடினார்கள்.

யமுனா பெருமிதப் புன்னகைப் பூத் தாள். அவளுக்குத் தெரியும், கந்தன் பிழைத்தது எப்படி என்று. அவள் பெரு மாளை மகிழ்ச்சியோடும் நன்றியோடும் நினைத்து, ‘உனக்குப் பாண்டி ஆடத் தெரியுமா? தெரிந்தால், வாயேன் உன்னை முதலில் ஆட விடுகிறேன்’ என்று பெருமாளை ஆட அழைக்கிறாள்.

தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ தரத்தில் சூடாமணி, குழந்தைகள் பற்றிய பல கதைகள் எழுதியிருக்கிறார். குழந்தை களின் நீள அகலம் பற்றி, படிப்பு பற்றிக் கவலைப்படும் பெற்றோர் அவர்களின் உலகத்துக்குள் பிரவேசித்து அவர்களின் அசலான அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே இல்லை என்பது சூடாமணி யின் கவலை.

ஐம்பது அறுபதுகளில் பெண்கள் உயர் கல்வி பெறுவதில் அத்தனை சிரமம் இல்லை. கல்வி, அத்துடன் வேலை வாய்ப்பு, உலக அறிவு, பொருளாதாரச் சுதந்திரம் என்பது போன்ற பல கதவுகள் பெண்களுக்குத் திறந்து வைக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றோர் பொறுப்பிலிருந்து, காதல் மற்றும் கல் யாணத் தேர்வுகள் பெண்களின் சுதந்திரப் பரப்புக்குள் வந்து சேர்ந்தன. முன்னேற் றம் நோக்கிய இந்தச் சமூக மாறுதலைச் சூடாமணி மிக கவனமாக தன் கதைகளில் கையாண்டார். அவரது மிகச் சிறந்த கதைகளின் ஒன்று ‘நான்காம் ஆசிரமம்.’ அக்காலத்தில் (1972) மிகப் பெரிய தாவலை நிகழ்த்திக் காட்டியது.

தன் மனைவி சங்கரியை மயானத்தில் எரித்து, துயரத்தோடு திரும்பி நடக்கிறார் புரொஃபஸர் ஞானஸ்கந்தன். அப்போது சங்கரியின் முன்னாள் கணவன் மூர்த்தியைப் பற்றியும், அவளுடைய முதல் கணவனும் முதல் காதலனுமான மனோகரனைப் பற்றியும் உரையாடு கிறார்கள். பதினாறு வயதில் காதல் என்று எதையோ எண்ணிக்கொண்டு மனோகரனைத் திருமணம் செய்து கொள்கிறாள் சங்கரி. அத்திருமணத்தை வாழ்த்தியவர் அவள் தந்தையின் நண்பரான பேராசிரியர் ஞானஸ்கந்தன். பின்னர், மூர்த்தியைக் கைப் பிடிக்கிறாள். இரண்டு குழந்தைகளைப் பெறு கிறாள். திடுமென அதையும் துறந்து, 58 வயதான பேராசிரியரை ‘விரும்பு கிறேன்’ என்று சொல்லித் திருமணமும் செய்துகொள்கிறாள். பிறகு, அவரிடம் இருந்து விவாகரத்து கேட்கிறாள். பேரா சிரியர் விவாகரத்து கொடுக்கவில்லை. ஏன் எனில், அவர் அவளைத் துறக்க விரும்பவில்லை. சங்கரி, தன் முடிவைத் தானே தேடிக்கொள்கிறாள்.

பதினாறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட பருவம் சார்ந்ததும் கனவு சார்ந்ததும் ஆன, வசீகரத் துளிர்ப்பில் மனோகரன் அவள் காதலன் ஆனான். கனவு கலைந் தது. பின், அவள் உடம்பு அவளிடம் யாசிக்கிறது. அவள் மூர்த்தியை மணந்து இரண்டு குழந்தைகளையும் பெறு கிறாள். பின்னர், உடம்பு எல்லாம் ஒன்று மில்லை என்ற புரிதலில் அறிவும் ஞான மும் அவளை அழைத்துச் சென்று பேராசிரியரிடம் சேர்க்கிறது. அவர்கள் புத்தகம், வாசிப்பு, தத்துவம் என்று உலகை விசாலிக்கிறார்கள். அதே சமயம், சங்கரிக்கு றெக்கை துளிர்க் கிறது. பேராசிரியருக்கோ சங்கரியோடு சேர்ந்த வாழ்க்கை வேர்விட்டுப் பூமிக் குள் பிரவேசிக்கிறது. ‘மனிதர் தனியாகத் தானே வந்தோம். தனியாகத்தானே போக வேண்டும். தனிமைதானே நிரந்தரம். எனக்குத் தனிமை வேண்டும்’ என்கிறாள் சங்கரி. பேராசிரியர் அவளைப் பிரிய மறுக்கிறார். அவள் நிரந்தரமாகப் பிரிந்தே போகிறாள்

சங்கரியின் வளர்ச்சியை ஆசிரமம் என்கிறார் சூடாமணி. பிரமச்சரியம், இல்லறம், துறவு, வானப்பிரஸ்தம் என்பது போல, இது சங்கரிக்கு ஏற்பட்ட ஆசிரமம். தனியாக இருந்து பூரணம் பெற நினைக்கிறாள் அவள். அவளுக்கு அவள் போதும், அவள் அவளோடு மட்டும் உரையாடி, உறவாடி தன்னுள் இருக்கும் சங்கரியைக் காண அவள் விரும்புகிறாள்.

தனியாக இருப்பது, தனியாக வாழ்வது சிரம அனுபவமாகவே இருக்கிறது. பறவைகளை தவளைகள் விரும்புவதில்லை.

இது பால் தொடர்பான கதை இல்லை. வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்கலாம். இது வேதாந்தமும் இல்லை. ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையுடன் இக்கதையை பேசுகிறார்கள். அக்கதை, அக்காலத்தில் பெரிய உரையாடலை ஏற்படுத்தியது. இக்கதை, அக்காலத்தில் பெரிய விவாதங்களை எழுப்பியது. எனினும், கலை, நுணுக்கம், சமூக அவதானம், இலக்கியத் தரம் என்ற வகையில் ‘நான்காம் ஆசிரமம்’ கதை தமிழில் நிலைத்திருக்கும். ஜெயகாந்தன் கதை உடம்பின் பிரச்சினை பற்றிப் பேசுகிறது. சூடாமணியின் கதையோ, உடம்பைக் கடப்பதைப் பேசுகிறது.

1954 தொடங்கி 2004 வரை சுமார் 574 சிறுகதைகள் எழுதியிருக்கிறார் சூடாமணி. வெளி உலக அனுபவங்கள் அவருக்குக் குறைவு. அக வெளியை நிறைத்துக்கொண்டு, மனித மனசஞ் சாரங்களில் எழுத்துப் பயணம் செய்தார். அவரைப் போன்ற சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள் தனித்திருப்பது அரிது. ஆனால் சூடாமணி அன்பில் களித்தார். அறிவிலும் ஞானத்திலும் உள்ளொளிப் பெருக்கிக் கொண்டர்.

1967-ல் சூடாமணி ‘நீயே என் உலகம்’ என்று ஒரு கதை எழுதினார். அதில், ஒருவனுக்குப் பெரும் செல்வம் கிடைக்கிறது. அதை ஏற்கலாம் என்று யோசிக்கிறான். தன்னுடையதல்லாத அதை எப்படி செலவழிப்பது என்றும் நினைக்கிறான். கடைசியில் அறப்பணிக்கு நன்கொடை அளிக்கிறான். ‘‘பணத்தைக் கொடுத்து பொருள் வாங்குவார்கள். நான் சமர்த்தனான வியாபாரி. நான் பணம் கொடுத்து இளம் முகங்களின் புன்னகையை வாங்கப் போகிறேன்’’ என்கிறான்.

சூடாமணி 2010-ல் காலமானபோது, பல கோடி ரூபாய் அறச் செயலுக்கு அளித்துச் சென்றார். அவரால் பலன் பெறும் மாணவர்கள், மருத்துவப் பயனாளிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூனையின் இயல்பு மென்மையானது. ஆனால் இருப்பு வலிமையானது.

கதைகள், கற்பனைகள் என்று நாம் சொன்னாலும், அவற்றைப் படைத்தவர்களையே அவை இனம் காட்டுகின்றன. கதைகள் கண்ணாடிகள். எழுதியவர்களின் முகத்தையே அவை காட்டுகின்றன. கண்ணாடிகள் பொய் சொல்வதில்லை.

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்  

 

கதை மழை-4 இரண்டாவது மனைவிமார்கள்

 என் பிழைப்பு அறியாது

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

(சிலம்பில் மாதவி)

மழைக்கண் அம்மா அரிவை

நெய்யொரு துறந்த மை இருங்கூந்தல்...

(புறநானூறு)

முதல் வரிகள் கோவலன் பிரிவை அறிந்தபோது எல்லையற்ற துயரத்தோடு மாதவி எழுதிய கடித வரிகள்.  'அடிகளே.  உம் திருவடிகளில் நான் வீழ்ந்து வணங்குகிறேன். நான் எழுதுபவை தெளிவற்ற சொற்கள் என்றாலும் தாங்கள் மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும். உம் தாய் தந்தையர் முதுமைப்பருவம் அடைந்தவர்கள். அவர்களுக்குத் தொண்டு செய்வதைத் துறந்து விட்டீர்கள். நல்ல குலத்தில் பிறந்த உம் மனைவியுடன் நள்ளிரவில் வெளியேறினீர்கள். (என்னிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினீர்கள்!) நான் செய்த பிழை என்ன? என் துன்பத்தைப் போக்குவீர்களாக. பொய்யைத் தவிர்த்து உண்மையையே காணும் பெரியவர் தாங்கள்...’

எவ்வளவு நுட்பமான உரையாடல். நான் என்ன குற்றம் செய்தேன் என்று மாதவி கேட்கும் கேள்வி, கோவலன் பதில் அளிக்க முடியாதது. எந்தக் காலத்திலும் அவனாலும் அவனைப் போன்றவர்களாலும் பதில் அளிக்க இயலாத வினா இது. கோவலனே தேடி வந்தான். மாதவி வீட்டில் உண்டு உறங்கினான். திடுமென ஒரு நாள் நினைத்துக் கொண்டு 'மாயப்பொய்க்காரி, சாகசக்காரி, நடிகை’ என்று அவதூறுகளை வாரித் தூற்றிவிட்டு திருடன்போல இருட்டில் வெளியேறுகிறான். இரண்டு, மிகக் கூர்மையான அஸ்திரங்களை அவன் மேல் விடுக்கிறாள் மாதவி. வெளித் தோற்றத்தில் பணிவு, வணக்கம் எல்லாம் தென்பட்டாலும், மூடிய கைகளில் ஆயுதம் மறைந்திருக்கிறது. நல்ல குலத்தில் பிறந்தவள் அல்லவா, உன் மனைவி என்கிற அங்கதம், பொய் தீர்ந்த ஒழுக்கவாதியல்லவா நீ என்கிற விமர்சனம். மாதவி, கோவலனை விடவும் புத்திசாலி. மேலும் அவள் கலையரசி!

இரண்டாவது, புறநானூற்று வரிகள். பேகன், வள்ளல்களில் ஒருவன். மயில் ஆடியதைக் கண்டு, குளிரால் நடுங்குவதாக நினைத்து தன் போர்வையை மயிலுக்குப் போர்த்திய கொடை மனம் படைத்தவன். அவன், தன் மனைவியைப் பிரிந்து வேறு ஒருத்தியுடன் சிநேகம் கொண்டு அவள் வீட்டிலேயே தங்கிவிட்டான். மனைவி கண்ணகி (இவள் பெயரும் கண்ணகிதான்!) ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாள். புலவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பேகனிடம் சென்று, 'இது நியாயம் அல்லவே. குடிமக்கள் குறை தீர்க்கும் மன்னவன், மனைவியைத் துயரம் செய்வது என்ன முறை?’ என்று தட்டிக் கேட்டார்கள். தமிழ்ப்புலவர்கள் சும்மா புகழ்வதும், பலன் பெறுவதுமாக வாழ்ந்தார்கள் என்பது தவறு. கணவன் மனைவி அகப்பிரச்னைகளையும் பொதுப்பிரச்னையாகக் கண்டு பேசியவர்களும் கூட, தமிழ்ப்புலவர்களே!
 
