Events
User registration
article thumbnailநன்றி
இந்த இணைய தள முயற்சியை எனக்கு சாத்தியப்படுத்தி கொண்டிருக்கிற என் இனிய நண்பர் ஆர்.எம். பரணீதரன் அவர்களுக்கு நன்றி!!.                                         -பிரபஞ்சன்
Who is online
We have 3 guests online
Visitors Counter
Visitors:You are visitor number 383029You are visitor number 383029You are visitor number 383029You are visitor number 383029You are visitor number 383029You are visitor number 383029

நீரதன் புதல்வர் - பிரபஞ்சன்

அலுவலகத்தைவிட்டு வெளிவந்தான் மூர்த்தி. வாசலில் நின்றிருந்த போலீஸ்காரன் அடித்த வணக்கத்தை அசிரத்தையாக எதிர்கொண்டான். தெருவில் இருட்டு இல்லை. அந்த நாட்டு முதல் அரசர் பணி செய்யும் பகுதி என்பதால், தெரு இருளாமல்பார்த்துக் கொள்வார்கள். ஆனால், தெருவில் நாய்கள் அதிகமாகி இருக்கின்றன. மனிதகுலத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டு இருக்கும் அவைதான் எங்கு போகும்?

அவனுடைய நண்பன் செல்லில் வந்தான். வந்துகொண்டு இருப்பதாகவும் அலுவலகத்தில் இன்று வேலை அதிகம் என்றும் சொன்னான். ஆறு மணிக்கு வெளிப்பட்டிருந்தால், அலுவலக காரில் சென்று சோழ பஜாரில் இறங்கியிருப்பான். ஆட்டோ பேசி ஏறி அமர்ந்தான். 'ஆச்சர்யமா இருக்கு சார், நீங்கள்லாம் ஆட்டோவில் போறது... முதல் அரசருடன் நீங்கள் இருக்கிற நிறைய போட்டோவைப் பத்திரிகையில் பார்த்திருக்கிறேன்’ என்றார் ஆட்டோ டிரைவர்.

''ஆட்டோ இல்லை தம்பி, பஸ்ஸில் போறதுதான் என் தகுதி. நண்பர் காத்திருக்கிறார். அதுக்காகத்தான்.''

சோழ பஜாரில், அந்தப் பழங்காலக் கட்டடத்தின் மேல் தளத்தில் நான்கு புத்தக விற்பனைக் கடைகள் இருந்தன. அதில் ஒன்று மூர்த்தியின் நண்பருடையது. மூர்த்தி உள்ளே போய் அமர்ந்ததும் சட்டென்று வெக்கை தாக்கியது. மேலே மொட்டை மாடி. வெயில் காலத்தில் வெக்கை, கோழி இறகுபோல் இறங்கும். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே அடுத்த கோடைக்குள் ஏ.சி. போட்டுடுவேன் என்று சொல்லிவருகிறான் பரிமேலழகன். கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஆர்.கே-வின் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். 'அருமையான புத்தகம்’ என்றான். அழகான தயாரிப்பு. ஆனால், ரேக்கில் இருந்த நான்கு புத்தகங்களும் அப்படியே இருந்தன.

கடையைச் சாத்திப் பூட்டிவிட்டுப் புறப்பட்டான் பரிமேலழகன். இரண்டு பேரும் சோழ பஜாரின் லேண்ட்மார்க்காக இருக்கும் அந்த ஹோட்டல் பாருக்குச் சென்றார்கள். கோடை காலத்தில் பார்கள் நிறைந்து வழிவதற்கு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் மூர்த்தி. முடித்து எழுந்த இருவரின் இடத்தில் அவர்கள் அமர்ந்தார்கள்.

''என்ன சார் லேட்? வழக்கம் போலத்தானா?'' என்று விசாரித்தார் பாலு. அவர்கள் தலையசைத்தார்கள். பார் மிகவும் இரைச்சலாக இருந்தது.

''சாராயக் கடையில் இந்தச் சத்தம் இல்லை'' என்றான் மூர்த்தி.

''ஆனால், இங்கே வருகிறவர்கள் சற்று மேம்பட்டவர்கள் என்பது ஐதீகம்.''

''சாராயக் கடையில் பார்த்திருக்கிறேன். ஆயிரம் யோசனைகளுடன் வருவார்கள். சரக்கையும் பாக்கெட் வாட்டரையும் வாங்கிக் கொண்டு அப்படி ஒதுங்குவார்கள். என்ன காரணத்தாலோ குடித்து முடிப்பதில் அவசரம் காண்பிப்பார்கள். முன்னால் இருக்கும் சாராயக் குவளையை உற்றுப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். உலகத்தில் ஒட்டுமொத்தக் கசப்பும் அந்தக் குவளையில் மிதப்பதை அவர் மட்டுமே அறிவார். குடிக்கிறது, எதையும் மறக்கிறதுக்கு இல்லை பரி. எல்லாத்தையும் நினைச்சுக்கிறதுக்கு!''

அவர்களுக்கு உரியது அவர்களுக்கு முன் வைக்கப்பட்டது. மற்றும் சுண்டல், முறுக்குகள். மூர்த்தி சிக்கனும் பரி மீனும் வாங்கிக்கொண்டார்கள். கூட்டம் குறைந்துகொண்டு இருந்தது. மேசைகளின் மேல் கவிழ்ந்து இருக்கும் பல்புகளைச் சுற்றும் புகையையே பார்த்துக்கொண்டு இருந்தான் மூர்த்தி. ஒளியூட்டப்பட்ட சிலந்தி வலையைப் போல இருந்த புகையின் சாம்பல் கோடுகள் மேலேயும் பக்கவாட்டிலும் கிளைத்து இருட்டில் கரைந்தது.

''ரொம்பக் களைப்பா இருக்குது. இன்னிக்கு வேலை அதிகம். ஆபீஸுக்குள் நுழைஞ்சவுடன் முன்னூறு பக்கப் புத்தகத்தைக் கொடுத்துட்டார் செகரெட்டரி. இன்னிக்குள்ள படிச்சு குறிப்புகள் எடுத்துக் கொடு. அரசர் டேபிளுக்கு ஏழு மணிக்குப் போகணும்னு சொல்லிட்டார்.''

''கிழக்கு ஆசியப் பிரச்னைகள். வென்டல்டாம் எழுதியது. நாளைக்கு தெற்கு ஆசிய நாட்டுப் பிரதிநிதிகள் கோஷ்டி ஒண்ணு வருது. அவர்களைச் சந்திக்கணுமே அரசர்.''

அவர்கள் ரிபீட் பண்ணினார்கள்.

''இன்னிக்கு அ- நாட்டுத் தூதர் வந்திருந்தார். முதல் அரசரோட நட்புமுறையான சந்திப்பு...'' என்றபடிச் சிரிக்கத் தொடங்கினான் மூர்த்தி.

''எதாச்சும் தமாஷ் நடந்ததா?''

''சாதாரண தமாஷ் இல்லப்பா. சூப்பர் டூப்பர் தமாஷ்.''

தூதர் ஸ்டீபன், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் நாடுகளின் தூதுவர். நாம் மேலே இருக்கிறோமா. நம்மை ஆள்பவர்கள் மட்டும்தான் மேலே இருக்கிறார்கள். அவர், இரவு நேரங்களில் நம் ஊரின் வெளிச்சத்தை வாரி அடிக்கும் கூட்டங்கள், கல்யாணம், ஊர்வலம், வயசுக்கு வந்த பெண்ணைக் காரில் ஏற்றி நடத்தும் பவனிகள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். மின்சாரம் குறைந்து இருட்டில் வாழும் அவர் நாட்டுக்கு, மின்சாரம் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. பேச்சு அதில் இருந்து தொடங்கியது.

''சார், உங்களுக்கு இந்த 'பவர்’ எங்கிருந்து வருகிறது. பவருக்கு எந்த முறையைக் கடைப்பிடித்துச் சேமிக்கிறீர்கள்?''

''பவர் என்று அந்தத் தூதுவர் சொன்னது... மின்சாரம் பற்றிதானே? மேலே சொல்.''

''நம் அரசர் என்ன சொன்னார் தெரியுமோ?''

'' 'என் பவர் இந்திரா காந்தியிடம் இருந்து மூப்பனார். மூப்பனாரில் இருந்து எனக்கு. இந்த நாட்டில் நான்தான் உச்ச பவர் உள்ளவன்’ என்றார். நான் சிரித்துவிட்டேன். அரசர் என்னைக் குழப்பத்தோடு பார்த்தார். அதைவிடப் பெரும் குழப்பத்தோடு அந்தத் தூதுவர் இருந்தார். பவர் என்கிற ஆங்கிலப் பதத்துக்கு என்னென்ன வேறு அர்த்தங்கள் இருக்குமோ என்கிற குழப்பத்தில் ஆழ்ந்துபோனார். சற்றும் அக்குழப்பத்துக்கு குறையாத மனோபாவத்தோடு இருந்தார்கள், அவரோடு வந்தவர்கள்.

தூதர் சிரித்துக்கொண்டார். கடினமான கேள்விகள், சூழல்கள் அவர் மேல் திணிக்கப்பட்டாலோ, அவருக்குத் தெரியாததைக் கேட்டாலோ, அவர் பதிலாகச் சிரிக்க வேண்டும் என்றே அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தூதர் மேலும் சிரித்துக்கொண்டார். வேறு விஷயத்துக்குத் தன்னை மாற்றிக்கொண்டார்.

''மதர் இறைவனடி சேர்ந்ததுபற்றி செய்திகளைப் பார்த்தோம். என்னுடையதும் எங்கள் நாட்டுடையதுமான வருத்தங்களைப் பகிர்ந்துகொள்கிறோம் சார்.''

அரவிந்தர் ஆஸ்ரமத்து அன்னை சென்ற வாரம்தான் காலமாகி இருந்தார். ஆனால், நம் அரசரின் அம்மாவும் போன வாரம்தான் காலமாகி இருந்தார். உனக்குத் தெரியும்தானே பரி? தன் அம்மாவைப் பற்றித்தான் தூதர் வருத்தம் தெரிவிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நம் அரசர் பொங்கிவிட்டார். கேவிக் கேவி அழத் தொடங்கிவிட்டார்.