காட்டு மயிலுக்குப் போர்வை கொடுத்தவனை, வீட்டு மயிலுக்கு ஏன் தீயை வழங்குகிறாய் என்று கேட்கிறார்கள் அவர்கள்.

மாதவி, கோவலனின் மனைவிக்குப் பின், சேர்ந்தவள். கண்ணகியோ, பேகனின் மனைவியாக இருந்து, சில காலம் அவனால், ஒதுக்கப்பட்டவள். தமிழில், மனைவிக்குப் பின் வாய்த்தவளை 'மாற்றாள்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். மனைவியோ, மாற்றாளோ அவர்களின் துன்பம் ஒன்றுதான். மனைவி என்பவளுக்குச் சமூக அங்கீகாரம், ஆதரவு, தொடர்ந்து கிடைக்க, மாற்றாளுக்கு அவை மறுக்கப்படும். அவமானம் புறக்கணிப்பு இரண்டும் இந்த இரண்டாவது பெண்களுக்கே உரிமையாக இருக்கப் புருஷர்கள் தப்பித்து விடுகிறார்கள்.

ஓர் அருமையான கதை.

பகல் நேரம். அவன், சுற்றுமுற்றும் பார்த்தபடி, அந்த வீட்டுக்குள் நுழைகிறான். கதவையும் சாத்திக் கொள்கிறான். அந்த வீட்டுக்கு உரிய அவனை வரவேற்கிறாள். அப்போது கதவு தட்டப்படுகிறது. ஒரு பெண்ணின் குரலும் கேட்கிறது.

''பெண்ணே. அவனை வெளியே அனுப்பு. அவன் மனைவிதான் நான்.''

திடுக்கிட்ட அவன் எழுந்து, சமையல் அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொள்கிறான். சிநேகிதி கதவைத் திறக்கிறாள். வெளியே ஒரு பெண், ஆக்ரோஷமாக, சினத்தின் உச்சியில் நிற்கிறாள்.

'என்ன’ என்கிறாள் சினேகிதி.

'என்னவா? வீட்டுக்குள்ள ஒளிச்சு வெச்சிருக்கியே, அவன் என் புருஷன். அவனை வெளியே அனுப்பு.’

'எவனும் இங்க இல்ல. இடத்தைக் காலி பண்ணு.’

'காலி பண்றேன். என் கணவனை வெளியே அனுப்பு. அவன் என் புருஷன் மட்டுமல்ல. என் இரண்டு குழந்தைகளுக்கும் அப்பன். அங்க என் புள்ளைங்க பட்டினியா துடிக்குது. உனக்கு கோழி இறைச்சி வாங்கி வந்திருப்பானே. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தின்னிருப்பீங்களே. என் குடும்பத்தைப் பட்டினி போட்டுட்டு... நீ விளங்குவியாடி...’
மனைவி போட்ட சத்தத்தில் கூட்டம் கூடிவிட்டது. வேடிக்கை பார்ப்பதற்கும், முடிந்தால் பஞ்சாயத்து பண்ணுவதற்கும் என்றே சில பேர் பிறப்பெடுத்து வருவார்களே. அந்தப் பொது ஜனம். மனைவியைப் பார்த்து, 'என்னம்மா, என்ன சங்கதி’ என்றார் ஒருவர். அந்த நபரைப் பிடித்துக் கொண்டாள் மனைவி.

'பாருங்க ஐயா, என் புருஷனை வளைச்சுப் போட்டுட்டாயா, இவ. அவன் சம்பாதிக்கிறதெல்லாம் இவள்கிட்டதான் கொடுக்கிறான். நானும் என் ரெண்டு குழந்தைகளும் தவியாய்த் தவிக்கிறோம்யா?

மக்கள், சிநேகிதியை இழிவு தோன்றப் பார்த்தார்கள். கூசிப் போய் நின்றாள் அவள்.

'அது மட்டுமா, என் காதில், கழுத்தில் கிடந்த நகைகளையும் இவளிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டான், என் புருஷன்.’ என்று கத்தினாள். அவமானத்துடன் தன் மேல் உள்ள நகைகளை எடுத்து மனைவியிடம் கொடுத்தாள் சிநேகிதி. 'உள்ளே நீ வீட்டுக்குள் வைத்துள்ள நகைகளும் என்னுடையவைதான்’ என்று சொன்னாள்.  உள்ளே சென்று, தன் நகைப்பெட்டியைக் கொண்டு வந்து, அதை மனைவி முன் கவிழ்த்தாள் சிநேகிதி. எடுத்து வைத்துக் கொண்டாள் மனைவி. இது எதுவும் அவளுடையது இில்லை. மனைவி புறப்பட்டாள்.
சிநேகிதி உள்ளே வந்து படுக்கையில் விழுந்து அழத் தொடங்கினாள். அவள் அருகில் அவன் வந்தான். 'நீ எப்போதும் ஒரு குண்டு மணி நகையாவது, பணமாவது எனக்குக் கொடுத்திருக்கிறாயா’ என்று சிநேகிதி கேட்டாள். தலைகுனிந்தபடி 'இல்லை’ என்றான்.

'இல்லை’ என்று சொன்னபடி தன் கோட்டை அணிந்து கொண்டான். அவளைப் பார்த்து, 'என் மனைவி எப்படிப்பட்ட உத்தமி. அவள் உன் காலில் விழும்படியாயிற்றே... கேவலம் உன்னிடம்’ என்றபடி வெளியேறினான் புருஷன்.

ஆசிரியர் செகாவ் இதற்கு 'நடிகை’ என்று பெயர் கொடுத்திருக்கிறார். இதை நான் படித்த பல பத்தாண்டுக்கு முன், என் மனதில் ஏற்பட்ட சித்திரத்தை, என் வழியாகத் தந்திருக்கிறேன். மாதவிக்கும், இந்த நடிகைச் சகோதரிக்கும் என்ன வித்தியாசம்? கடந்த 2,000 ஆண்டு  கால வளர்ச்சியில் பெண் நிலை, குறிப்பாக மாற்றாளாக வாழ நேர்ந்த பெண் நிலை மாறவே இல்லை.

'நடிகை’ கதை எழுதப்பட்டு 100 ஆண்டுகள் ஆயின. மாற்றாளாக வாழ்ந்த பெண்கள் நிலை மாறிற்றா என்றால் இல்லை. சங்க காலம் எனப்படும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சூழல் மேலும் மோசமாகவே இருந்துள்ளது. பரத்தையர் என்ற பெயரில் ஒரு சமூகத்தையே உருவாக்கிய காலம் அது. பரிபாடல் என்ற நூலில் ஒரு பாவப்பட்ட பரத்தையை (பாடல் 20) நாம் சந்திக்க முடிகிறது. தலைவி (மனைவி)க்கும் மாற்றாள் ஒருத்திக்கும் இடையே நடந்த வாய்ச்சண்டையே அப்பாடல்.

மழை பெய்து, வைகை ஆற்றில் வெள்ளம் வருகிறது. வெள்ளம் பாயும் அழகைக் காண மக்கள் கூடுகிறார்கள். தலைவியும் மாற்றாளும் கூட வருகிறார்கள். தலைவி, தன் தலைவனுடனும், தோழிகளுடனும் வந்திருக்கிறாள். நீர் விளையாட்டின் போது, தோழிகள் ஒரு பெண்ணைக் குறிப்பாகக் கவனிக்கிறார்கள். அவள் அணிந்திருக்கும் மாலையும், கைவளையும் எங்கோ பார்த்ததாகத் தோன்றுகிறது. எங்கே? புரிந்துவிட்டது. அவை, தலைவி அணிந்தவை. எங்கோ தொலைந்துவிட்டன என்று தலைவி சொல்லிக்கொண்டிருந்தாளே! தோழிகள், அந்தப் பெண்ணைத் தொடர்கிறார்கள். அவள், அவர்கள் கண்ணில்படாமல் மறைந்து வெளியேறுகிறாள். ஓரிடத்தில் அவளை மடக்கி, அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.
மாற்றாள், அந்த தோழிகளிடம், 'ஏன் என்னைத் தொடர்கிறீர்கள்’ என்கிறாள்.

தோழிகளில் ஒருத்தி மாற்றாளை வைகிறாள். 'வஞ்சனை, பொய் இரண்டையும் சேர்த்து ஆண்களை மயக்கி இழிவாழ்க்கை வாழ்பவளே! காமுகப் பன்றிகள் வாய் வைத்து உண்ணும் தொட்டியே! அழகெனும் வயலில் கள்ளையே நீராகப் பெய்து போதையாகிய கலப்பையால் உழுகின்ற பழைய சாலே! யார் வேண்டுமானாலும் படிந்து குளிக்கும் நீர்த்துறையே! எங்கள் தலைவியின் நகையை வேறு அணிந்துகொண்டு வந்து மினுக்குகிறாயா? ஓடிப் போன எருதைத் தேடிப்பிடித்துக்கொண்டு வந்து உழவு செய்பவர் உழவர்கள். உன்னையும் இந்தக் கூட்டத்தின் மையத்தில் வழக்குரைத்து உண்மையை நிலை நாட்டுவோம். எம் தலைவியின் நகைகளை அணிந்திருக்கும் நீயும், எம் தலைவியும் சமானமா?’ என்று இழிவு செய்கிறாள் தோழி.

அப்போது சில முதுபெண்டிர் தலையிட்டுத் தலைவிக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். 'அடியே, இந்தத் தலைவி  தன் கற்பால், பிறர் பாவத்தைப் போக்கும் இயல்புடையவள். உன் பாவத்தையும்கூட. இவளை வழிபடு, பாவத்தைப் போக்கிக்கொள்!

இந்த நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்த தலைவன் நாணித் தலை கவிழ்கிறான். மாற்றாள் தீர்மானமாகச் சொல்கிறாள். 'அது முடியாது. எனக்கு அவள் பகை. நான் அவளுக்குப் பகை. பகைவர்கள் எப்படி வணங்கிக் கொள்ள முடியும்?’

தலைவி இப்போது பேசுகிறாள்.  'நாணமற்று, பாட்டு பாடிக் கொண்டு மத்தளத்தைத் தூக்கி வந்து ஆடுபவளே! என் தந்தை எனக்களித்த வளையும் மாலையும் உன்னிடம் எப்படி வந்தன.  திருடினாயா? திருடவில்லை என்றால், இவற்றை உனக்குக் கொடுத்தவனைச் சொல்..’

'உன் பக்கத்தில் இருப்பவன்தான். உன் புருஷன் எனக்கும் புருஷன். அவன்தான், நான் அவனுக்குத் தந்த புத்துணர்ச்சி இன்பத்துக்கு விலையாகக் கொடுத்தான். ஏன், உன் காலில் இருக்கும் சிலம்பையும், நாளை எனக்குத் தரப் போகிறான். முடிந்தால் அவற்றைக் காப்பாற்றிக்கொள்.’

முதுபெண்டிர் இப்போது தலையிடுகிறார்கள். மாற்றாளை நோக்கி, 'இவள் புருஷன் உனக்குத் தந்தவை, தந்தவைதான். நீ புறப்படு’ என்றார்கள். பிறகு, தலைவியிடம் பேசுகிறார்கள்.
இந்தப் பேச்சு முக்கியமானது. அக்கால இல்லற வாழ்க்கை நெறி வெளிப்படும் இடம் இது.