''பரதேவதை. போய்ச் சேர்ந்துட்டா. மூணு வருஷத்துக்கு முன்னால செத்துப்போன என் அப்பாவோடதான் என் அம்மா இருப்பா. பதினாறு குழந்தைங்க சார். நான் ஆறாவது, அப்பா கட்டட மேஸ்திரி. கொறைச்ச சம்பளம். எங்களை எல்லாம் ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பானு யோசியுங்க. வெச்சு ஆதரிச்சு மூணு வேளை கஞ்சி ஊத்த எனக்குக் கொடுத்துவைக்கலை.''

பக்கத்து மேசைக்காரர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தது, அவர்கள் சிரிப்பு.

மூர்த்தி தொடர்ந்தான், ''ஆனாலும் பாரு, பல விஷயங்கள் எங்களுக்குள்ள நடந்திருக்கு. அதை நானும் மறக்கலை. முதல் அரசரும் மறக்கலை. உயிருக்கு உயிரா அவர் நேசிச்ச சொர்ணா வரச் சொன்னாள்னு, இவர் அவள் வீட்டுக்குப் போனப்ப, திடும்னு சொர்ணாவோட அப்பா வந்து ஏகப்பட்ட களேபரம். விஷயம் வெளியே கசிஞ்சு அவர் அரசியல் வாழ்க்கை வீணாகிடக் கூடாதுன்னு அதுக்கு மறுநாளே ரிஜிஸ்டர் ஆபீஸ்லவெச்சு என் செயின், வாட்ச், மோதிரம் எல்லாத்தையும் வித்து அவர் கல்யாணத்தை நான் நடத்தி வெச்சதை அவர் மறக்கலை. அதனாலதான் பதவிக்கு வந்ததும் என்னைக் கூப்பிட்டு நல்ல சம்பளம் கொடுத்து வெச்சுக்கிட்டார். அதே போல கட்சிப் போராட்டத்துல கலந்துக்கிட்டு நான் ஜெயிலுக்குப் போனப்ப, அது எனக்குக் கல்யாணம் ஆயிருந்த நேரம். ஆறு மாசம் என் குடும்பத்துக்கு அவர்தானே சோறுபோட்டார். நாங்க ரெண்டு பேருமே எங்களை மறக்கலை!''

பாரை விட்டு வெளியே வந்தார்கள். பரிக்கு விடை கொடுத்து அனுப்பினான்.

வீடு தூரத்தில் இல்லை. நடக்கலாம் என்றது, இரவுத் தெருவும் குளிர்ச்சியான காற்றும், மழை வரலாம் போலத் தோன்றும் சூழலும். இரவுகளில் மட்டும் வேறு முகம் காட்டும் வீடுகளிடம் அதுகுறித்து கேட்க வேண்டும். நிறைய நாய்கள் தெருவில் தென்பட்டன. சில தூக்கத்தில் இருந்தன. சில இவனை நண்பனைப் போலப் பார்த்தன. சில நாய்களின் பார்வையில் நெருப்பு கனன்றது. சில, இவனை அலட்சியப்படுத்தின. பூமியின் மேல் மூர்த்தி என்கிற மனிதன் பிறக்கவே இல்லை. அவன் நம் முன் நடக்கவே இல்லை என்பதுபோல அவனைப்பார்த்துக் கொண்டே அவனைப் புறக்கணித்தன.

குழந்தைகளின் விடுமுறைகளைக் கொண்டாட அம்மா வீட்டுக்குப் போயிருக்கும் மகாலட்சுமியை நினைத்துக்கொண்டான். வாசனைப் புல் போன்றது அவள் கூந்தல். முட்டை ஓடு போன்றவை நகங்கள். குழந்தைகள் அமைதியாக உறங்கிக்கொண்டு இருப்பார்கள். மகிழ்ச்சியாக நாளைய காலையை எதிர்கொள்வார்கள். விடுமுறைக் காலங்களில் மட்டும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கிறார்கள். ஆபீஸ் சகா ரத்னாவுக்கு நாளை காலை புரோக்கரைப் பார்த்து வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும். லேடீஸ் ஹாஸ்டல் வாழ்க்கை, ஷூக்களில் குடும்பம் நடத்துவது மாதிரி இருக்கிறது என்றாள். அற்பக் கணவன்... செயலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவா தற்காலிகமாக வைத்திருப்பது என்று அரசரிடம் சொல்லி, நிரந்தரப்படுத்த ஆவன செய்ய வேண்டும். நான் இப்போது அரசருக்கு நெருக்கம் என்று உலகமே நினைக்கிறது. அரசர் அடித்துச் சேர்த்த கஜானாவில் பாதி எனக்கானது என்று நினைக்கின்றன நட்பும் சுற்றமும். அலுவலக மேஜையைத் திறந்தால், தவளைகள் குதித்து வெளியேறுகின்றன. ஜன்னல் வழியாகப் பாம்புகள் நுழைந்து, அலுவலக அறைக்குள்ளேயே புற்று கட்டுகின்றன.

மூர்த்தி வீடு வந்து சேர்ந்தான். பாக்கெட்டைத் துழாவி, சாவியை எடுத்து, சிரமப்பட்டுக் கதவைத் திறந்தான். வீட்டு வாசலில் ஒரு பல்பைப் பொருத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டு, உள் விளக்குகளை எரியவிட்டான். தண்ணீர் குடித்தான். கைலிக்கு மாறினான். படுக்கையில் தலையணைகளை மேடாக அடுக்கிச் சாய்ந்துகொண்டு, படித்துக் குப்புறக் கவிழ்த்துவைத்து இருந்த 'காந்திக்குப் பிறகான இந்தியா’ என்ற புத்தகத்தை எடுத்து, விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினான்.

இரவு ஒரு மரவட்டையைப் போல மெள்ள மெள்ள ஊர்ந்துகொண்டு இருந்தது. திடுமென நாய் ஒன்று குரைத்து அடங்கியது.

அவசர நிலையின்போது ஆபத்துக்கு உள்ளானவற்றில் பத்திரிகைச் சுதந்திரமும் ஒன்று. முதல் வாரத்திலேயே அரசு, பத்திரிகைகளுக்கு முன் தணிக்கையை அறிமுகம் செய்தது. செய்திகள் எவையென்று அரசாங்கமே வகுப்பெடுத்தது. தணிக்கைக் குழுவில் இருந்த அறிவாளிகள், தக்காளி விலை ஏற்றம்பற்றிய செய்தியைக்கூட அபாயகரமான செய்தி என்றார்கள். சோ ராமசாமி அரசியல் சட்டத் திருத்தங்கள்பற்றிய, ஒரு தேசிய விவாதம்பற்றிய கேலிச் சித்திரத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பிவைத்தார். தேசிய விவாதத்தில் இரண்டு பேர், ஒருவர் இந்திராகாந்தி, மற்றவர் சஞ்சய் காந்தி மட்டுமே விவாதத்தில் கலந்துகொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். பெயர் அற்ற ஒரு ஜனநாயகவாதி, 'டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில், மரண அறிவித்தல் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். 'D.E.M.O’ கிரேசி மரணம். வருத்தமுடன் அஞ்சலி செய்வோர், அவர் மனைவி டி.ருத் (Truth) மகன் எல்.ஐ. பெர்ட்டி (Liberty), மகள்கள் ஃபெய்த் (faith), ஹோப் மற்றும் ஜஸ்டிஸ்.

படித்துக்கொண்டு இருந்தவன், புத்தகத்தின் முக்கியமான பகுதியில் கோடிடுவதற்காக எழுந்து மேசை மேல் இருந்த பென்சிலை எடுத்தான். வெளியே நாய்கள் மிகப் பலமாகக் குறைத்தன. கூடவே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. மூர்த்தி மணியைப் பார்த்தான். நள்ளிரவைத் தாண்டிக்கொண்டு இருந்தது காலம். சட்டையைப் போட்டுக்கொண்டு வந்து கதவைத் திறந்தான். மங்கிய வெளிச்சத்தில் ஒரு போலீஸ் உருவம் தென்பட்டது. அவனது தோளின் வழியாக, வாசலில் காவல் துறை வாகனங்கள் இரண்டும் போலீஸ்காரர்களும் நிற்பது தெரிந்தது.

''யார்?'' என்றான் மூர்த்தி.

''அண்ணே, நான் நாராயணசாமி.''

நினைவு வந்தது. அண்மையில் ஒரு கிரிமினல் வழக்கில் சிக்கி, மூர்த்தியின் காலைக் கட்டிக்கொண்டு அழுத கண்ணீரால் இரங்கி காப்பாற்றப்பட்ட துறையின் ஒரு திருகாணி அவன்.

''என்னப்பா, இந்த நேரத்துல... அரசர் கூப்பிட்டிருக்காரா.''

''இல்லண்ணே, உள்ள வாங்க சொல்றேன்.''

மூர்த்தி அமர்ந்தான். நாராயணசாமி நின்றபடி சொன்னான்.

''மேலிடத்து உத்தரவு அண்ணே... உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கேன்.''

''மேலிடம்னா? அரசரா உத்தரவு போட்டார்?''

''அரசர் பக்கத்துல இருப்பவர் நீங்க. அவர் சொல்லாமே இது நடக்குமாண்ணே?''

தொடர்ந்து அவனே சொன்னான்.

''எனக்கு எஸ்.பி. உத்தரவு அண்ணே...''

''எதுக்குன்னு சொன்னாங்களா?''

''கஞ்சா கேஸ்தாண்ணே?''

''அது தெரிஞ்ச விஷயம்தானேப்பா... நாம், நமக்குப் பிடிக்காதவங்க மேல அந்த கேஸ்தானே போடுவோம். அதெல்ல நான் கேக்கறது. என்ன காரணத்துல அரசருக்கு என் மேல கோபமாம்?''

''சரியாத் தெரியலைண்ணே. அரசரைக் கேலி பண்ற மாதிரி அவர் முகத்துக்கு முன்னால, அதுவும் யாரோ வி.ஐ.பி. முன்னால...''

மூர்த்திக்கு நினைவு வந்தது.

அந்த பவர் டில்லியில் இருந்து முயல் குட்டி மாதிரி வருவது, அம்மாவுக்கு அதாவது மதருக்குக் கஞ்சி ஊத்தாத விவகாரம் நினைவுக்கு வந்தது.

''இப்படித்தான் அவர் முன்னால் சிரிச்சீங்களா?''

''ஆமா!''

''என்னண்ணே..?''

நாராயணசாமி, இடது பாக்கெட்டில் இருந்து சில பொட்டலங்களை எடுத்துவைத்தான்.

''கஞ்சாவை இப்படித்தான் பாக்கெட் பண்ணுவாங்களா?''

''ஆமாண்ணே.''

''நான் எத்தனை பொட்டலம் வெச்சிருந்தேனாம்?''

''நம்ம சண்முகம் நாலைஞ்சு பேரைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பி இருக்காண்ணே. கிடைக்கிறதைப் பொறுத்து...''

''சரி... அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு. முகம் கழுவிக்கிட்டு வந்துடறேன்.''

''பொறுமையா வாங்கண்ணே.''

திரும்பி வந்த மூர்த்தி, ஜோல்னா பையில் சில புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டான். 'காந்திக்குப் பிறகான இந்தியா’ புத்தகத்தையும் சேர்த்துவைத்துக்கொண்டான்.

''வாப்பா போகலாம்.''

அரசரின் மாளிகை ஓர் ஆற்றங்கரையில் இருந்தது. வெளிப்புறச் சுற்றுச் சுவர் தாண்டி காக்கைகள் பறக்கத் தயங்கின. சுவரில் முட்டிக்கொண்டு மூக்குடைந்த பறவைகள் அதிகம் இருந்தன. இருபுறமும் திறக்கத் தக்கதான இரு பெரும் கதவுகள் வாயிலை அடைத்தே இருக்கும். வாயிலுக்கு எதிரில் காவலர் துப்பாக்கியுடன் நிற்பார்கள். காலை ஒன்பதரை மணிக்கு இரண்டு பெரும் கதவுகளும் பெரும் சத்தத்துடன் திறக்கும். உள்ளிருந்து வரிசையாகப் புறப்பட்டு வரும் கார்கள், யுத்தக் களத்துக்குப் போவது மாதிரி உறுமிக்கொண்டு சீறிப் பாயும். அவற்றுக்கு முன் தெருவில் நாய், பூனை, ஈ., எறும்பு மற்றும் மனிதர்கள் யாரும் காணாதபடிக் காவலர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரை மணி முன்பாகவே, தெருவின் இருபுறமும் கடக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிடும். கல் பாவிய தெருவில், கானங்கள் மட்டும் மிதந்தபடி இருக்கும்.

வாயிலையும் தெருவையும் இணைக்கிற சிமென்ட்டு பால வளைவில் மக்கள் வேடிக்கை பார்க்கவும் வாழ்த்து கோஷம் போடவும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாகக் கைக்குழந்தையுடன் மகாலட்சுமி காணப்பட்டாள். காலை எட்டு மணிக்கே அவள் அங்கு வந்துவிடுவாள். கடும் வெயில் காரணமாகச் சமயங்களில் குழந்தை புழுங்கி அழும். சமயங்களில் அயர்ந்து உறங்கும். வெயிலில் இருந்து குழந்தையின் தலையைக் காக்க, தன் மேலையே போர்த்தியிருந்தாள்.

சில நாட்களில் ஒரு போலீஸ்காரன், தன் கைத்தடியால் மக்களை நெட்டித் தள்ளி, சத்தம் போட்டு, இல்லாத ஒழுங்கை உருவாக்கிவிட்டுப் போவான். மக்கள், அசைந்து அசைந்து மீண்டும் ஒரு புதுக் கும்பலை உருவாக்கிவிடுவார்கள். அரசர் கார் வளைந்து கடக்கும்போது, மகாலட்சுமி உடைந்து அழுவாள். அவள் அழுகையை அரசர் காண நேரும் என்று அவள் நம்பினாள். ஒரு நாள், ஒழுங்கை நிலைநாட்டும் அந்தக் காவலர், மகாலட்சுமியிடம் ''யாரும்மா நீ, என்ன வேணும்?'' என்றார்.

தன் கணவன் அரசரிடம் வேலை பார்த்ததையும் கஞ்சா வழக்கில் சிறையில் இருப்பதையும் அரசரிடம் மன்றாடித் தன் கணவரின் விடுதலை கோரவே, தான் அங்கு வருவதாகச் சொன்னாள். இதைச் சொல்லும்போதே அவள் கண்களில் நீர் வழிந்தது.

''மூர்த்தி சார் மனைவியா, நீங்க..?''

''உம்...''

''அடக் கடவுளே!''

சிமென்ட் பாலத்தின் தொடக்க முனையில், மரத்தடியில் தனியாக, அரசரின் கார் வெளி வரும்போது அவர் பார்வை படும்விதமாக மகாலட்சுமி நிற்க ஏற்பாடு செய்து தந்தார் காவலர். தொடர்ந்து முப்பத்தேழு நாட்கள், கோடை வானத்தின் கீழ் நின்று தினம் தோறும் அரசரின் காரைப் பார்த்ததும் அழுதாள் மகாலட்சுமி.

முந்தைய தினம் நள்ளிரவுக்கு மேல்தான் விடுதலை ஆனான் மூர்த்தி. ஜீப்பில் அவனைக் கொண்டு இறக்கிவிட்டுப் போனார்கள். களைப்பில் உறங்கிப்போனவன் காலை எட்டு மணிக்கு மேல் கண் விழித்தான்.

''நல்ல காபி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி'' என்றான் மகாலட்சுமியிடம்.

அவள் முகம் வாடியது. காபித்தூள் இல்லை. பால் இல்லை. காசும் இல்லை என்பதைப் புலப்படுத்தினாள் மகாலட்சுமி.

பத்து மணிக்கு மேல் பரிமேலழகனுக்குத் தொலைபேசினான் மூர்த்தி.

''பரி. விடுதலை ஆகி வீட்டில் இருக்கிறேன். வரியா சாயங்காலம் பேசுவோம். வீட்டுல பைசா இல்லை. இருக்கிறதை யாரிடமாவது கொடுத்து அனுப்பு. அவசரம்.''

அடுத்த அரை மணிக்குள் பரி, ஆட்டோவில் வந்து சேர்ந்தான். ''இதுல ரெண்டாயிரம் இருக்கு. இப்போதைக்குச் செலவுக்கு வெச்சுக்கோ.''


இருவரும் வெளியே கிளம்பிப் போய் காபி சாப்பிட்டுவிட்டு, காபியும் பலகாரமும் பார்சல் வாங்கிக்கொண்டுத் திரும்பினார்கள்.


குளித்து, ஒரு நூறு ரூபாயை மகாலட்சுமியிடம் வாங்கிக்கொண்டு, பஸ் பிடித்து அலுவலகம் போனான் மூர்த்தி. அவன் மேஜை சுத்தமாக இருந்தது. மேஜையில் ஏதோ ஓர் அறிக்கை இருந்தது. அதை மொழிபெயர்க்கச் சொன்னார் செயலர், தொலைபேசி வாயிலாக. அவன் குனிந்து வாசிக்கத் தொடங்கினான்.

சலசலப்பு கேட்டுத் தலை நிமிர்ந்தான் அவன். அரசர் வந்துகொண்டு இருந்தார். இவன் அருகில் வந்து நின்று, ''என்ன மூர்த்தி, நல்லா இருக்கியா...'' என்றார். அவன் தோளில் கை வைத்து.

''இருக்கண்ணே!''

''சரி, வேலையைப் பார்!'' என்றபடி நகர்ந்தார் அரசர்.

திடுமென அவன் அறையைச் சுற்றிலும் வெறுமை கவிழ்ந்தாற்போல இருந்தது.

அறிக்கையை ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினான்!

நன்றி - விகடன்
 

கரிய முகம் – பிரபஞ்சன்

கதவு தட்டப்பட்டது.

சார் சார் என்று அழைக்கும் குரலில், ரகசியம் இருந்தது. ரேடியம் அலாரம் மணி இரண்டு இருபதைக் காட்டியது. வெளியே இருட்டும், குளிரும் கண்ணாடி வழித்தெரிந்தன. போர்வையை விலக்கிக் கொண்டு, கதவின் அருகில் போனேன். கதவை ஒட்டி, சாருவும், குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சப்தம் கேட்டு அவர்கள் எழுந்து விடக்கூடாது, மெதுவாகக் கதவைத் திறந்தேன்.

வீட்டுக்காரர் நின்றிருந்தது புகைப்படம் போல் தெரிந்தது. நான் குடியிருந்தது இரண்டு மாடிவீடு. தரைப் பகுதியில் வீட்டுக்காரர் உறவினர் குடும்பமும், முதல் மாடியில் வீட்டுக்காரர் குடும்பமும், இரண்டாம் மாடியில் நாங்களும் குடியிருந்தோம். வீட்டுக்காரர் என்றதும் கடுமையான, பணத்தில் கறாரான் மனிதர் ஒருவரின் முகம் உங்களுக்கு நினைவில் வரலாம். வந்தால், அது தவறு. தமிழகத் தலைநகரில் சிதைந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் ஒருவர் அல்லர் அவர்.

என்ன சார் ? ‘ என்றேன் நானும். என் குரலும் ரகசியக் குரலாக, நான் அறியாமலே ஆகியிருந்தது.

பக்கத்து வீட்டில் திருடன் புகுந்திருக்கிறான். ஒருத்தன் உள்ளே இருக்கிறான். ஒருத்தன் நம்ம வீட்டு மொட்டைமாடியில் இருக்கிறான். கதவைச் சாத்திக் கொள்ளுங்கள். நான் சத்தம் போட்டால் மட்டும் கதவைத் திறவுங்கள். ஜாக்கிரதை.