'பரத்தையிடம் செல்பவனைத் தடுக்க முடியுமா? முடியாது. அதுபோல, பரத்தையிடம் சென்றான் என்பதற்காகக் கணவனை நாம் விலக்கி வைக்க முடியுமா? அதுவும் முடியாது. கணவன் இகழ்ந்து பேசினாலும் கற்புடைய பெண்கள் அவனைப் போற்றி வணங்க வேண்டும். தன்னைப் புறக்கணித்து, தாம் விரும்பிய பரத்தையைச் சேர்கிற கணவனைச் சேர்ந்து வாழமாட்டேன் என்பது பெண்களுக்குச் சாத்தியம் இல்லை. ஒரு சமூகத்தின் குரலைப் பரிபாடல் வையைப் பகுதியை எழுதிய ஆசிரியன் நல்லந்துவனார் எதிரொலிக்கிறார். இத்தனைக்கும் கணவன் அந்த இடத்தில்தான் நிற்கிறான். அவன் குற்றவாளி என்று ஒரு விரல்கூட அந்தக் கூட்டத்தில் சுட்டிக் காட்டவில்லை. குளிக்க வந்த மக்கள் சேற்றைப் பூசிக்கொண்டு, தலைவிக்கு ஆதரவாக, அதனைவிடக் கணவனுக்கே ஆதரவு நிலை எடுக்கிறார்கள்.

அவமானத்துக்கு உள்ளானது மாற்றாள் மட்டும்தான். மாதவி, துறவை மேற்கொள்கிறாள்.

தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு காரணமாகத் தன் மகள் மணிமேகலையையும் வற்புறுத்தி துறவு ஏற்கச் செய்கிறாள். மாதவி என்கிற கலையரசி, அரசு விருது பெற்ற நடனமணி தொலைந்தே போகிறாள். மணிமேகலை, தன்காதலைக் காதலனுக்குச் சொல்ல முடியாமலேயே மறைந்து போகிறாள்.

நன்றி: விகடன்

Last Updated ( Wednesday, 02 September 2015 09:27 )

 

கதை மழை-3 - பிச்சைக்காரர்களின் தேசம் !

மிழ் இலக்கியங்கள் பசியைப் பற்றி நிறையவே பேசி இருக்கிறது. இசையையும் நடனத்தையும் வாழ்க்கை முறையாக வைத்திருந்த பாணர்கள் என்கிற கலைஞர்களை எப்போதும் பசியோடிருக்கும் படியாகப் பார்த்துக்கொண்டது சங்ககாலச் சமுதாயம்.

 பசியைப் பற்றி அதிகமாகப் பாடிய மனுஷி, ஒளவை. தமிழில் நாலு அல்லது ஆறு பேர் ஒளவை என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள். நாம் பேசப் போவது 'வாக்குண்டாம்,’ 'நல்வழிஎழுதிய ஒளவை பற்றி. பசி வயிற்றோடு அவள் ஒரு சம்பாஷணை நடத்துகிறாள்.

'வயிறே... சும்மா ஒரு வேளைக்கு சோறு கிடைக்காமல் போனால், அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறாய். சரி, நிறையக் கிடைக்கும்போது இரண்டு மூன்று வேளைக்கும் சேர்த்து எடுத்துக்கொள் என்றாலும் மாட்டேன் என்கிறாய். நான்படும் அவஸ்தை உனக்குப் புரியாது. எப்போதும் எனக்குத் துன்பத்தையே தரும் வயிறே. உன்னோடு வாழ்தல் அரிது!என்கிறாள்.

பசியே, மனித குலத்தைத் துரத்தும் ஆதிப் பகை. மனித ஆத்மாவைக் கொல்கிற அழிக்க முடியாத கிருமி அது. இன்னொரு மனிதனுக்கு முன்னால் மனிதனை மண்டியிட வைக்கிற பெரும் பாவி அது. காதல்கூட பசித்தவனைப் பகிஷ்கரிக்கிறது. முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது. பசித்த வயிறு காதலின் ஈரத்தை வளரச் செய்கிறது.

சோபி, ஓர் இளைஞன். அவனுக்கு ஓர் ஆசை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அவன் சிறைக்குப் போக வேண்டும். அதுவும் தீவுச் சிறைக்கு. இரண்டு காரணங்கள். சிறையில் உயிர்வாழ சோறு கிடைக்கும். உயிர் போகாமல் இருக்க, குளிர் இல்லாத பாதுகாப்பான இடம் கிடைக்கும். அமெரிக்க, ஐரோப்பிய வாழ்க்கையின் மிக முக்கியத் தேவை, குளிர் தாக்கிக் கொல்லாத வாழிடம். இந்தியாவைப் போல சட்டையே அணியாமல் தெரு ஓரத்திலேயே வாழ்க்கை முழுதும் வாழ்ந்திட முடியாது ஐரோப்பிய குளிரில். குளிர்காலம் என்பது பசியின் காலமும் கூட. எப்போதும் வயிறு தன்னை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

சோபி, அவனுக்கு முன், மரங்கள் இலைகளை உதிர்த்து ஒரு கடுமையான குளிர்காலம் வரப் போவதை அறிவிக்கின்றன. பறவைகள், திக்குகள் அறியாது பறந்தன. பனிக் காலத்தை எப்படி எங்குக் கடத்துவது என்று சிந்திக்கத் தொடங்கினான். அவன் ஆசைகள் பேராசைகள் அல்ல. கப்பல் பிரயாணம் செய்வது, வேறு ஊருக்குச் சென்று ஆனந்தமாகப் பொழுதைப் போக்குவது என்பதெல்லாம் அவனது சக்திக்கு அப்பாற்பட்டது. அவன் விருப்பம், மூன்று மாதக் குளிர்காலத்துக்குப் பசிக்கு உணவு, படுக்க இடம், உடுத்த உடை இந்த மூன்றும்தான். அவை கிடைக்கும் இடம் தீவுச் சிறைதான்.

உதவும் முகங்களை அவன் அறிவான். காசுகள், அவன் பசியைக் கால்வாசி குறைத்தது. உதவுபவர்கள் கம்பளிச் சட்டைக்கும் நல்ல அறைக்கும் தேவையான அளவு கொடுப்பது சாத்தியம் அல்லவே. உதவுபவர்களின் வாழ்க்கையில் கை ஏந்துவதன் மூலம் குறுக்கிட அவன் விரும்பவில்லை. அதோடு அவன் கைகளில் வந்து விழும் காசுகள் அவனை அவமானப்படுத்தின. சட்டமே அவனைக் காப்பாற்றும். சட்டத்தை எப்படிக் கைதட்டிக் கூப்பிடுவது? அவனுக்குச் சில வழிகள் தெரியும். ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்து, ஒரு வாத்து ரோஸ்ட், ஒரு புட்டி மது, ஒரு விலையுயர்ந்த சுருட்டு ஆகியவற்றை எடுப்பது. பிடிபட்டதும், போலீஸ் அழைக்கப்படும். அவனுக்குத் தீவுச் சிறை திறக்கும். ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தான். உட்காரப் போகிறான். ஹோட்டல் மேனேஜர் கண்ணில் அவனது அழுக்குக் கோட்டும் பழுதடைந்த ஷூக்களும் தென்படுகின்றன. அடுத்த கணம் அவன் வீதியின் நடுவில் வந்து விழுகிறான்.

கொஞ்சதூரம் நடந்தான். ஒரு கடை வாயிலில் அலங்காரத்துடன் விலை உயர்ந்த பொருட்கள் மக்கள் பார்வைக்கு கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருப்பதை அவன் கண்டான். உடனே அந்த எண்ணம் தோன்றியது. வீதியில் கிடந்த ஒரு கல்லை எடுத்து கண்ணாடி மேல் எறிந்தான். கண்ணாடி சுக்கலானது. போலீஸ்காரன் ஒருவனும் வந்து சேர்ந்தான்.

'கண்ணாடியை உடைத்தவன் எவன்என்றான் போலீஸ்காரன்.

'என்னைப் பார்த்தால் கண்ணாடி உடைக்கிறவன்போல் தோன்றவில்லையா?’

போலீஸ்காரன், சோபியின் சொற்களை நண்பனுடைய கிண்டல் போல் எடுத்துக்கொண்டான். சோபி சந்தேகிக்கப்படுபவன் தோற்றம் கொண்டிருக்கவில்லை. குற்றம் செய்தவன் செய்த இடத்திலேயே நிற்பானா என்ன? உலகம் முழுவதுமே போலீஸ்காரர்கள், குரூரம் மற்றும் அபத்தம் ஆகிய இரண்டு வேதிப் பொருள்களால் ஆனவர்களாகவே இருக்கிறார்கள். இந்த போலீஸ்காரன், சோபியைத் தவிர மற்றவர்களைச் சந்தேகிக்கிறான். அப்போது எவனோ ஒருவன் எதற்காகவோ ஓட, அவனைத் துரத்திக்கொண்டு ஓடினான் போலீஸ்காரன். சோபியை கடவுள் கைவிட்டுவிட்டாரே!

இன்னொரு ஹோட்டலுக்குச் சென்றான். அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருந்தது. நிறையச் சாப்பிட்டான். புகைத்தான். ஸ்டைலாக 'என்னிடம் செப்புக் காசும் இல்லையேஎன்றான். 'போலீஸை கூப்பிடுங்கள்என்றான். உனக்குப் போலீஸ் வேறு வேணுமா என்றபடி இரண்டு கிங்கரர்கள் வந்தார்கள். சோபியைத் துவைத்து தரதர என்று இழுத்து வந்து குப்பைத் தொட்டியில் தூக்கிப்போட்டுச் சென்றார்கள்.

சோபி, முயற்சியைக் கைவிடமாட்டான். நடந்தான். ஒரு கடைமுன் ஓர் இளம்பெண் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள். சற்று தூரத்தில் ஒரு போலீஸ்காரனும் நின்றிருந்தான். சோபி அந்தப் பெண்ணிடம் சென்று, கனைத்துக்கொண்டு 'இன்று இரவு என்னுடன் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாட சம்மதமாஎன்று போலீஸ்காரனைப் பார்த்துக்கொண்டே சொன்னான். அவள், கத்திச் சத்தம் போடப் போகிறாள். அவனை போலீஸ் பிடிக்கும். தீவுச்சிறை... பேஷ்.

அந்தப் பெண்ணோ 'வருகிறேன். கொஞ்சம் தள்ளிப் போய்ப் பேசுவோம். போலீஸ் பார்க்கிறான்என்றபடி நடந்தாள். கடவுளே. சோபி நடந்தான். குளிருக்கான கம்பளி உடை அணிந்த மக்கள் எதிர்ப்பட்டார்கள். ஒரு கடைக்குமுன் வாடிக்கையாளர்களின் குடைகள் வைக்கப்பட்டிருந்தன. இருப்பதிலேயே விலை உயர்ந்த குடையை எடுத்துக்கொண்டு மெள்ள நடந்தான். குடையாளி பிடிக்கப் போகிறான். தீவுச் சிறைதான். உணவு நிச்சயம். குளிருக்கான உடையும் நிச்சயம்.

ஒரு நபர், அவன் பின்னால் வந்து, அவனை நிறுத்தினார்.

'இது என் குடைஎன்றார்.

'அப்படியா, போலீஸைக் கூப்பிட்டு என்னைப் பிடித்துக் கொடுங்கள்என்றான் சோபி. அந்தக் குடையாளி பயந்து போனான்.

'மன்னியுங்கள். இன்று காலையில்தான். வேறு ஒரு கடையில் இதைத் திருடினேன். தாங்கள் பேசுவதைக் கேட்டால், இது உங்கள் குடை என்று தெரிகிறதுஎன்று சொல்லிவிட்டு அந்த நபர் மறைந்து போனான். சோபி எரிச்சலுடன் குடையைத் தூக்கி எறிந்தான்.  ஒரு திருப்பத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் நின்று பேசிக் கொண்​டிருந்தார்கள். சோபி ஒரு குடிகாரன்போல நடிக்கத் தொடங்கினான். சத்தம் போட்டு, தெருவில் போவோரை மறித்து கலாட்டா செய்தான். 'இப்போ போலீஸ் கைதுசெய்யப் போகிறான்.

ஒரு போலீஸ்காரன், இன்னொருவனிடம் சொன்னான். 'இந்தப் பயல்கள் கலாட்டா பண்ணுவார்கள். போய்விடுவார்கள். ஆபத்தானவர்கள் இல்லை. முக்கியம், எது என்றால் இவர்கள் கைதுசெய்யப்படக் கூடாதவர்கள்.

தீவுச்சிறை எட்டி எட்டிப் போய்க்கொண்டிருந்தது. குளிர், பசியைக் கிளர்த்தியது. ஆவது ஆகட்டும் என்று, எதிரில் தோன்றிய ஒரு போலீஸ்காரனை வேண்டுமென்றே சென்று மோதினான். அந்தப் போலீஸோ 'மன்னியுங்கள்என்றபடி நகர்ந்தான். நடக்கும்போது, ஒரு ஜனநடமாட்டம் இல்லாத ஒரு தெருவை வந்து அடைந்தான். ஒரு பழைய இடிந்த மாதா கோயிலைக் கண்டான். அங்கிருந்து வெளிச்சம் தெருவில் பாய்ந்தது. பியானோவின் இனிய ஓசையும் உடன்பாடிய சிலரின் சங்கீதமும் தெளிவாகக் கேட்டன. மேலே பூரண சந்திரன் ஒளியை வாரி இறைத்தது. இந்த இனிய சங்கீதம் அவனை ஸ்தம்பிக்கச் செய்தது. வெறிச்சோடிய தெரு. பறவைகளின் குரலோசை. அவன் மனம் அசைந்தது. அந்த இரவும், இசையும், ஒளியும் அவனை மாற்றிக் கொண்டிருந்தன. திகைத்துப் போய் நின்றான் அவன். அவன் செய்த தவறுகள், குற்றங்கள், தவறவிட்ட வாய்ப்புகள் துர்குணங்கள் அனைத்தும் அவனுக்குள் தோன்றின.

ஆத்மாவின் பேராறு அவன் கசடுகளை அடித்துச் சென்றது. அவன் புதிய மனிதன் ஆனான். நாளை முதல் அவன் புதிய மனிதன். அவன் ஒரு வேலைக்குச் செல்லப் போகிறான். உழைத்து உண்ணப் போகிறான். மரியாதைக்குரிய பிரஜையாக அவன் வாழ்வான். அந்த எண்ணமே அவனை மகிழ்ச்சியுறச் செய்தது. அவன் பரிசுத்தனாக நின்றான். அவன் தோளில் ஒரு கை வீழ்ந்தது. ஒரு போலீஸ்காரன்.

'இங்கே என்ன செய்கிறாய்?’

'சும்மா.

'என்னுடன் வா.

மறுநாள் காலை, மிகப்பெரிய வன்முறைக் குற்றவாளிகள் மத்தியில் அவன் நின்றான். நீதிபதி அவனுக்கு மூன்று மாத தீவுச் சிறைத் தண்டனை கொடுத்தார்.

தமிழர் வாழ்க்கை மரபில் தொடக்கத்தில் பிச்சை இல்லை. பசிக்கிறது என்று சொல்லிக் கையேந்துவது இழிவு என்ற கொள்கை தமிழர்க்கு உண்டு. சமண மதமும், புத்த மதமும் தமிழகத்துக்கு அறிமுகம் ஆன பிறகு, பிச்சை எடுத்தல் புண்ணிய காரியமாயிற்று. துறவிகள், பசிக்கு இல்லறத்தானே பொறுப்பு என்றன அந்த மதங்கள். வள்ளுவர்கூட அறம் சொல்வோர்க்கு உதவுதல் குடும்பத்தில் இருப்பவர் கடமை என்கிறார். பட்டினத்தார் என்கிற பட்டினத்து அடிகள் வித்தியாசமான பிச்சைக்காரர். அவர் பிச்சை எடுப்பவர்தான். ஆனால் எப்படிப்பட்ட பிச்சைக்காரர்? உங்கள் வீட்டுக்கு அவர் வரமாட்டார். அவர் இருக்கும் இடத்துக்கு நீங்கள் சோறுடன் போக வேண்டும். கண்ட சமயம் போகக் கூடாது. அவருக்கு எப்போது பசிக்கிறதோ அப்போது போக வேண்டும். எப்படிப் போக வேண்டும். பிச்சைக்காரர் என்கிற அலட்சியம் ஆகாது. உருக்கத்தோடு போக வேண்டும். அவரே இப்படிப் பாடுகிறார். ''இருக்கும் இடம் தேடி, என் பசிக்கே அன்னம், உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன்!'' பட்டினத்தார் பிச்சைக்காரர் இல்லை. பிச்சை கொடுப்பவர்.

ஒரு தேசத்தின் கலாசாரம், பண்பாடு, சமூக நீதி என்பவை தீர்மானப்படுவது, அந்த தேசத்துப் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துதான். 'எங்கள் இந்தியாவில் ஒரு குழந்தைகூடப் பசியோடு உறங்கப் போவதில்லைஎன்று ஒரு பிரதமர் சொல்ல முடியுமானால், இது தேசம்.

வள்ளுவர் மிகுந்த கோபப்பட்ட இடங்கள் சில உண்டு. 'ஒரு மனிதன், இன்னொரு மனிதனிடம் இரந்து உயிர் வாழ்ந்து தீர வேண்டும் எனில், அந்த இரப்பவனைப் படைத்த கடவுள் கெட்டு ஒழியட்டும்என்று சாபம் இடுகிறார். வள்ளுவர் சாபம் நிறைவேறவில்லை.

இலவசங்கள் மூலம் ஒரு சமூகத்தையே பிச்சைக்காரர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள், வள்ளுவர் வழி வந்த தமிழர் தலைவர்கள்.

நன்றி: விகடன்

Last Updated ( Monday, 27 July 2015 08:32 )

 

கதை மழை - 2 - பிரபஞ்சன்

மூன்று திருடர்கள் 

திருடனாக வாழ்வது அப்படியொன்றும் சாதாரண விஷயமில்லை. ஆபீஸ் போவது, கடையில் பொட்டலம் மடிப்பது போன்றதல்ல திருடுவது. திருடர்களை, மக்கள் ரசிக்கிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகள் சுவாரசியமாக இருக்கின்றன. உலகம் முழுதும் வாய்மொழியிலும் எழுத்து மொழியிலும் திருடர்கள் பற்றியும் திருட்டுத்தனம் பற்றியும் ஆன கதைகளே மிக அதிகமாக இருக்கின்றன. திருட்டில் பறி கொடுத்தவர்கள் தவிர, மற்றவர்கள் திருடர்களை ரசிக்கக் காரணம், திருட்டுச் செயல்பாட்டில் இருக்கும் சாகசம்தான். பல திருடர்கள், சாகசம் நிகழ்த்தியே தங்கள் திருப்பணியைத் தொடங்கி இருக்கிறார்கள்.

 கேரளத்துக் கொல்லம் பகுதியில் பிறந்த, மணியன் பிள்ளையின் சுயசரிதையைப் படித்தேன். மலையாளப் பத்திரிகையாளர் இந்துகோபன், திருடன் மணியன் பிள்ளையின் வாய்மொழியாகவே மிகுந்த மனநேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். தமிழில் குளச்சல் யூசுப் மொழியாக்கம். ('காலச்சுவடுவெளியீடு!) மணியன் பிள்ளைக்கு இப்போது வயது 64.

ஓர் இடத்தில் சில நகைகளையும் ஒரு சிட்டிசன் வாட்சையும் திருடி இருக்கிறார். போலீஸ் பிடித்துவிட்டது. வழக்கு கோர்ட்டுக்குப் போயிற்று. இப்போது மணியன், சட்ட நுணுக்கங்களில் தேர்ந்துவிட்டார். அவரே, அவர் வழக்குகளை வாதிடுகிறார். 

மணியன் பிள்ளை வாதிடுகிறார் என்றால், சீனியர்கள் தங்கள் ஜூனியர் வக்கீல்களிடம், விசாரணை 'மெத்தடைகவனிங்கப்பா என்பார்கள். அந்த சிட்டிசன் வாட்ச் ஒரு சிறுமியுடையது. அந்தச் சிறுமி 'இது என்னோடதுஎன்கிறாள். மணியன், குறுக்கு விசாரணை செய்கிறார்.

'இது உன்னோட வாட்சுதான் என்கிறதை உன்னால் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும். ஆதாரம் ஏதாவது இருக்கா?’

'பார்த்தாலே தெரியும்என்கிறாள் சிறுமி.

'ஒவ்வொரு வாட்சுக்கும் ஒரு நம்பர் இருக்குத் தெரியுமா?’

'தெரியாது

'பில் இருக்கா

'இல்லை

'சிட்டிசன் கம்பெனிக்காரன் இதுவரைக்கும் ஒரே ஒரு வாட்ச்தான் தயாரிச்சு இருக்கான்னு நினைக்கிறே.

அந்தச் சிறுமி அழுதுவிட்டாள். அந்த அழுகை, மணியனை உருக்கிவிட்டது. அன்றைக்கு அவர் உறங்கவில்லை. அந்தச் சிறுமிக்குக் கடிதம் எழுதுகிறார். ''மகளே, மாமா இனிமே உன்னைக் கோர்ட்டுக்கு இழுக்க மாட்டேன். மகள் இனிமேல் கோர்ட்டில் வந்து அழ வேண்டி இருக்காது. அப்படி நடந்து போனதற்காக இந்த மாமாவை மன்னித்துவிடு. உன் வாட்ச் உன்னிடமே வந்து சேர்ந்துவிடும்.''

குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைக்குப் போகிறார் மணியன். அவர் தன் திருட்டு வாழ்க்கையை நியாயப்படுத்தவில்லை. ஒரு ஞானியின் வரலாறுபோல, ஒரு முழுத் திருட்டு வாழ்க்கை நமக்குச் சொல்ல ஏராளமான சங்கதிகளைத் தனக்குள் வைத்திருக்கிறது.

அண்மையில் என் வாசிப்பில் ஓர் அசாத்தியமான திருடனைச் சந்தித்தேன். திருடுவதில் எந்தவிதமான குற்ற மனோபாவமும் அவனுக்கு இல்லை.

அவன் ஒரு புதிய கார் வாங்குகிறான். வேகமாக அதைச் செலுத்திக்கொண்டு போகிறான். வழியில் ஒருவன் அவனிடம் லிஃப்ட் கேட்கிறான். இவன் ஏற்றிக் கொள்கிறான்.

'லண்டனுக்காஎன்கிறான் வந்தவன். ஆம் என்றவன், 'நீ எங்கே போகிறாய்என்கிறான். 'எட்சனில் நடக்கும் குதிரைப் பந்தயத்துக்கு என்கிறான்வந்தவன். அவன், தனக்கும் 'குதிரைப் பந்தயம் பிடிக்கும்என்கிறான்.

'நான் குதிரை மேல் பந்தயம் கட்டுவது இல்லை. அது வருவதைக்கூட நான் பார்க்க மாட்டேன். அது முட்டாள்தனமான விஷயம்.

'அப்புறம் எதற்குப் பந்தயத்துக்குப் போகிறாய்?’

வந்தவன் அமைதியாக இருந்தான். அதிவேகமாக கார் சென்று கொண்டு இருக்கிறது. இதைக் கவனித்த போலீஸ்காரன் இவர்களை மடக்கிவிட்டான். கார் விவரங்களையும் இருவரது அடையாளங்களையும் போலீஸ்காரன் குறித்துக் கொண்டு அனுப்பிவிட்டான்.

கார்காரனும் இவனும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். லிஃப்ட் கேட்டு வந்தவன், புகையிலை டின்னையும் சிகரெட் தாள்களையும் எடுத்து கண நேரத்தில் சிகரெட்டைச் சுற்றிப் புகைக்கத் தொடங்கினான்.