அவர், முன்னங்காலில் சப்தம் எழுப்பாமல் படியில் இறங்கினார். நான் கதவைச் சாத்திக் கொண்டேன். திருடன் என்றதும், இரவு நேரத்தில் மனம் சொரசொரக்கத் தான் செய்கிறது. அதுவும் கையெட்டும் தூரத்தில் அவன் இருக்கையில். பாம்பு, பேய்க் கதைகள் மாதிரித் திருடன் கதைகளும் சாஸ்வதமானவைதானே ? திருடன் என்பவன், முகமூடி அணிந்து கையில் கத்தி அல்லது துப்பாக்கி அல்லது உருட்டுக் கட்டை அல்லது சைக்கிள் செயின் என்று ஏதாவது ஓர் ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு திரிபவன் என்றுதானே கற்பிக்கப்பட்டிருக்கிறது.

கதவைச் சரியாகத் தாழ்போட்டிருக்கிறேனா என்பதை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டேன். கதவின் தரம், பலம் குறித்து எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. ஆகவே எனக்குக் கவலை ஏற்படத்தான் செய்தது. சாருவை எழுப்பலாமா என்று தோன்றியது. ஆனாலும், என்னைவிடவும் அதிகமாக உழைத்துக் களைத்துத் தூங்கும் அவளை எழுப்ப மனம் வரவில்லை.

என் போர்ஷனுக்கு மேல் இருக்கும் மொட்டை மாடியில் திடுதிடு என யாரோ சிலர் ஓடும் சப்தம் கேட்டது. அப்புறம் இரவைக் குறுக்காகக் கிழித்துக் கொண்டு, திருடன் திருடன் என்ற அலறல் எழுந்தது. நான் ஜன்னல் திரையை விலக்கிக் கொண்டு வெளியே பார்த்தேன். எனக்கு அடுத்த வீட்டு மொட்டைமாடி மற்றும் மூன்றாவது வீட்டு மாடியில் நிறைய மனிதர்கள் தட்டுப்பட்டார்கள். குழப்பமாகவும் இருந்தது.

சாரு எழுந்து கொண்டாள்.

என்ன சத்தம் ? ‘ என்றாள்.

திருடன் என்றேன்.

அவள் சுருங்கியது தெரிந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டாள்.

‘….கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே இரு.. நான் போய்ப் பார்த்துவருகிறேன்.

நானும் வர்றேன்.

குழந்தைகள் தனியே இருக்குமே ? ‘

அவள் தயக்கத்துடன் சரி என்றாள்.

நான் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

கதவைச் சாத்திக்கோ… ‘

படியில இறங்கித் தெருவுக்கு வந்தேன். மாடியைப் பார்த்தேன். சாரு, கைப்பிடிச் சுவரில் சாய்ந்து கொண்டு வெளியே நிற்பது தெரிந்தது. அவள் துணிச்சல்காரி. அந்தச் சூழ்நிலையில் சாருவைப் பற்றிப் பெருமிதமும் எனக்கு ஏற்பட்டது.

தெரு சுத்தமாக விழித்துக் கொண்டு, விளக்கு வெளிச்சத்தில் கும்பல் கும்பலாகக் கூடிப் பேசிக் கொண்டிருந்தது. திருடன் பிடிபட்டு விட்டானாம்.

அவரவரும் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் சம்பந்தப் பட்ட திருடர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ரிடையர்டு ரெவின்யூ ஆபீசர் மகாதேவன், தான் சேலத்தி ஒரு பெரிய திருட்டுக் கும்பலைப் பிடித்த கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். யாருக்குத் தான் கற்பனை இல்லை ?

தெருமுனை திரும்பி ஒரு கூட்டம் வந்துகொண்டிருந்தது. திருடன் கையைக் கட்டி அழைத்து வந்தார்கள். திருடன் முகத்தில் மூடி இல்லை. வயசும் இருபதுக்கு ஒட்டித்தான் இருக்கும். மெரீனா கடற்கரையில் சுண்டல் விற்கிற சிறுவர்கள் மாதிரி நடுங்கிப் போய் இருந்தான். இவனா திருடன் ? ‘ஐயோ பாவம் என்றிருந்தது.

வக்கீல் குமாஸ்தா புதைத்துக் கொண்டிருந்த சிகரெட்டால், அவனைச் சுட்டார். கூட்டம் சூ…..சூ என்றது. வீட்டுக்கார், ‘அதுதப்பு…. ‘ என்றார்.

சொல்லுடாகூட வந்தவன் எங்கே ? இன்னும் எத்தனைபேர் உங்க கோஷ்டி ? ‘ என்றார் வரதராஜன்.

தமிழே தெரியாதவன் போலும். ஊமை போலும். அவன் வாயைத் திறக்காமல் இருந்தான். கல்லூரி மாணவர்கள் போலத் தெரிந்த இரண்டு இளைஞர்கள் திடுமென பாய்ந்து அவனைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அந்தத் திருட்டு சிறுவன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அத்தனை அடிகளையும் வாய் பேசாமல் வாங்கிக் கொண்டு தரையில் அமர்ந்தான்.

எங்கள் வீட்டுக்காரர் அம்மாள்தான் திருட்டு நடந்ததை முதலில் கண்டுபிடித்தவள். ராத்திரி அடுப்பறையில் ஏதோ சத்தம் கேட்டு அவள் எழுந்திருந்தாள். தண்ணீர் குடிக்கப் போயிருக்கிறாள். குடித்துத் திரும்புகையில், அடுத்த வீட்டு பின் அறையில் விளக்கு வெளிச்சத்தைப் பார்த்திருக்கிறாள். ஊருக்குப் போய் இருக்கும் ஸ்டேட் பாங்க் தம்பதிகள் வந்துவிட்டார்களா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறாள். தபால்கள் அவர்களுக்கு வந்தவை, தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. பாகீரதி அம்மாளின் மகனுக்குக் குழந்தை பிறந்துவிட்டதா, என்ன குழந்தை என்று அறிய ஆவல் கொண்டிருக்கிறாள். தபால்களை எடுத்துக் கொண்டு, தெரு வாசலுக்கு வந்திருக்கிறாள். பூட்டு நாதாங்கியோடு பெயர்க்கப்பட்டு தொங்கிக் கொண்டு இருந்தது தெரிந்தது. ஆகவே உள்ளே இருப்பது திருடர்கள் என்கிற சம்சயம் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. நடுங்கிப்போன அவள், திரும்பி வந்து புருஷனை எழுப்பிச் சொல்லியிருக்கிறாள்.

அறைக்குள் இருவரும், மொட்டைமாடியில் ஒருவனுமாக இருந்துகொண்டு அவர்கள் காரியத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். ஆக, அவர்கள் மூன்று பேர். மேலே இருந்தவன் ஆள் நடமாட்டத்தை அவதானிப்பது. கீழே இருப்பவர்கள், பொருள்களை மூட்டை கட்டுவது அவர்களின் திட்டமாக இருந்தது.

வீட்டுக்காரர், சப்தம் போடாமல் தெருவுக்கு வந்தவர், அடுத்த அடுத்த வீட்டுக் கதவுகளைத் தட்டி உஷார் படுத்தியிருக்கிறார். ஒரு சிறு கூட்டம் கூடி இருக்கிறது. கூட்டம் பாங்க்காரரின் வீட்டுத் தெருக்கதவைச் சுற்றி தயாராக நின்றிருக்கிறது. எப்படியும் திருடர்கள் தெருவழியாகத் தானே வெளியேற வேண்டும் ?

மாடியில் இருந்தவன், அபாயத்தைப் புரிந்து கொண்டிருக்கிறான். விசித்திரமான குரல் கொடுத்துள்ளான். திருடர்கள், சுருட்டிய பொருளுடன் வெளியே வந்தவர்கள் பொருள்களைப் போட்டுவிட்டு, கூட்டத்தை இடித்துத் திமிறிக் கொண்டுஓடியிருக்கிறார்கள். கூட்டம் துரத்தியிருக்கிறது. ஒருவன் சிக்கிக் கொண்டான்.

அவன் பெயர் செங்கோடனாம். நிறைய அடிகளை வாங்கிக் கொண்ட பிறகு அவன் அதைச் சொன்னான். முகம் வீங்கியிருந்தது. உதடுகள் கிழிந்து இரத்தம் கசிந்தது. உடம்பை உதறிக் கொண்டு, மழைக் காலத்துச் சிட்டுக் குருவி மாதிரி அமர்ந்திருந்தான்அவன். யாரோ ஒரு மனிதர் வந்து அவன் முகத்தில் உதைத்தார். அவன் தரையில் விழுந்தான். அவன் கைகள் இன்னும் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தன.

வீட்டுக்கார் சொன்னார்.

சார்அப்படியெல்லாம் ஒரு மனுஷனைச் சித்திரவதை செய்யக் கூடாது.

திருடனுக்கு என்ன சார் வக்காலத்து ? ‘

திருடனா இருக்கலாம். அவனும் நம்மைப் போல மனுஷன் தான். அவனைப் போலீசிடம் ஒப்படைக்கலாமே.. அதுதானே சரி… ? ‘

அவன்கள் காசு வாங்கிக் கொண்டு விட்டு விடுவான்கள். இவனை அடித்துக் கொல்வதுதான் சரி.

அவர் அவனை மீண்டும் தன் பூட்ஸ் காலால் உதைத்தார்.

சார்இது அநியாயம் என்று மட்டும்தான் என்னால் சொல்லமுடிந்தது.

செங்கோடன் அழுக்குப் பனியனும், நாலு முழவேஷ்டியும் அணிந்திருந்தான். பனியன், அடி உதைகளால் கிழிக்கப்பட்டிருந்தது.

தண்ணி….தண்ணி என்று முனகினான் அவன்.

வீட்டுக்கார அம்மாள் ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். மடக் மடக்கென்று சப்தம் வர அவன் அதைக் குடித்தான்.

இவனைஎன்ன செய்வது ? ‘

போலீஸ்ல ஒப்படைச்சுடலாம்.

ஒருவர் வந்து, ‘ஏந்திரிடா என்றார்.

என்னை விட்ருங்க அண்ணே.. போலீசுகிட்டே ஒப்படைக்க வேணாம்இனி திருட மாட்டேன்… ‘ என்று திக்கித் திணறிச் சொன்னான் அவன். கை கூப்பினான்.

வலுக்கட்டாயமாக அவனை எழுப்பி நிறுத்தினார் ஒருவர். அவன் சரிந்து விழுந்தான்.

ஐயோ என்றாள் வீட்டுக்கார அம்மாள்.

வெறும் நடிப்பு சார் அது

உதைங்கஎழுந்திருவான்.

ஒருவர் பிரம்பை எடுத்து வந்து அவனைச் சுளீர் எனத் தாக்கினார். அவன் துடித்தபடி எழுந்தான்.

போலீஸ் ஸ்டேஷனை நோக்கி அந்த ஊர்வலம் புறப்படத் தயாராகியது. வீட்டுக்காரர் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு வந்தார்.

உம் புறப்படுங்க என்றபடி முன்னால் நடந்தார் அவர்.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு வீட்டுக்கார அம்மாள் வந்தார். அவர் கை டம்ளரில் டீ இருந்தது.

என்னடி இது‘ என்றார் வீட்டுக்காரர்

டீஆனாலும் அந்தக் குழந்தையை அப்படிப் போட்டு அடிச்சிருக்கப்படாது என்றார் அந்த அம்மாள்.

செங்கோடன் டீயைக் குடித்தான்.

ஊர்வலம் தொடர்ந்தது.

 

காரணங்கள் அகாரணங்கள் – பிரபஞ்சன்

கூட்டத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் கேசவன். அந்தக் கோயிலுக்குப் பெரும் கூட்டம் வரும் என்பது அவருக்குத் தெரியும். சில வருஷங்களுக்கு முன் அங்கு வந்திருந்தபோது, அவரே கூட்டம் கண்டு வியந்திருக்கிறார். இப்போது அவர் கண்ட கூட்டத்தைக் கற்பனை செய்திருக்கவில்லை அவர்.

ஊரிலிருந்து புறப்பட்டுச் சமதளத்தில் பேருந்து பயணம் செய்து, பிறகு வேறொரு பேருந்தில் ஏறி மலையின் விலாவில் சுற்றிச் சுற்றிப் பயணம் செய்து, கோயில் இருக்கும் சமதளத்துக்கு வந்து சேர்ந்திருந்தார். கோயில் நிர்வாகம் நடத்தும் சுத்தமான விடுதியில் குளித்துத் துவைத்து இஸ்திரி போட்ட ஆடையுடன் வந்தார். சன்னதிக்குச் செல்லும் வரிசை, கண்ணுக்கெட்டிய தூரம் தெரிந்து பிறகு மறைந்தும் போயிற்று. சூனியத்திலிருந்து தோன்றிச் சூனியத்துக்கே போய் மறைகிற வரிசை உலக உருண்டையைச் சுற்றி நிற்க வைத்தாலும், பக்தர்கள் மேலும் எஞ்சுவார்களாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். வரிசையில் நின்று தரிசனம் முடித்த ஒருவர் தான் பத்து மணி நேரம் நிற்க நேர்ந்ததாகச் சொன்னார் என்று யாரோ ஒருவர் யாரோ ஒருவரிடம் சொல்வதை இவர் கேட்டார்.
கேசவன் பலவிதமான யோசனைகளில் தடுக்கப்பட்டார். வரிசையில் அவரும் நிற்கிறார். முன்னால் இருப்பவர் இவர் மேல் சாய்கிறார். பின்னால் இருப்பவர் அவரை முன்பக்கம் தள்ளுகிறார். முன்பக்கமும் பின்பக்கமும் அவர் இடிபடுகிறார். வரிசையில் முன்னாலோ பின்னாலோ பெண் பக்தர்கள் இருக்க நேர்ந்தால் விஷயம் விபரீதமாகவும் ஆகக்கூடும்அவருக்கு அண்மைக் காலமாக வேளை, நேரம் இல்லாமல் இயற்கையின் அழைப்பு வந்து விடுகிறது. வரிசையைக் குலைத்துவிட்டு அதற்கென்று எங்கு போவது. களைப்புக்காகக் காபி சாப்பிட முடியாது. காபி சாப்பிட்டதும் ஒரு வில்ஸ் சிகரட் வேண்டி இருக்கும். அது இந்த இடத்தில் அபசாரமாகும்.

வெயில் சுள்ளென்றது. அடிக்கடி வானம் மூடிக்கொண்டு குளிர்ந்த காற்றும் வீசியது. கூட்டத்துக்கே உரிய குழப்பமான ஒலிகளில், வெளிகளின் நீட்சி நடுங்கும்போல் தோன்றியது. வரிசையில் நின்று தரிசனம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டார். அந்த எண்ணம் தோன்றியவுடனே, தத்துவபரமாகவும் அவர் சிந்திக்கலானார். கேசவனின் தேகரீதியான சிரமம், கடவுள் அறியாததல்ல. அறியாமல் இருப்பாரேயாகில் அவர் தெய்வமாக இருக்க முடியாது. பத்து மணி நேரம் வரிசையில் நின்று பார்க்க கடவுள் அவ்வளவு தூரத்திலா இருக்கிறார். புத்தகத்தில் இருந்து பிரசங்கம் செய்யும் தெய்வீக வாக்காளர்வரை எல்லோருமே கடவுள் உனக்குள் இருக்கிறார் என்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிகிற கலாச்சாரம்தான் பின், எதற்காக இந்த மலைச்சாமியைப் பார்க்க மலை ஏறி வருகிறார்கள். நூறு, ஆயிரம் என்று செலவு செய்துகொண்டு எதற்காக வரவேண்டும்.

பயணம் பண்ணுவதில் மக்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த ஆர்வமாக இருக்கக்கூடும். புதுப்புது இடங்கள், புதிய காட்சிகள், புதிய முகங்கள் காணும் அவாவாக இருக்கலாம். பல மகான்கள், பல பெரியோர்கள், பல புண்ணியஸ்தர்கள் மிதித்த மண்ணைத் தாமும் மிதிக்கிறோம் என்ற எண்ணமாக இருக்கலாம். கூட்டத்தின் திரளில் தம் தனிமை அச்சத்தை விரட்டும் நோக்கமாக இருக்கலாம். இருண்ட ஒளிபுகாக் காடுகளில் வாழ நேர்ந்த காலத்தின் சதா நிகழும் உயிர்ச்சத்தை, மரணம் கையெட்டும் தூரத்திலேயே நின்று மருட்டிய பயத்தை வென்றதன் கொண்டாட்டமாக இம்மலைப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம்.
மூச்சு முட்டுவதாக இருந்த கூட்டத்தைவிட்டு வெளியேறினார் கேசவன். அவருக்கும், சாமியிடம் சொல்வதற்கு ஒரு வேண்டுதல் இருந்தது. சொந்த வேண்டுதல் இல்லை. அலுவலகப் புரமோஷன் போன்ற சமாச்சாரங்கள் இல்லை. அவர் காரணம் என்றும் முழுதாகச் சொல்ல முடியாது. அவர் காரணம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு இக்கட்டான நிலைமை.

 நேற்று முன்தினம், அவர் சொந்த ஊருக்குப் புறப்பட வேண்டி இருந்தது. அழகர்குளம் பேருந்து நிலையத்துக்குப் போய்த்தான், அவர் ஊருக்குப் போகும் பேருந்தைப் பிடிக்க வேண்டும். வழியில் அதை நிறுத்தி ஏறிக் கொள்ளலாம்தான். உட்கார இடம் கிடைப்பது என்பது சாத்தியம் இல்லை. நின்றுகொண்டே ஏழு, எட்டு மணி நேரம் பயணம் செய்வது என்பதை அவர் நினைத்துப் பார்க்க முடியாது. அதற்கான உடல் தெம்பை இழந்து பல காலம் ஆகிவிட்டிருந்தது. மேலும் அது இரவு நேரம். ஆகவே, பேருந்துகள் புறப்படும் அழகர் குளம் நிலையத்துக்கே போய்விட முடிவு செய்தார்.

நேரமும் அதிகம் இல்லை. ஒன்பது மணி வண்டியைப் பிடிக்க ஏழரை மணிக்கே புறப்பட வேண்டும். இரண்டு வண்டிகள் மாறி அழகர்குளத்தை எட்டரைக்குள் சேர்ந்துவிடலாம். அவரும், ஏழு மணிக்குப் புறப்படும் நோக்கத்தோடுதான் ஆறரைக்குள் குளித்து முடித்து ஆயத்தமானார். அந்த நேரம் பார்த்து மூர்த்தி வந்து சேர்ந்தார். அவரும் ஒரு பிரச்னையுடன் வந்திருந்தார். அவருடைய மாமனாருக்கும் புகழ்பெற்ற இருதய நோய் நிபுணர் சத்தியானந்திடம் நேரம் குறித்துச் சந்திக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் அவசரம் என்றார் மூர்த்தி. முந்தின நாள் இரவு மூச்சத் திணறலில் அவரால் உறங்க முடியாமல் ஆகிவிட்டிருந்தது. சத்தியானந்த், கேசவனுக்கு மிகவும் வேண்டியவர். தொலைபேசியில் அவருடன் பேசி நேரம் வாங்கித் தரவேண்டும் என்று மூர்த்தி கேசவனிடம் கேட்டுக் கொண்டார். நீண்ட கால நண்பர் மூர்த்தி அறிமுகமே அற்றவராக இருந்தாலும் கூட இதை அவர் செய்வதுதான் முறை. கேசவன் சத்தியானந்துக்குத் தொலைபேசி செய்தார். அவருடைய துணையாளர் சுசிலாதான் எதிர்முனையில் கிடைத்தார்.
சுசீலா, டாக்டர்கிட்டே, ஒரு அப்பாயிண்ட்மென்ட் விஷயமாக பேசியாகணுமே.
சில நிமிஷங்களுக்குப் பிறகு சுசிலா மீண்டும் பேசினாள். கேசவன் அழைப்பை டாக்டரிடம் அவள் சொன்னாள். டாக்டர் ஒரு அவசர நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தார். முடிந்ததும் அவரே கேசவனை அழைப்பார்.