'இவ்வளவு வேகமாக யாரும் சிகரெட்டைச் சுற்றி நான் பார்த்ததில்லைஎன்று கார்காரன் ஆச்சர்யப்பட்டான்.  'என்னிடம் அற்புத விரல்கள் இருக்கின்றனஎன்று பதில் சொன்னான் அவன். சிறிது நேரம் கழித்து ஒரு கறுப்பு நிற லெதர் பெல்ட்டை எடுத்து 'இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறீர்களாஎன்றும் அவன் கேட்டான்.

'ஏய்! இது என்னுடையது. உனக்கு எங்கே கிடைத்ததுஎன்று திகைத்தபடி கேட்டான் கார் ஓட்டுபவன்.

'உங்கள் பேன்ட்டிலிருந்து.

'அது சாத்தியப்படாது. பக்கலை தளர்த்தி லூப்களை கடந்து பெல்டை உருவி இருக்கவே முடியாது.

'அப்படியாஎன்றவன், ஒரு ஷூ லேசை எடுத்துக் காட்டினான்.

அதுவும் கார் ஓட்டுபவனுடையதுதான்.

'சரியான கில்லாடிதான் நீ... எப்படி எடுத்தாய்... நீ குனிந்ததை நான் பார்க்கவில்லையேஎன்றான்.  கார் ஓட்டுபவன், நேரம் அறிந்துகொள்ள, வாட்சைப் பார்த்தான். அது வந்தவன் கையில் இருந்தது.

'நான் உங்களிடம் இருந்து எதையும் கொண்டு போக மாட்டேன். நீங்கள் என் நண்பர். எனக்கு லிஃப்ட் கொடுத்திருக்கிறீர்கள்என்றான் வந்தவன்.

அவன் தனது பாக்கெட்டுக்குள் கையை விட்டான். கார்காரனின் ஓட்டுநர் உரிமம், சாவிக் கொத்து, சில பவுண்டுகள், டைரி, பழைய பென்சில், சிகரெட் லைட்டர், அழகான மோதிரம்... எல்லாவற்றையும் எடுத்து வெளியே போட்டான்.

'நீ பிக்பாக்கெட்டா?’

'எனக்கு அந்த வார்த்தைப் பிடிக்காது. பிக்பாக்கெட் என்பவர்கள், சின்னச் சின்ன திருட்டை செய்பவர்கள். கண் தெரியாதவர்கள் மற்றும் வயதான பெண்களிடம் திருடுபவர்கள். அவர்கள் கீழ்த்தரமானவர்கள்.

'உன் தொழிலுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய்

'நான் ஒரு விரல் வித்தகன். தொழில்முறை விரல் வித்தகன்என்றான். தான் ஒரு ராயல் காலேஜ் தலைவர் என்றோ அல்லது கான்டர் பெரியின் பிஷப் என்றோ அறிமுகம் செய்துகொள்ளும் தொனியில் இருந்தது அவன் பேச்சு.

'அதனால்தான் நீ ரேஸுக்குப் போகிறாயா.

'பந்தயத்தில் வென்ற அதிர்ஷ்டசாலிகளிடமிருந்து என் கைக்குப் பணத்தை மாற்றப் போகிறேன். தோற்றவர்களிடமும், ஏழைகளிடமும் என் கைவரிசையைக் காட்ட மாட்டேன்

'இன்னும் மாட்டவில்லையா?’

'பிக்பாக்கெட்டுகள் மாட்டுவார்கள். நான் விரல் வித்தகன்.

'போலீஸ்காரன், உன் பெயர் முகவரியையும் குறித்துக்கொண்டானே?’

'போலீஸ்காரன் அந்த நோட்டுகளைத் தொலைத்து விட்டான்.என்றபடி அந்த இரண்டு நோட்டையும் வெளியே எடுத்தான்.

''நான் செய்ததில் சுலபமான வேலை இதுதான்.

'நீ ஒரு ஜீனியஸ்என்றார் கார்காரன்.

இந்தக் கதையை ஆங்கிலத்தில் எழுதியவர், புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் (1916-1990) ரோல்ட் டால். தமிழில் அழகாக மொழிபெயர்த்தவர் பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்.

இளம் வயதில் படித்த சங்குத்தேவனை இன்னும் மறக்கவில்லை. அவனும் திருடன்தான்.

முறுக்குப் பாட்டி முத்தாச்சி மகளுக்கு நாளை காலை கல்யாணம். சாயங்காலம் வரை தங்கவேல் ஆசாரி வீட்டில் உட்கார்ந்திருக்கிறாள். பாட்டியின் பாம்படத்துக்கு மெருகிட்டுக் கொண்டிருந்தார் ஆசாரி. கைலாசபுரத்துக்கு பாட்டி நடந்து போய்ச் சேர வேண்டும். ஆசாரி, நேரத்தை இழுத்துவிட்டார்.

'காலம் கெட்டுப் போச்சி... ஊருல களவும் இளவுமா இருக்கே. நம்ம மேலப்பண்ணை வீட்டுல ரெண்டாயிரம் களவாம். காசுக்கடை செட்டியாரு பத்தமடைக்குப் போயிட்டு பட்டியை முடிஞ்சுகிட்டு வர்றார். விடியராப்பில பஞ்ச தட்டிப் பறிச்சுட்டான்என்கிறார் ஆசாரி.

'இம்பிட்டுஞ் சேசுபிட்டுப் போனானே அவனாரு?’ என்றாள் கிழவி.

'அவன்தான் நம்ம சங்குத்தேவன்...

நகைகளை முடிந்து கொண்டு பாட்டி புறப்பட்டாள். இரவு துரிதமாக வந்தது. மரங்கள் அடர்ந்து நெருங்கிய காட்டுப் பாதை. தன் கை தெரியாத கும்மிருட்டு. கிழவி பயந்தவள் இல்லை. ஆனால் இன்று, ஒவ்வொரு மரத்தடியிலும் சங்குத்தேவன்..!

அவளுக்கும் முன், ஓர் இருண்ட கரிய உருவம். கிழவி, நடுங்கிவிட்டாள். சங்குத்தேவனா? தன் பாதையில் முன்னால் போகும் அந்த உருவமும் தன்னைப் போன்ற பாதசாரி என்று நினைத்தாள். 'ஐயா ஐயாஎன்று கூவினாள். தலையில் முண்டாசு. நீண்ட கிருதா. வரிந்து கட்டின அரை வேஷ்டி. திடகாத்திரமான சரீரம். அக்குளில் ஒரு குதுந்தடி. இருவரும் சேர்ந்து நடந்தார்கள். விசாரிப்புகள் நடந்தன. கிழவி தன் மகளுக்குக் கல்யாணம் என்கிறாள். பிறகு அவர்கள் பேசாமல் நடந்தார்கள்.

கிழவி, 'அதோ கோயில் தெரியுது. நான் இனிமே போய்க்கிடுவேன்என்கிறாள்.

'ஏ... ஆச்சி. நில்லு ஒரு சமுசாரம். நீ ஏழைதானே! இன்னா, இதை வச்சுக்க. முதல் பேரனுக்கு என் பேரிடு

''மகராசரா இருக்கணும். என்ன பேரு இட

'சங்குத்தேவருன்னு

பணம் பொத்தென்று விழுந்தது. அவன் அதை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைக்கிறான்.

புதுமைப்பித்தன் 1934-ல் எழுதிய கதை.

திருடர்கள் பிறக்கிறார்களா, என்ன? அல்ல ஆக்கப்படுகிறார்கள்! திருடர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தது இல்லை. எழுத்துக்கு மனிதர் மேல் சமூகம் ஒட்டிய முத்திரைகள் பற்றி அக்கறை இல்லை. மனிதாம்சம் பற்றியே அக்கறை.

இருட்டு ஒரு ஜென்குரு. குடிசைக்குள் திருடன் புகுந்து தேடத் தொடங்கினான். விழித்துக்கொண்ட குரு கேட்டார்.

'பகல் முழுதும் எனக்குக் கிடைக்காத எது, உனக்கு இருட்டில் கிடைக்கப் போகிறது?’

- மழை பொழியும்

 நன்றி: விகடன்

Last Updated ( Tuesday, 28 April 2015 02:27 )

 

கதை மழை-1 - பிரபஞ்சன்

’சார்’கள்!
யானை பிச்சை எடுக்கிறது, மனிதனுக்குச் சோறு போடுகிறது. சர்க்கஸில் கரடி சைக்கிள் விடுகிறது. புலிகள், ஸ்டூலில் ஏறி அமர்கின்றன. கிளி, மனிதனின் வாழ்க்கையைச் சொல்கிறது. குரங்குகள் லங்கையைத் தாண்டுகின்றன. ஒருவன் மலைப் பாம்பை உடம்பில் சுற்றிக்கொண்டு கை ஏந்துகிறான். மாடுகள் போஸ்டர் தின்று பால் கரக்கின்றன.
 
 மனிதன், விலங்குகளை அடிமை கொண்டபோது, மனிதத் தன்மையை இழந்தான். அதன் பிறகே, மனிதனை அடிமைப்படுத்தக் கற்றுக்கொண்டான். பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி போன்ற இருவேறு உலகம், தமிழர் அறிந்தவைதான். வெள்ளைக்காரர்கள் வந்து, 'அரசாங்க அலுவல்’ என்கிற புதிய அடிமைத்தனத்தை அறிமுகம்செய்து அதை ஒரு நிறுவனம் ஆக்கி, புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கினார்கள். தமிழர்கள் மத்தியில், ஒரு புதிய பழமொழியே உருவாயிற்று. 'ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க’ என்பதே அது. தமிழர்களின் - புதிய 'ஆபீஸ்’ வேலையாட்களின் கனவே தாசி உத்தியோகமாயிற்று. இந்தப் புதிய வர்க்கத்தின் ரத்தத்தில் 'பயம்’ என்ற ஆதி உணர்வே ஓடத் தொடங்கியது. எப்போது 'துரை’ சிரிப்பார். எப்போது கோபிப்பார். எப்போது சீட்டு கிழியும் என்றே அவர்கள் அஞ்சி அஞ்சி செத்தார்கள்.
 
இந்த வர்க்கத்தின் உலக மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் இரண்டு பேரைக் கதைகளின் மூலம் சந்திப்போம். மனிதர்களின் அனைத்து வாழ்க்கை இருப்புகளையும் கதைகள் சித்திரித்துள்ளன என்பதே எழுத்தின் பெருமை.
அச்சுமேலவ் ஒரு கீழ்நிலை குமாஸ்தா.  அவன் ஒரு நாள் மாலை, நாடகம் பார்க்கப் போனான். பெரிய மனிதர்கள் வருகை தரும் நாடக அரங்கு அது. முன் வரிசைக்குப் பின்னால், இரண்டாம் வரிசையிலேயே அவனுக்கு இடம் கிடைத்துவிட்டது. நாடகம் தொடங்கியது. அவன் நாடகத்தில் லயித்துப் போனான். திடீரென்று ஓர் அசம்பாவிதம். அவனுக்குத் தும்மல் வந்துவிட்டது. தும்மல் வந்தால் யாரும் விறைப்பாக உட்கார்ந்து தும்முவது இல்லை. லேசாக முன்னால் குனிந்து 'அச்சுக்’ என்று இரண்டு முறை தும்மினான். முன்னால் குனிந்தவன், முன் வரிசையில் அவனுக்கு நேராக உட்கார்ந்தவர் மீது தன் தும்மலைப் படரவிட்டிருக்க வேண்டும். தும்மலின் நுண்ணிய நீர்ப் பிரயோகம் அவர் மேல் பட்டுவிட்டது போலும். அந்த மனிதர் சற்றே லேசாகத் திரும்பி அவன் முகத்தைக்கூட முழுமையாகப் பார்க்காமல் என்ன சத்தம் என்பதுபோல், நாடகத்தைக் கவனிக்கலானார்.
நம் அச்சுமேலவுக்குப் 'பகீர்’ என்றது.
 
முன் உட்கார்ந்தவர் - அவன் யார்மேல் தும்மினானோ அந்த மனிதர் - அவனுடைய மேல் அதிகாரி. பெரிய அதிகாரி. என்ன அசம்பாவிதம். அதிகாரி மேலேயா தும்மினேன். ஐயோ!
 
அவன் நாடகம் பார்த்தான். மனசுக்குள் நாடகம் புகவில்லை. அதிகாரி மேல் தும்மிவிட்டு நாடகம் பார்க்கிறாயா, முட்டாளே என்று, தானே தன்னை வைது கொண்டான். அதிகாரி பக்கம் குனிந்து, அவர் காதோரம் 'எக்ஸ்கியூஸ் மீ சார்’ என்றான். 'என்ன’ என்று அதிகாரி திரும்பினார்.
'தும்மல் என்கிறது, ரொம்ப இயற்கையான சமாசாரம் சார். தாங்கள் என்று தெரிந்திருந்தால் இடது பக்கம் திரும்பி தும்மி இருப்பேன்... மன்னிக்கவும் சார்’ என்றான், பூமி அளவுக்குத் தாழ்மையான குரலில்.
'இட்ஸ் ஆல் ரைட்’ என்று சொல்லிவிட்டு அதிகாரி நாடகம் பக்கம் பார்வையைத் திருப்பினார்.
அவர் சொன்னவிதம், சரியாக இல்லையே என்று இவன் நினைத்துக்கொண்டான். முகத்தில் புன்சிரிப்பு?... நட்பான பாவனை?... எதுவும் இல்லை. அந்தக் குரலில் கொஞ்சம் கடுமையும் இருப்பதுபோல் தோன்றியது.  ஒரு குமாஸ்தா பொது இடத்தில் தும்முவதே தவறு. அதுவும் அதிகாரியின் தோள்புரத்தில்.
அவனால் நாடகம் பார்க்க முடியவில்லை. சற்றுநேரம் கழித்து, அவர் தோள்பக்கம் குனிந்து, தன் கைக்குட்டையால் அவர் தோளைத் துடைத்தான். அதிகாரி திரும்பி, 'என்ன செய்கிறாய்’ என்றார்.
'எக்ஸ்கியூஸ் மீ சார்... தும்மல் என்கிறது, ரொம்ப இயற்கையான சமாசாரம் சார். பருவநிலை ரொம்ப மோசம் சார். அதான்.’
'சூ... நாடகம் பார்க்கவிடு என்னை’ என்றபடி விருட்டென்று திரும்பிக்கொண்டார் அதிகாரி.
நிச்சயம் கோபம்தான். அதிகாரிக்குக் கோபம் வரச் செய்து விட்டேனே. அவன் நிலைகுலைந்து போனான். முள்மேல் உட்கார்ந்திருந்தான். என்ன மடத்தனம். இந்த இடத்திலா தும்மல் வரவேண்டும்.
 
நாளைக்கு அவன் சீட்டு கிழியப் போகிறது. அவனும் அவன் குடும்பமும் நடுத் தெருவில் நிற்கப் போகிறது. கடவுளே...
இடைவேளை விட்டார்கள். அதிகாரி வெளியே சென்று, காபி கப்பை வாங்கிக்கொண்டு தனிமையான ஓரிடம் நின்று அருந்தத் தொடங்கினார். ஆகாயத்தைப் பார்த்தபடி, நின்றவரின் தோள்பட்டைப் பக்கம் நெருங்கி நின்று, 'எக்ஸ்கியூஸ் மீ சார்’ என்றான் நம்மாள். அதிர்ச்சி அடைந்த அதிகாரி காபியைச் சிந்திவிட்டார். காபிக் கோப்பை கீழே விழாதது அதிர்ஷ்டம்தான்.
'என்னய்யா?’
 
'தும்மல் என்கிறது, ரொம்ப இயற்கையான சமாசாரம் சார். முன்னால் இருப்பவரின் மரியாதை தெரியாமல் அது வந்துவிடுகிறது, சனியன்.’
'போ.... இங்கேந்து... போறீயா?’
 
அதிகாரி, நாடகம் முடிந்து வண்டிக்குத் திரும்பினார். அவன், சக்கரத்தின் பக்கம் பதுங்கி நின்றான். நிழலாடுவதைக் கண்டு திடுக்கிட்ட அதிகாரி 'யாரது?’ என்றார்.
'சார்... தும்மல் என்கிறது...’
 
'நிறுத்து. பைத்தியமா நீ? முட்டாள், முட்டாள். தொலைந்து போ... என் எதிரே வராதே...’
நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தான். படுத்தான். உறக்கம் வரவில்லை. கதிகலங்கிப் போய் இருந்தான் அவன். இனியும் முடியாது. அதிகாரி வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டான். மணி 3.15
 
குளிர் உடம்பைச் சுருட்டியது. பனிச்சாரல் வேறு. அதிகாரி வீட்டு அழைப்பு மணிக் கயிறை இழுத்து அடித்தான். மணிச்சத்தம் கேட்டு எழுந்த அதிகாரி சுவர்கடிகாரத்தைப் பார்த்தார். மணி 3.45. இந்த நேரத்தில் அவரை எழுப்பும் தகுதி உள்ளவர் கவர்னராகத்தான் இருக்க முடியும். அவருக்கு முன் இரவு உடையிலா போவது? தன் உத்தியோக யூனிபார்மை அணிந்து கொண்டு, தொப்பி, துப்பாக்கி சகிதம், இருட்டில் தட்டுத்தடுமாறி படி இறங்கி வந்து கதவைத் திறந்து 'கவர்னருக்கு’ சல்யூட் வைத்துக்கொண்டு நின்றார். எதிரில் நிற்பவர் கவர்னர் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள சற்றுநேரம் பிடித்தது. காதலிக்குப் பூ கொடுப்பதுபோலக் குனிந்து வளைந்து குமாஸ்தா மரியாதையைச் சொன்னான்.
 
'சார்... தும்மல் என்கிறது இயற்கை சமாசாரம்... அது திட்டமிட்டு...’
 
அதிகாரி கர்ஜித்தார். 'இது என்ன?’
 
'து...ப்..பா...க்...கி சா...ர்’
 
'உன்னை எங்கே எப்போ பார்த்தாலும் இதைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டேன்...’
மிகுந்த சோகத்துடன் குமாஸ்தா திரும்பி வந்து தன் படுக்கையில் படுத்தான். மறுநாள் அவன் மனைவி வந்து பார்த்தபோது அவன் படுக்கையிலேயே செத்துக் கிடந்தான்.
 
ஆன்டன் செகாவின் 'ஒரு குமாஸ்தாவின் மரணம்’ என்ற ரஷ்ய மொழிக் கதைக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நான் கொடுத்த நாடக வடிவம் இது. இந்தக் கதையைச் செகாவ், 1800-களின் கடைசிப் பகுதியில் எழுதினார். ரஷ்ய சமூகம் இதைப் படித்து, இப்படியா நம் சக மனிதர்கள் அஞ்சி அஞ்சி அதிகார வர்க்கத்திடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று கோபம் கொண்டது. இதுபோன்ற பல்வேறு சமூகக் கோபங்கள்தான் 1917-ல் ரஷ்யாவில் புரட்சிக்குக் காரணமாயின.
அடிமைத்தனத்தை அலுவலக நடைமுறையாக்கி நிறுவனப்படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள். தமிழக இந்திய எழுத்தர்கள் ஒரு காலத்தில் மோசமாக வைக்கப்பட்டிருந்தது உண்மைதான். நிலைமை மாறி இருக்கிறது. 'மனிதனாக நடந்து, மனிதனாக இரு’ என்று சகஜமாக இணைந்து நியாயம் கோருகிறார்கள் இன்றைய எழுத்தர்கள். சுதந்திரம், போராடுகிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆகவே அதை அவர்கள் பெறுகிறார்கள்.
 
ரொம்ப வித்தியாசமான ஒரு பியூனை நண்பர் ஜெயந்தன் படைத்திருக்கிறார். முனியசாமி என்பது கதைப் பெயர்.
தட்டுத் தடுமாறித் தாசில் ஆகிறார் குமரய்யா. அவருடைய பியூன் முனியசாமி. தாசில்தாரின் தேவைகளை அவர் சிந்திப்பதற்கு முன்னாலே உணர்ந்து செயல்படுத்திவிடுவார். அப்படி ஒரு 'சின்சியாரிட்டி’ விசுவாசம். ஒருமுறை மழை காரணமாக விறகு கிடைக்காமல் முனியசாமி எங்கிருந்தோ காய்ந்த விறகு சம்பாதித்து வந்தவர். மழையில் நனைந்ததால் நாலு நாள் சுரத்தில் படுத்துவிட்டார். தாசில்தார் நெகிழ்ந்து போனார். 'இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்தேன்’ என்கிற பிரேமையே முனியசாமி மேல் தாசிலுக்கு.
 
தாசில்தார் மாற்றப்பட்டார். விடைபெறு விழா நடந்து முடிந்தது. புதிய தாசில்தார் வந்துவிட்டார். பழையவர் விடைபெறும்போது தன் பியூன் முனியசாமிக்கு பகிரங்கமாக நன்றி சொன்னார். இப்போது தலையில் படுக்கை, கையில் பெட்டியோடு தாசில்தார் பின்னால் நடந்து போனார் முனியசாமி. கார் டிக்கியைத் திறந்திருந்தார் டிரைவர். நாலடி நடந்தால், முனியசாமியின் சுமை டிக்கிக்குள் போகும். பழைய தாசில்தாருக்குக் கை குலுக்கிவிட்டுத் தன் இருக்கைக்குச் சென்ற புதிய தாசில்தார், ஏதோ தேவைக்கு 'பெல்லை’ அடித்தார். தன்னை அறியாமல், 'வந்துட்டேன் சார்’ என்றார் முனியசாமி. ஓர் அடி தூரத்தில் இருந்த காரை மறந்தார். தலைச்சுமையை அப்படியே போட்டார். கைப் பெட்டியையும் கீழே போட்டார். புதிய தாசில்தாரைப் பார்க்க ஓடினார். திகைத்துப் போய் நின்றார் பழைய தாசில்தார் குமரய்யா.
 
மாடுகள், தமக்குக் கொம்பிருப்பதை மறந்து பல ஆயிரம் ஆண்டுகளாயின. மனிதர்கள் தாங்கள் மனிதர்கள் என்பதை ஓட்டுப் போடும்போது  மட்டுமே புரிந்துகொள்வார்கள்.
 
நன்றி: விகடன்

Last Updated ( Tuesday, 28 April 2015 02:25 )

 

ஓய்வு பெற்றபோது...- பிரபஞ்சன்

என் சட்டைப் பையில் இருந்த செல்லுக்கு அழைப்பொன்று வந்தது. அப்புறம் ஒலி அடங்கியது. மாலை நடையை முடித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். செல்லைப் பார்த்ததும் தேனுகாதான் அழைத்தார் எனத் தெரிந்தது. தெரு, இயந்திரங்களால் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குப்போய் நிதானமாகப் பேசலாம் என்று நினைத்துக் கொண்டேன். வழியில் அடுத்த நாளுக்கான காய்கறிகள் வாங்க வேண்டி இருந்தது. வீடு திரும்பும்போது காலனியே இருட்டில் இருந்தது. எல்லா வெட்டுகளும் இப்போதெல்லாம் பழகிவிட்டது. எந்தக் குந்தகமும் இல்லாத நாள் என்பது ஏது?

இருட்டிலேயே தேனுகாவை அழைத்தேன்.

தொந்தரவு செய்துவிட்டேனாஎன்றார்.

நிச்சயமாக இல்லை. சொல்லுங்கள். நலம்தானே, வீட்டார் எல்லாரும் நலம்தானே?’