ஆக கேசவன் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நேரம் கடந்து கொண்டிருந்தது. அவர் இரண்டு பேருந்துகளைப் பிடித்துப் பேருந்து நிலையம் போக முடியாது. மூர்த்தி அவருடைய மாமனாரின் இருதயம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக மனித இருதயங்களின் செயல்பாடு, அவற்றின் அருமை, பெருமை பற்றியெல்லாம் மூர்த்திக்குச் சொல்ல ஏராளமான தகவல்கள் இருந்தன. நெட்டில்அவர் இதுபற்றித்தான் அண்மைக் காலங்களில் அதிகமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்.
டாக்டர் போன் செய்தார். விஷயத்தைக் கேட்டுக் கொண்டார். நேரமும் அளத்தார்.
நல்லது மூர்த்தி. மாமனாரை டாக்டரிடம் அழைத்துப் போங்கள். எல்லாம் சரியாகிவிடும். நான் ஊருக்குக் கிளம்புகிறேன்.

மூர்த்திக்கு இதயம் பற்றித் தான் அறிந்தவைகளை இன்னும் எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. கேசவனின் அவசரத்தை உணர்ந்தவராக விடைபெற்றனர்.
இனிமேல் இரண்டு பேருந்துகளைப் பிடிக்க முடியாது. அவர், வழக்கமாக ஆட்டோவில் பயணம் செய்ய நேர்கிறபோது, அம்பாள் கபே வாசல ஸ்டாண்டில் இருக்கும் மைதீன் ஆட்டோவைத்தான் பிடிப்பார். முதல் சில அனுபவங்களுக்குப் பிறகு மைதீன் அவருக்குத் தோதானவர் என்பதை அறிந்துகொண்டார். அனாவசியமாக ஊரைச் சுற்றிக் காட்டுவதில்லை. அதிகமாகக் கேட்பதில்லை. அடாவடித்தனமும் அவரிடம் இல்லை. காத்திருக்கச் சொன்னால் முகம் சுளிப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலே மனித மதிப்பைப் புரிந்தவராக இருந்தார்.

தன்னைக் கடந்து செல்கிற அல்லது குறுக்கே வருகிற எவனையும் வைகிற பழக்கமும் அவரிடம் இல்லை. ஒரு வகையான சினேகமும் அவரிடம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, ஓட்டலில் காபி சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்து ஊருக்குப் போகலாம் என்ற எண்ணமுடன் பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். உணவு விடுதிச் சுவரை ஒட்டி நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அந்த ஆட்டோ இல்லை. மைதீன் சவாரி போயிருப்பார் என்று கேசவன் நினைத்துக் கொண்டார். அவர் நிற்கும் இடத்துக்கும் அழகர்குளம் பேருந்து நிலையத்துக்கும் ஆட்டோச் சத்தம் எண்பது ரூபாய் ஆகும். மைதீன் அதை அடைந்தால் கேசவனுக்குச் சந்தோஷமாக இருக்கும். வேறு ஆட்டோக்காரர் நூறு ரூபாய் கேட்பார். வெளியூர்க்காரர் என நினைத்து இருநூறு ரூபாய்க் கேட்ட ஆட்டோக்காரர்களும் உண்டு. ஆட்டோக்காரர்களில் பேருந்து நிலையத்துக்கு வெளியேயே நிறுத்திவிட்டுக் காசை எடு என்பவர்களும் இருந்தார்கள். வெளிப்புற வாசலுக்கும், உள் வாசலுக்கும் சுமாராக ஒரு பர்லாங் தூரம் இருந்தது. பைச் சுமையுடன் அந்த தூரம் நடப்பதில் இப்போதெல்லாம் கேசவனுக்குச் சிரமம் இருந்தது.

சுரத்தில்லாமல் காபி குடித்துவிட்டுத் தெருவுக்கு வருகையில் மைதீன் ஆட்டோ அதன் இடத்துக்கு வந்து நின்றது.
பஸ் ஸ்டாண்டுக்குப் போகணுமே மைதீன்என்றார் கேசவன்.
அழகர் குளம் ஸ்டாண்டுக்கா சார்
உம்
ஐயோ, ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்டை ஏத்திக்கிட்டு வரணும் சார். அவங்களுக்கு பாஷை தெரியாது. என்னைத்தான் நம்பி ஏறுவாங்க. எட்டரை மணிக்கு வர்றேன்னுட்டேன்என்ன பண்றது?’
கேசவனுக்கு முகம் தொங்கிப் போயிற்று.
பரவாயில்லை. நான் வேறு ஆட்டோவைப் பிடிச்சுக்கிறேன்அவருடைய குரல் அவரக்கே சுரத்தில்லாமல் ஒலித்தது.
சார் கேட்டு வரலைன்னு சொல்லக்கூடாதுமணி என்ன சார் இப்போ
எட்டேகால் ஆகுது
போய்த் திரும்ப முக்கால் அவர், ஒன் அவர் ஆகுமே சார்
மைதீனை அந்தச் சூழலில் நிறுத்தி இருக்கக்கூடாதுதான். மைதீனின் ஆட்டோவில் பேருந்து நிலையம் போனால்தான் பிரயாணம் சௌகர்யமாக இருக்கும் என்பது போன்ற பாவனையை அவர் ஏற்படுத்தியவராக இருந்தார்.

சரி சார். பரவாயில்லை. வாங்க…. ஒரு அரை அவர்அந்தப் பெண் காத்திருக்கும் வாங்க.
மொழி தெரியாத பெண் காத்திருக்கவும் அவசியம் இல்லாமல், மைதீனுக்கும் நெருக்கடி தராமல் கேசவன் போயிருக்கலாம். மைதீன் போகலாம் என்றதும் உடனே ஏறி அமர்ந்துகொண்டார். மைதீன் அவருக்கு இயல்பு இல்லாத வேகத்துடன் ஓட்டிக்கொண்டு போனார். இரண்டு பையன்கள் டபுள்சில்வந்த ஒரு சைக்கிளை ஏற்றிவிட இருந்தார். பையன்களுக்கு ஆயுள் கெட்டியாக இருந்தது. ஒரு கார் டிரைவர் மைதீனின் அம்மாவை வைதார்.

கொஞ்சம் பொறுமையா போகலாமேஎன்று கேசவன் பயத்துடன் சொன்னார்.
சீக்கிரமே திரும்பணும் சார். பாவம் தனியா நிக்கும் அந்தப் பெண். திருவான்மியூருக்குப் போகணுமே
பேருந்து நிலையம் வந்து சேர்ந்து, பணத்தை எண்ணாமலேயே சட்டைப் பையில் போட்டுக்கொண்டு சீறிக்கொண்டு புறப்பட்ட மைதீனை, ஆட்டோவைப் பார்த்துக்கொண்டு நின்றார் கேசவன்.

ஊர் வேலை முடிந்து உடனடியாகத் திரும்பினார். காபி சாப்பிட்டுவிட்டு, பழக்கம் காரணமாக ஆட்டோ ஸ்டாண்டை நோக்கினார். மைதீன் வண்டி இருந்த இடத்தில் வேறு ஒரு ஆட்டோவும் டிரைவரும் இருந்தார்கள். கேசவனைப் பார்த்ததும் அந்த டிரைவர் தானாகவே முன்வந்து செய்தியைச் சொன்னார்.
தெரியுமா சார்….. பஸ் ஸ்டாண்டு சவாரியை இறக்கிவிட்டுட்டுத் திரும்பும்போது ஆக்சிடெண்ட் ஏற்பட்டுடுச்சி சார்மைதீன் ஆஸ்பத்திரியில்தான் இருக்கான்.நேரம் ஆகஆக மலையில் கூட்டம் அடர்த்தியாகிக் கொண்டிருந்தது. மனிதர்களை உராய்வதும் இடித்துக் கொள்வதும் சங்கடமாக இருந்தது. அத்தனை பேரும் ஏதோ ஒன்றினுக்குக் காரணம் ஆகித் தான் காரணம் இல்லை என்று ஒப்புதல் பெற்றுக்கொள்ள வந்தவர்கள் போலத் தோன்றியது. மலையிலிருந்து சமதளத்துக்கு வந்து மீண்டும் ஒரு பேருந்தைப் பிடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

மைதீன் விபத்துக்குள்ளானதுக்குத் தான் காரணமா அல்லது யார் காரணம்? அவர் அழைத்து மைதீன் வந்தார். வேறு வேலை இருக்கிறது என்று அவர் சொன்னதும், வேறு ஆட்டோவைப் பிடித்திருக்கலாம் அவர். மனத்தளவில் மைதீனுக்கு நெருக்கடி தந்திருக்கிறார் அவர். மூர்த்தி புறப்படும் நேரம் பார்த்து வருவானேன்? அந்த நேரம் பார்த்தா டாக்டரிடம் அந்த அவசர நோயாளி வரவேண்டும். எல்லாம் எழுதி வைத்தது போல் நடந்து கொண்டிருக்கிறது. அவர் பேருந்தைப் பிடிக்கக்கூடாது என்பதற்காகவும், ஆட்டோ பிடித்தே விரைய வேண்டும் என்பதுக்காகவுமே சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட்டன போலல்லவா இருக்கிறது.

நான் இந்த ஊருக்கே மாற்றலாகி வந்து இருக்கக்கூடாது. இந்த ஏரியாவுக்கே வந்து இருக்கக்கூடாது. இந்தத் துறையை எடுத்துப் படித்திருக்கக்கூடாது. வலைகள் வலைகளாக அவர் தன்னை உரித்துக்கொண்டே போனார். நான் பிறந்திருக்கவே கூடாது என்ற இடத்துக்கு  வந்து சேர்ந்தார்.