எல்லாரும் நலம். வரும் 30ஆம் தேதி, நான் பணி ஓய்வு பெறுகிறேன். அந்த நாளை நண்பர்களைக் கொண்டு சின்ன சந்திப்பு நிகழ்ச்சியாக வைக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.

அடடா. விடுதலை நாள் என்று சொல்லுங்கள். ஞானக்கூத்தன் சொல்வதுபோல ஏதோ ஒரு பிடுங்கி உத்தியோகம் செய்துதானே தீர வேண்டியிருக்கிறது. பணி ஓய்வு பலருக்குப் பூதமாகத்தானே இருக்கிறது. உங்களுக்கு அது புது வாழ்க்கைத் தொடக்கம் இல்லையா. கொண்டாடுவோம், அந்த நாளை.

அதுக்குத்தான் உங்களை அழைக்கிறேன்.

கண்டிப்பாய் வருகிறேன். எவ்வளவு இழந்திருப்பீர்கள்? உங்கள் தெருவுக்கு யானை வந்ததைப் பார்க்கத் தவறி இருப்பீர்கள். ரோஸ்கலரில் கையில் வாட்ச் கட்டிவிடும் ஜவ்வு மிட்டாய்க்காரர், சாவதானமாகக் காலை நேரத்து கும்பகோணம் பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள், தயிர் விற்கும் பெண்மணி, வாசலுக்கு வரும் பச்சைக்கீரை, நண்பர்களுடன் கடிகாரத்தை மறந்து காபி குடித்துக்கொண்டு அவசரம் சுமக்காமல் பேசலாம். மத்தியானம் நிம்மதியாகத் தூக்கம் போடலாம். எங்கிருந்தோ வரும் காபிக்கொட்டை வறுபடும் வாசனையைக் கடைத்தெருவில் நடக்கும்போது நுகரலாம். நிறைய படிக்கலாம். வாங்கி வைத்துப் படிக்காமல் இருக்கும் புத்தகங்களைப் படித்து முடிக்கலாம். தேனுகா, இனிதான் நீங்கள் வாழப் போகிறீர்கள்.

எல்லாவற்றையும் அவர் அமைதியாகக் கேட்பது தெரிந்தது. இடையிடையே சிரித்துக்கொண்டார்.

எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேனோ, அதையே படம் வரைவதுபோலச் சொல்கிறீர்கள். அவசியம் வாருங்கள்... வர வேண்டும்.

நான் ஒப்புக் கொண்டேன். சரியாக அந்நேரம் மின்சாரம் வந்தது.

அதன்பிறகு எனக்கே உரிய பிரத்யேகமான பிரச்னையை நான் எதிர்கொள்கிறேன். நான் பிறந்த விருத்தாசலத்து மேட்டுத்தெரு வீட்டின் தோட்டத்தில் மூன்று மரங்கள் இருந்தன. அவைகளில் ஒன்று நுணா மரம். மற்றவை நாவலம் மரம், இலந்தை மரம். நுணா மரத்தில் ஒரு பேய் இருந்தது, இருக்கிறது. அது என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதன் முக்கியமான பணி. நான் ஏதாவது பயணத்தை ஒப்புக்கொள்ளும் போதெல்லாம் என் காதுகளுக்கருகில் வந்து பேசத் தொடங்கும். மிகவும் பழைய பேய். விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோயில் கட்டும் காலத்திலேயே அது இருந்திருக்க வேண்டும். அது என்னிடம் பேசத் தொடங்கும்.

ஊருக்குப் போகிறாயா

ஆமா. போகத்தான் வேண்டும்

எதையாவது சொல்லித் தட்டிக் கழிக்கலாமே. மார்பு வலி. பாத்ரூமில் வழுக்கி விழுந்து விடுகிறாய். மாமனார், பாட்டி, தாத்தா யாரேனும் சாகலாம் இல்லையா.

எல்லோரும் ஏற்கனவே செத்துவிட்டார்கள்

வாழ்பவனுக்கு மரணம் வராதா. இப்போதெல்லாம் எமராஜா எருமையிலா வருகிறார். பஸ்ஸில், ரயிலில் வருகிறார்.

எனக்கு மரண பயம் இல்லை.
 
நன்றி:காலச்சுவடு 

Last Updated ( Thursday, 18 December 2014 06:34 )

 

வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள்

முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது..!

பிரபல எழுத்தாளர் பிறப்பெடுத்த கதை

வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள்

கி.மணிவண்ணன்

ஒரு மாலைப்பொழுது. கரை புரண்டோடும் காவிரி ஆற்றின் படித்துறையில் அவளும் அவனு மாய் கால்கள் நனைய அமர்ந்திருக்கிறார்கள். கணுக் காலில் மினுங்கும் அவளது முத்துக் கொலுசைத் தொட்டு... வழிந்தோடுகிறது தண்ணீர்.

''நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?''

நெற்றியில் சுருண்டு விழும் ஒற்றை முடியை ஒதுக்கியவாறே... ''ம்... பண்ணிக்கலாமே..! இப்பவே கௌம்பலாம். எங்க போறோம்..? வீடு, சாப்பாடெல்லாம் எப்படி? சரி... கடன் வாங்கிக் குவோம். அடுத்த மாசம் என்ன செய்யிறது? பிராக்டிகலா யோசிச்சியா?''

தயங்காமல் பதில் சொல்கிறாள். அவன் திரும்பப் பேசவில்லை.

''முத்தம் கொடுத்து பசியாற முடியாது..! இன்னிக்கு ராத்திரி நமக்குள்ளே உறவு ஏற்பட்டுச் சுனா, காலையில நீ என்னைப் பார்க்குற பார்வை வேற. மறுத்துப் பேசறதால நான் ஒனக்குத் தப்பா தெரியலாம் வைத்தி. எதுக்காகவும் இந்த சிநேகிதத்தை நான் இழக்க விரும்பல. அதனால ரெண்டு வருஷம் இதைத் தள்ளிப் போடுவோம்.''

அவர்... எழுத்தாளர் பிரபஞ்சன். அந்தப்  பெண், அவரின் அன்புத் தோழி சுமதி. இந்தி எதிர்ப்பு தீவிரமான காலகட்டம். இடதுசாரி சிந்தனைகளோடு அவர் தி.மு.க-வில் ஈடுபட்ட கல்லூரிப் பருவம். ஒரு அரசியல் மேடையில் கவிதை பாடிய வரைப் பார்த்து அவள் கேட்டிருக்கிறாள்...

 

''வாழ்க..! வாழ்க..!னு கவிதை பாடுறீங்களே... உணர்ச்சி'வசப்பட்டு தமிழை வளர்க்க முடியுமா?''

பெரும்பாலோர் புரிந்துகொள்ள மறுக்கிற... அவருக்குள் புரிதலை உருவாக்கிய கேள்வி அது. முதலாமாண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருந்த சுமதி, தன் பெற்றோருடன் அந்தக் காவிரிக் கரையோர நகரத்தில் குடியிருந்திருக்கிறார்.

''இன்னும் சொல்லட்டுமா... ஒங்களுக்கு சுத்தமா கவிதையே வரல.''

முகத்துக்கு நேராக அவள் சொன்னது பிடிக்க வில்லை. என்றாலும், அவர் கர்வம் கலைந்தது. உணர்ச்சிகளை கடன் வாங்கி கவிதை பாடியவரை, கதை எழுதுவதற்காக மடைமாற்றி விட்டிருக்கிறார் சுமதி. பெண்மையின் மேன்மையை, அவர்கள் மீதான கரிசனத்தை தன் எழுத்துக்களில் பரவவிட்டிருக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன், நெகிழ்வுடன் பேச ஆரம்பிக்கிறார்.

''இந்தி எதிர்ப்புச் சிறைவாசத்தால ஒரு வருடம் படிப்பை இழந்த எனக்கு, சுமதியோட நட்பு ஆறுதலா இருந்துச்சு. லேடீஸ் ஹாஸ்டல்ல... அடிப்படை வசதியில்லாத பிரச்னை தொடர்பான போராட்டங்கள்ல பெண்களுக்கு ஆதரவா நான் இருந்ததால, என் மேல அவளுக்கு நல்ல மரியாதை. வெண்ணாற்றங்கரையிலும், விடுமுறை நாட்கள்ல திருவையாறு தியாகராஜர் சந்நிதி படித்துறையிலும் சந்திப்பு தொடர்ந்துச்சு. என்னோட கல்லூரிப் படிப்பு முடிஞ்ச அன்னிக்கு சாயங்காலம்தான் காதலைச் சொன்னேன்.''

பிரபஞ்சனின் அறை முழுவதும் நிரம்பிஇருக்கும் புத்தக வாசனை என்னைக் கிறங்க வைக்கிறது. சிகரெட்டை எடுத்து எனக்கும் ஒன்று நீட்டுகிறார். மறுத்ததும் புன்னகையோடு புகைத்துக் கொண்டே பேசுகிறார்.

''அப்புறம் நான் புதுச்சேரிக்கு வந்துட்டேன். என்னோட தம்பி எதிர்பாராதவிதமா இறந்துட்டான். அம்மாவுக்கும் ஒடம்பு சரியில்ல. எனக்கு கல்யாணம் ஏற்பாடு செஞ்சுட்டாரு அப்பா. அந்த நெலமையில நான் மறுக்க முடியல. என்னோட தோழி எனக்கு மனைவியாக முடியாதுங்கற நிலை உருவாயிடுச்சு!''

ஒரு புத்தகத்தைப் புரட்டுவதாய் தனது நினைவுகளின் ஆழ முடிச்சுகளை அவிழ்க்க ஆரம்பித்தவர், புருவம் உயர்த்தி,

'வாழ்வு நம் வசம் இல்லை. எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். ஊசிதான் நம் வாழ்க்கை. நூல்தான் மனிதர்கள். எதன் வழியாக எங்கு செல்ல வேண்டும் என்கிற உரிமை நூலுக்கு மறுக்கப்படுகிறது... ஆகவே வாழ்த்துக்கள்!

''இது, எனக்கு கல்யாணம் ஆனதை தெரிஞ்சுக்கிட்ட சுமதி அனுப்பின வாழ்த்து. மனைவிகிட்ட அவளைப்பத்தி கொஞ்சமா சொன்னேன். எலி பிறாண்டுவதைப் போல அவளுக்கு நெருடல் இருந்திருக்கலாம். ஆனா, பெருந்தன்மையோட இருந்தா. சுமதி எங்களுக்கு விருந்து வெச்சா. மனைவியை அறிமுகம் செஞ்சப்போ சுமதி கேட்ட கேள்விக்கு என்னிடம் இப்பவும் பதில் இல்ல.

'உன் மனைவியை எங்கிட்ட அறிமுகப்படுத்துன மாதிரி... உன் மனைவியோட சிநேகிதனை எனக்கு அறிமுகப்படுத்துவியா..?’

இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் இன்ன மும் என்னோட கதைகள்ல தேடிக்கிட்டிருக்கேன். சீக்கிரம் அந்த நிலையை அடைவேன். உயர்ந்த நிலைக்கு வர்றதுக்கு ஒரு பெண்ணோட தூண்டுதல் நிச்சயமா வேணும்...''

துளிர்க்கும் வியர்வையை அழுந்தத் துடைத்துக் கொள்கிறார்.

''அதுக்கப்புறம் நான் சென்னை வந்து பத்திரிகைகள்ல வேலைக்குச் சேரும்போதும் சுமதியோட ஆலோசனையைக் கேட்டுப்பேன். ஒரு பத்திரிகையில சேர்ந்தப்போ அவ சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கு.

'வாழ்நாள் முழுக்க எதை எதிர்த்தும், விமர்சிச்சுகிட்டும் இருந்தியோ... அங்கேயே வேலைக்குப் போற. ஒண்ணு உன்னை இழக்கணும்... இல்லேனா சேருமிடத்துல அந்த வண்ணமா மாறணும்!