கேசவன் தலையைக் குலுக்கிக்கொண்டார்.

பேருந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் போட்டு வைத்த சாலையில் போய்க்கொண்டே இருந்தது.

Last Updated ( Monday, 09 December 2013 03:30 )

 

நாளைக்கும் வரும் கிளிகள் - பிரபஞ்சன்

வீட்டைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமானதாக இல்லை. அவர் பெயரைச் சொன்னால், சின்ன குழந்தையும் வழிகாட்டும் என்று ஆசிரியர் சொன்னது பொய் இல்லை. பஸ்ஸைவிட்டு இறங்கி அவன் விழித்துக்கொண்டு நிற்கும்போது, ரோட்டோரம் இளநீர் விற்கும் அம்மாள் அவனை அழைத்து, மாமாவைப் பார்க்க வந்தீங்களா என்று கேட்டு, முகவரியையும் சொன்னார்.

மாமாவின் வீடு, ஊருக்கு வெளியே, இன்னும் காங்கிரீட் காடாகிவிடாத, மரங்கள் மற்றும் மைதானம் காணப்படும் பகுதியில் ஒரு மாந்தோப்புக்குள் இருந்தது. அத்தனை காலையிலும் நிறைய கார்கள் தோப்புக்குள் நிறைந்து இருந்தன. ஆசிரியர், மாமாவைப் பேட்டி காணச் சொன்னபோது, அவன் தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டு அவருக் குச் சௌகர்யமான நேரம் கேட்டான். உடனே மாமா சொன்னார்,

''காலையில் எத்தனை மணிக்குச் சாப்பிடுவீர்?''

''எட்டு, ஒன்பதுக்குள் சார்.''

''அந்த நேரம், நாம் சேர்ந்து சாப்பிடுவோம், சரியா?''

அந்தக் குரல் ஒரு நண்பரின் குரலாக இருந்தது. பிரமுகர்கள் குரல்போல இல்லை. பத்திரிகைக்காகப் பல பிரமுகர்களிடம் அவன் பேசி இருக்கிறான். அவர்களின் குரலில், ஒரு வெட்டுக் கத்தியின் முனை தெரியும். மாமாவோ, தொலைபேசியில் கை குலுக்கினார்.

வரவேற்பு அறையில் அவனை அமரவைத்துச் சென்றார் உதவியாளர். அவனுக்கு முன் பத்து இருபது பேர் இருந்தார்கள். பட்டு வேட்டி கட்டிய இரண்டு பேர், பட்டுப் புடைவை கட்டிய நிறையப் பெண்கள் இருந்தார்கள். ஏதோ பிரச்னைகளைச் சுமந்துகொண்டு, அந்தக் கணத்தில் ஆழ்ந்திருந்தார்போல, அவர்களின் அசாதா ரண அமைதி, சூழ்நிலைக்கு ஓர் அழுத்த வர்ணம் தந்திருந்தது. ஒரு புகழ்பெற்ற டாக்டரின் வரவேற்பு அறைக்குள் குழுமி இருக்கும் தீவிர நோயாளிகளின் வாசனையால் அந்த அறை நிரம்பி இருந்ததைப் போல அவன் உணர்ந்தான். எத்தனை வகையான வியாதிகள்? எவ்வளவு வியாதியஸ்தர்கள்? அவர்கள், திறக்கப்பட்டும் மூடப்பட்டும் இயங்கிய அறைக் கதவையே பார்த்தபடியே இருந்தார்கள். அந்த அறைக்குள்தான் மாமா இருக்கிறாராக்கும். நாலைந்து பேர்கள் கொத்தாக அறைக்குள் சென்றார்கள். அவன் மணியைப் பார்த்தான். எட்டாக இன்னும் இரண்டு நிமிஷங்கள் இருந்தன. சற்றுப் பொறுத்து அவன் வந்திருக்கலாம். அத்தனைக் கடமை உணர்வு தனக்குத் தேவைதானா என்று தனக்குள் விசாரித்துக்கொண்டான். எட்டரை மணிக்கு அறைக்குள் அழைக்கப்பட்டான். இரண்டு சாரிகளிலும் போடப்பட்ட சோபாக்களுக்கு எதிரில் ஒரு பிரம்பு நாற்காலியில் மாமா அமர்ந்திருந்தார். மாமா இரண்டு கைகளையும் முகத்துக்கு நேராகவைத்து அவனை வணங்கினார்.

மாமா என்பது வெள்ளை கதர் வேட்டியும் வெள்ளைச் சட்டையும். சுமார் அறுபது வயது. முகம் பளிச்சென்று புன்னகையும் திருப்தியும் கூடியதாக, பசியறியாதது என்று சொல்லும்படியாக இருந்தது. ரிட்டையர்டு ஆன, அடிமைச் சிரிப்பு இல்லாத மேல்நிலை குமாஸ்தா போலவும், திமிர் இல்லாத பரம்பரை மிராசுதாரர் போலவும் காணப்பட்டார். அறைகள் மனிதர்களை அடையாளம் காட்டும்தானே? அந்தப் பெரிய அறையில் ஆறு பேர் அமரும் இருக்கைகள் மட்டுமாக, நிறையக் காலி வெளிகள் இருந்தன. ஏதோ ஒரு கற்பூரமோ அல்லது மணப்பொருளோ, இந்திய வாசனை ஒன்று கமழ்ந்துகொண்டு இருந்தது. தங்க முலாம் பூசப்பட்ட சாமியார் மாதிரியான ஒருவரின் சிலை மட்டும் இருந்தது. வேறு எந்தச் சாமிப் படமும் இல்லை.

''ஒன்றும் சிரமம் இல்லையே... வீடு வந்து சேர...''

''இல்லை. எல்லோருக்கும் உங்களைத் தெரிகிறது.''

''என்னைத் தவிர'' என்று புன்னகைத்தார்.

அவன் உஷாரானான். எல்லோரையும்போல அல்ல அவர் என்று தோன்றியது.

''எங்கே உங்கள் வாசம்?''

அவன் ராணிப்பேட்டை என்றான்.

''அப்படியென்றால், ஏழு மணிக்குப் புறப்பட்டு இருப்பீர். பசிக்குமே... சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்.''

பக்கத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றார். உணவு மேசை நாற்காலிகள் மட்டும். மூன்று இலைகள் போடப்பட்டு இருந்தன. ஒரு மத்திய வயசு அம்மாள் வந்து பரிமாறினார். அவர்களுக்கு எதிரே, தனியாகப் போடப்பட்ட இலைக்கு இட்லி, வடை, சட்னி போட்டுவிட்டு, அப்புறம், அவர்கள் இலையில் பரிமாறினார்.

''உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளவில்லையே...''

''நான் மூர்த்தி.''

''நான் சந்துரு. சந்திரசேகரன். ஜனங்க மாமான்னு கூப்பிடறாங்க. ஏன்னு தெரியலை. தாயின் சகோதரருக்கு மாமான்னுதானே பேர். சரின்னு நான் ஏத்துக்கிட்டேன். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?''

''இல்லை.''

''நல்லது. எனக்கு உண்டு. நாற்பது வயசுக்கு மேல ஏற்பட்ட நம்பிக்கை அது. வெளியே ஒரு சிலையைப் பார்த்திருப்பீரே. அவர் என் குரு. அவர்தான் நம்பிக்கை ஏற்படுத்தினார். எதையாவது பற்றிக்கொள்ள வேண்டி இருக்கே. வீடு கண்டுபிடிக்கச் சிரமம் ஒண்ணும் இல்லையே?''

''சிரமமே இல்ல சார். குழந்தைகளுக்கும்கூட உங்களைத் தெரிகிறது.''

''எனக்குத்தான் தெரியவில்லை.''

மாமா சிரித்தார்.

மூர்த்தி, விழிப்புக்கு உள்ளானான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடம்.

சம்பளம் தருகிற முதலாளி நினைவுக்குள் வந்தார். அவன் தொழில் கடையை விரிக்கத் தொடங்கினான்.

''நீங்கள் எப்படி இந்த...'' - பொருத்தமான வார்த்தையைத் தேடினான் மூர்த்தி.

''துறைக்கு வந்தீர்கள்னு கேட்கிறீர் இல்லையா? தொழில்னு கேட்கத்தான் தோணித்து இல்லையா. இது எனக்குத் தொழில் இல்லை.''

மாமா சற்று நேரம், அந்த மூன்றாவது, யாரும் சாப்பிடாத இலையைப் பார்த்தார். பிறகு சொன்னார், ''என் மனைவி அவருடைய 26-வது வயதில் காலமானார். என்னுடைய 30-வது வயதில். ஏதோ ஒரு நோய். கடவுளுக்கு ஒரு காரணம், அழைத்துக்கொள்ள வேண்டி இருக்கே... அவர் வலியால் அவஸ்தைப்படும்போது நான் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொன்னேன். நோய் குணமாயிடும்னு நம்பிக்கை ஊட்டுவேன். நம்பிக்கைதான். அப்போல்லாம் அவர் முகத்தில் தோன்றின வெளிச்சம் இருக்கே... அப்பப்பா! அப்போ எனக்குத் தோன்றியது. துன்பத்துக்கு உள்ளாகிற மனுஷங்களுக்குத் தேவை ஒரு வார்த்தை. ஒரு வார்த்தைதான் சார். எந்த மருந்தைக் காட்டிலும் பெரிய மருந்து அது. எல்லாம் சரியாயிடும். நல்லாயிடும். பிரச்னையே இல்லை. இதுகூட மனிதர்களுக்குக் கிடைக்கிறது இல்லை. அதைச் செய்வேன்னு, அதுதான் என் வாழ்க்கைனு முடிவு எடுத்தேன். இப்பவும் அதைத்தான் செய்துக்கிட்டு இருக்கேன்.''

அவர், உண்ணப்படாத இலையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். பிறகு சொன்னார், ''என் அக்காள் மகள். ப்ளஸ் டூ படித்தாள். அவளைச் சராசரி என்று அவள் அம்மாவேசொல்வாள். முட்டாள் ஆசிரியர்கள், அவளைக் கடைசி பெஞ்ச்னு சொன்னார்கள். நான் மட்டும் அவளை நம்பினேன். அவள் படிப்பா. நல்லாப் படிப்பா. ரொம்ப நல்ல மார்க் வாங்குவேனு சொன்னேன். என்ன மாயம்னு தெரியலை. நல்ல மார்க் வாங்கி, பாஸ் பண்ணினாள்.எனக்கு இந்தப் படிப்பு மேல நம்பிக்கை இல்லை. ஆனால், அவளுக்கு அதைச் சொல்ல முடியுமோ? முட்டாள் டாக்டர்கள், இந்த நோய் குணமா காதுனு சொல்வார்கள்.

நான் சொல்றது இல்லை. சொல்லக் கூடாது. கேன்சர், ஹெச்.ஐ.வி. ஏதோ ஒரு எழவு. வர வழி இருக்கும்னா, போகவும் வழி இருக்கும்தானே? வெளியில ஒரு பேஷன்ட் இருக்கார். அவரை நான் குணப்படுத்திட்டு இருக்கேன். உங்களுக்குத் தெரியுமா? நான் எம்.டி. படிச்ச டாக்டர். 20 வருஷ அனுபவம் எனக்கு உண்டு.''

''ஆனா, மருந்து கொடுக்கிறது இல்லை.''

''வேறு மருந்து கொடுக்கிறேன். நோயாளிகள் சாய்ந்துகொள்ள தோள் தேடுபவர்கள், அன்புக்கு அன்பாகச் சொல்லப்படும் ஒரு வார்த்தைக்கு ஏங்குகிறார்கள். டாக்டர்கள் நோய்க்கு எதிராக வேறு ஒரு நோயை உடம்புக்குள் ஏற்றுகிறார்கள். நான் ஆத்மாவுக்குள் எதையாவது கொண்டு செல்ல விரும்புகிறேன்.''

''ஆத்மா மருத்துவம்?''

''ஆம், நாம் எல்லோரும் நோயாளிகள் சார். எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத நோயாளிகள். படுக்கையிலே சாய்க்கப்பட்டால் ஒழிய, நாம் அதை நம்பறது இல்லை. நாம் ஆரோக்கியமா இருக்கிறதா நம்பறோம். இல்லை. நான் உங்களை உங்களையே உள்நோக்கிப் பார்த்துக்கொள்ளச் சொல்லிக்கொடுக்கிறேன். அவ்வளவுதான்.''

நாங்கள் கை கழுவ எழுந்தோம்.

''சார்... இந்த இலைக்கு யாருமே வரலையே. யாரையாவது எதிர்பார்க்கறீங்களா?''

''என் மனைவி அங்கே சாப்பிடறார்.''

மாமாவுடைய நூலகத்துக்குள் மூர்த்தி அமர்த்திவைக்கப்பட்டான். நண்பர்களைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றார் மாமா. பேஷன்ட்டுகளை அவர் நண்பர்கள் என்றார். ஆங்கிலப் புத்தகங்களால் நூலகம் நிரம்பி வழிந் தது. ஐரோப்பிய, ஆசிய தத்துவத்தரிசிகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்தார்கள். மேசை மேல் சிலர் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தார்கள். வெளி வாசலை ஒட்டிய திறந்தவெளியில் மிளகாய் காய்ந்துகொண்டு இருந்தது. மூர்த்தி கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினான்.

மேலே சுவரில் ஓர் இளம்பெண்ணின் படம் மாட்டப்பட்டு இருந்தது. அதன் கீழே, ஏ.வி.எஸ்.மணிமேகலை என்று எழுதப்பட்டு, பிறப்பு, இறப்பு குறிப்பிட்டு இருந்தது. அந்தத் தலைப்பு எழுத்துகள் தொடர்ந்து அவன் நினைவுக்குள் வந்துசேர்ந்தன. அடிக்கடி கேட்ட பெயர் அது.

மாமா வந்து சேர்ந்தார். ''காக்கவைத்தமைக்கு மன்னியுங்கள்'' என்றார்.

''இந்தப் படம்...''

''என் மனைவி.''

''ஏ.வி.எஸ். என்கிற எழுத்துகளை அடிக்கடி கேட்டதாக இருக்கிறது.''

''பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அந்தப் பெயரில்தான் இருக்கும். எல்லாம் இலவச அமைப்புகள்.''

மூர்த்திக்கு நினைவுவந்தது. அவன் தங்கை, அந்த மருத்துவமனையில்தான் சேர்க்கப் பட்டாள். சிலவருடங்களுக்குமுன்பு. அதைச் சொன்னான்.

''அப்படியா?'' என்ற மாமா, ''என்ன பிரச்னை. இப்போ நன்றாக இருக்கிறாரா?''

''நன்றாகி, மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள். ஸ்டவ் வெடித்து ஆஸ்பத்தி ரிக்கு வந்தாள். பூர்ண குணமாகி, ஆட்டோவில் வீடு திரும்பும்போது, லாரி மோதிப் பலியா னாள்.''

''கல்யாணம் ஆனவரா?''

''அதனாலதான் ஸ்டவ் வெடித்தது.''

''ம்... கணவன் இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு இருப்பானே?''

''அதேதான்!''

''புரிகிறது'' என்றார் மாமா.

சற்று அமைதிக்குப் பிறகு, மாமா சொன் னார்... ''இந்தியாவில் பெண்கள் பிறப்பதே பாவம்.''

அப்புறம், மாமா சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். ''மதியம் ஒரு மணிக்கு, நீங்கள் இங்கு இருந்தால் பார்க்கலாம் சார். இரண்டு பச்சைக் கிளிகள் இங்கே வந்து, இந்தச் சுவரில் உட்காரும். நான் தயாராக கொய்யாப் பழமோ, வாழைப் பழமோ அவற்றுக்கு முன்னால் வைப்பேன். சாப்பிட்டுப் போய்விடும். ஒரு விஷயம்... முதலில் தனியாகத்தான் ஒரு கிளி வந்துச்சு. அப்புறம் அது துணையைக் கூப்பிட் டுக் கொண்டுவந்தது. இணை பிரியாத கிளிகள். எனக்கு என்ன பிரச்னைன்னா, என்னால் ஊர்ப் பயணம் போக முடிவது இல்லை.  அதுகள் வந்து காத்திருந்து ஏமாந்து போயிடுமோனு கவலையா இருக்கு.''

''சமையல் பரிமாறினாங்களே, அந்த அம்மாள்...''

''அந்த அம்மாள் எங்களோட ரொம்ப காலமா இருக்கிறவர். என் மனைவி இருக்கும் போதே இங்கே இருந்தவர். அவங்க வெச்சாலும் கிளிகள் சாப்பிடுவது இல்லை. ஏன் நாமே எல்லோரிடமும் சிநேகம் பண்றமோ? இல்லையே? அந்த உணர்வு பறவைகளுக்கு இருக்க முடியாதா... இருக்கு.''

''கல் வெச்சுக் கட்டிய வீடுகளுக்கு முகம் இருக்கு. அது நம்மோடு பேசும்னு ஒரு எழுத் தாளர் எழுதியிருக்கார்.''

''தஸ்தயேவ்ஸ்கிதானே?''

''ஆமாம்.''

மூர்த்தி புறப்படத் தயார் ஆனான்.

''மத்தியானம் சாப்பிடலாமே, சேர்ந்து.''

''இருக்கட்டும் சார். அதிகம் சாப்பிடுட் டேன்.''

மாமா சிரித்தார். சொன்னார்... ''ஒரு வேண்டுகோள்...''

''சொல்லுங்கள்...''

''பேட்டின்னோ, கட்டுரைன்னோ என்னைப் பற்றி எதுவும் எழுத வேணாம். எனக்குக்கூச்சமா இருக்கும். பேசணும்னு தோணியது.பேசினேன். உங்க எடிட்டர் எனக்கு வேண்டியவன். ரொம்ப வருஷத்துச் சினேகன். முகத்துக்கு முன்னால மறுக்க முடியலை. தயவு செய்து ஒண்ணும் எழுத வேண்டாம். நான் அவன்கிட்ட பேசறேன்.''

''எனக்கும் தோணுச்சு சார்... எழுதலை.''

அவர் கைகுலுக்கினார். ''கார்ல போகலாமே...''

''வேணாம் சார். பல இடங்களுக்குப் போக ணும்...''

வெயில் கடுமையாக இருந்தது. வெயில் எப்போதுதான் நடந்து செல்பவர்களுக்கு இனிமையாக இருந்தது? இந்நேரம், கிளிகள் மாமா கொடுத்த பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். அவனுக்குத் திடுமெனச் சந்தோஷமாக இருந்தது. சங்கரபவனில் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொண்டான். அறைக்குத் திரும்பியவுடன் குளித்தான். மேசை மேல் சாப்பாட்டைப்பிரித்துவைத்தான். இலையை விரித்து சாதம் பரிமாறினான். கூட்டு, பொரியல் பரிமாறினான். சாம்பார் ஊற்றினான்.

வழக்கமாகச் சாப்பிடும் தட்டை எடுத்து தனக்கு முன் வைத்துக்கொண்டான். அதில் சோறு பரிமாறிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினான்.

சுமதியோட சேர்ந்து சாப்பிட்டு எத்தனைக் காலமாயிற்று?

அவனுக்கு அந்தக் கிளிகள் நினைவுக்கு வந்தன!

 

நன்றி: ஆனந்த விகடன்.

Last Updated ( Thursday, 28 November 2013 06:20 )

 
More Articles...
<< Start < Prev 1 2 3 Next > End >>
Page 1 of 3
cheap ugg boots moncler doudounecheap nfl jerseys Packers Jerseyscowboys jerseyspatriots jerseysSteelers Jerseysclassic tall ugg bootsugg australiaugg clearancediscount moncler jacketsmoncler jacketscheap canada goosecanada goose outlet Cheap Thomas Sabo Jewelry