சில வருஷத்துக்கு அப்புறமா விகடன்ல சேர்ந்தேன். சுமதிக்கும் கல்யாணம் ஆச்சு. ஆனா, தொடர்ந்து நாலு தடவை கர்ப்பம் கலைஞ்சு ருக்கு. ரொம்ப நாள் கழிச்சுதான் கர்ப்பப்பை புற்று நோய்னு தெரிஞ்சுது. திருமணம் ஆன எட்டாவது வருஷம், சுமதி உலகத்தைவிட்டே போயிட்டா...''

பிரபஞ்சனை உற்றுப் பார்க்கிறேன். கண்களில் துயரம் நிரம்பியிருந்தது.

''எந்த நிலையிலும் பெண்களுக்கு ஆதரவா எழுத்துக்கள்ல இயங்கணுங்கிறதுதான் சுமதி எனக்குக் கொடுத்த ஞானம்.''

அதற்கு மேல் அந்த அறையில் அவரால் இருக்க முடியவில்லை.

''வாங்க... நடந்து போய் ஒரு காபி சாப்ட்டு வருவோம்'' - அழைத்தார்.

''சமீபத்துல நான் கனடா கிளம்பும்போது கூட... 'இப்போ சுமதி உயிரோடிருந்தா... நீங்க சொல்லிட்டுப் போகலாம்’ - அன்பா சொன்ன மனைவிக்கு, எங்கிட்ட பதில் இல்ல...!''

வேப்ப மர நிழலில் நின்றோம்.

''அக்கறையோடு என்னை அணுகி... கேள்வி களால, விமர்சனத்தால அசைத்துப் பார்த்தவ சுமதி. புதுச்சேரி வரலாற்றை 'வானம் வசப்படும்ங் கற தலைப்புல எழுத வெச்சது அவதான். அதுக்கு சாகித்ய அகாடமி விருது கெடைச்சப்போ சுமதி உயிரோட இல்ல...''

பேச்சில் ஏக்கம் நிறைந்திருந்தது. முதுமையை நோக்கிய பயணத்தில் ஆதாரமாயிருப்பது நினைவுகள்தானே..!

''ஒரு பேச்சாளனா, அரசியல்வாதியா ஆகியிருக்கக் கூடிய என்னை... ஒரு பொறுப்பான எழுத்தாளனா மாத்தினா. காலித்தனத்தோடு சுத்தினவன கண்டிச்சு திசை திருப்பினா. என்னோட எழுத்துக்கள்ல நல்ல பகுதிகள் இருக்குமானா... அதுக்கு ஒரே காரணம்... சுமதிதான்!''

கொஞ்சமாக மேகமூட்டங்கள் வெயிலை மறைத்தன. வரிசையில் நின்று காபி வாங்கித் தந்தார்.

''இப்படித்தான்... நான் காதல் சொன்னப்போ, 'வா... கிருஷ்ணய்யர் ஹோட்டலில் காபி சாப்பிடுவோம்..!என்றாள் சுமதி. அவளோட உடல்மொழி மரியாதைக்குரியது. பாந்தமா சேலை கட்டி, பாத விரல்கள் தெரியாம நடப்பா. பிறர் பேசறத அமைதியா கேட்டுட்டு, கடுமையான விமர்சனத்தை சிநேகமாக வைப்பா. அந்த அன்பான சுமதிதான் என் கதைகள்ல வர்ற நாயகி..!''

''இப்போ எப்படி அவங்கள நெனைக்கிறீங்க..?''

காபியை பாதியில் வைத்துவிட்டு, ''அம்மா, அப்பாவை நெனைச்சுப் பார்க்கறது எவ்வளவு சத்தியமானதோ... அது மாதிரிதான் சுமதியும். நொடிப்பொழுதுகளில் தோன்றி மறையும் வால் நட்சத்திரம் போல பேரழகுடன் என் வாழ்க்கையில வந்தவ, இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கலாமோ? என் மனைவி இருந்திருந்தாலும் இந்தத் தவிப்பு இருக்கும். ஏன்னா... அவளும் சுமதியை நேசிச்சவ. எதை மையப்படுத்தி நான் இயங்குறேனோ... அந்த மையப்புள்ளிய அறிமுகப்படுத்தியவள் சுமதி. இப்போ அந்த புள்ளியாவே மாறிட்டா. என் படைப்புகளோட முழுத்தொகுப்பும் ஒரு நாள் வரும். அது சுமதிக்குத்தான் சமர்ப்பணம்..!''

''அடுத்து என்ன செய்யப் போறீங்க..?''

- ஆசுவாசமாகக் கேட்டேன்.

''நோய் தீவிரமாகி வலியால் துடிச்சப்போ தனிமையைத்தான் விரும்பினா சுமதி. அப்போ அவளோட சிந்தனைகளை டைரியில எழுதிக் கொடுத்தது... எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம். ஒவ்வொரு வருஷமும் தியாகராஜர் ஆராதனை நடக்கும்போதெல்லாம், திருவையாறு காவிரிக்கரையில நாங்க சந்திப்போம். அந்த சுவடுகளைத் தேடிப் பயணிக்கப் போறேன். அத வெச்சு ஒரு நாவல் எழுதணும். அதுல முதல் அத்தியாயம் சுமதியோட டைரிதான்!''

பையில் இருந்த டைரியை வாங்கிப் பார்த் தேன். அந்தக் கையெழுத்துக்களில் வலி தெரிந்தது.

வெயிலில் உதிரும் வேப்பம் பூக்களாய் மழை தூற ஆரம்பித்தது. மேலே எதுவும் பேசாமல் தனியே நடக்க ஆரம்பித்துவிட்டார் பிரபஞ்சன்.

 நன்றி: விகடன்.

 

 

வாசகர்களை வசப்படுத்திய பிரபஞ்சன் - அ. கார்த்திகேயன்

பதிவுகள்: அற்றைத் திங்கள், ஏப்ரல் 19, சேலம் தமிழ்ச் சங்கம்

கடந்த ஏப்ரல் 19, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய அற்றைத் திங்கள்நிகழ்ச்சியில் எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்துகொண்டார். தன் தரமான படைப்புகளால் ஏராளமான விருதுகளையும் வாசகர்களையும் பெற்றிருக்கும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.

வாசகர்களைச் சந்திப்பதும் அவர்களோடு பேசுவதும் தன்னை வளர்த்தெடுத்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது என்று தொடங்கிய பிரபஞ்சன், தன்னுடைய குடும்பச்சூழல் குறித்தும் சிறு பிராயத்து நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட்டார்.

தன் தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு வளர்ந்ததோடு தான் எழுத்தாளராய் மாறியதற்கும் அவரே காரணம் என்றார். அவருடைய தந்தை எதற்கும் கலங்காத மனிதராகவும் தன்னுடைய பிறந்தநாளின்போது புத்தகங்களைப் பரிசளித்த வித்தியாசமானவராகவும் விளங்கியதாகக் கூறினார்.

காதல் கடிதம் ஏராளமாய் எழுதிய அனுபவத்தின் விளைவாகத் தான் எழுத்தாளனாய் மலர நேர்ந்தது என்பதை நகைச்சுவை மிளிரக் குறிப்பிட்டார். எழுத்தாளனாய் இருப்பதில் எந்தவித வருத்தமும் இல்லை ஆனால் தமிழகத்தில் எழுத்தை நம்பிப் பிழைக்கும் சூழல் இல்லை என்பதில்தான் தனக்கு வருத்தம் மிக அதிகம் என்றார்.

தம்முடைய கதைகள் பெண்ணியச் சிந்தனையை மையம் கொண்டு திகழ்வதற்கும், பெண் விடுதலை குறித்து முழுவீச்சுடன் பேசுவதற்கும் குடும்பச் சூழலே காரணமாக இருந்தது என்றார். காரணம் தன் தந்தை தாயிடம் நடந்துகொண்ட விதமும் அடிமையாக நடத்திய முறையும்தான் தம்மைப் பெண்ணியம் குறித்து எழுதவைத் திருக்கிறது என்று கூறினார். தன்னுடைய மனைவியை அடிமை யாக வைத்திருப்பவன் தானும் ஓர் அடிமையேஎன்ற விஷயத்தைத் தான் படித்த கதை ஒன்றின் வாயிலாக உணரவைத்தார்.

தன் தந்தை பரிசளித்த முக்கிய நூல்களுள் ஆனந்தரங்கன் பிள்ளை டைரிக் குறிப்பும் ஒன்று என்ற பிரபஞ்சன் அந்த நூல் அவரைப் பாதித்த விதம் குறித்து நெகிழ்வுடன் குறிப்பிட்டார். சிலர் கூறுவதைப் போல அந்தக் குறிப்பே தம்முடைய நாவல் அல்ல என்றும், அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து எழுதிய நாவல்தான் வானம் வசப்படும் என்றார். ஆனந்தரங்கன் பிள்ளை டைரிக் குறிப்பை மிகச் சரியாக உணர்ந்துகொள்ள ஆறு மொழிகள் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்ற செய்தியைக் கூறிப் பார்வையாளரை வியக்கவைத்தார்.

பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவம் தனக்கு உண்டு என்றாலும் எந்தப் பத்திரிகையிலும் ஊழியராய் நிலைத்ததில்லை என்றும், ஒரு வெகுஜனப் பத்திரிகையுடன் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை, சிரிப்பலைகளின் ஊடே எடுத்துக் கூறிய பிரபஞ்சன், தான் மோசமான கதைகள் அநேகம் எழுதியிருக்கலாம். ஆனால் ஆபாசமான கதைகளை ஒருபோதும் எழுதியதில்லை என்றார்.

ஒரு நல்ல எழுத்தாளன் உலக அரங்கில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவது அவசியம். அதற்கு வாசிப்பு மிக முக்கியம். அந்த வகையில் பெரும்பான்மையான நேரத்தை வாசிப்பதில் தான் செலவழிப்பதாகக் கூறினார். இந்தத் தேசத்தை, சமூகத்தைப் புரிந்துகொள்ள கதைகளும் கவிதைகளும் உறுதுணையாக விளங்குகின்றன. எனவே கதை, கவிதைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்றும் எழுத்தாளனைவிட வாசகன் மேம்பட்டவன். ஆகவே வாசகனுக்குப் புரிந்துவிடக் கூடாது என்று எந்த எழுத்தாளனும் எழுதமாட்டான் என்பதைச் சுட்டிக் காட்டினார். பிறகு பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். குறிப்பாக ஒரு பார்வையாளர் அவருடைய இயற்பெயர் பற்றிக் கேட்டபோது, பெயரைப் படித்தால் சாதி தெரிய வேண்டியதில்லை; மனிதன் என்ற அடையாளம் கண்டுகொள்ளப்பட்டால் போதும் என்றார். நோபல் பரிசு தமிழ்ப் படைப்புக்குக் கிடைக்குமா என்றதற்கு மொழிபெயர்ப்புகள் அதற்குரிய வகையில் மிகச் சரியாக அமைய வேண்டும் என்றும் நோபல் பரிசு பெறுவதற்கு உரிய படைப்பாளிகள் தமிழில் சுமார் 20 பேர் நம்மிடையே இருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

 

இலக்கியத்தின் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றம் கொண்டுவர முடியுமா என்ற பார்வையாளரின் வினாவுக்கு, ‘முடியும்என்ற நம்பிக்கையால்தான் இன்னமும் தான் எழுதிக்கொண்டிருப்பதாகப் பதில் அளித்த அவர் சமகாலப் படைப்பாளிகளில் தமக்குப் பிடித்தமானவர்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 Next > End >>
Page 1 of 4
cheap ugg boots moncler doudounecheap nfl jerseys Packers Jerseyscowboys jerseyspatriots jerseysSteelers Jerseysclassic tall ugg bootsugg australiaugg clearancediscount moncler jacketsmoncler jacketscheap canada goosecanada goose outlet Cheap Thomas Sabo Jewelry