Events
User registration
article thumbnailநன்றி
இந்த இணைய தள முயற்சியை எனக்கு சாத்தியப்படுத்தி கொண்டிருக்கிற என் இனிய நண்பர் ஆர்.எம். பரணீதரன் அவர்களுக்கு நன்றி!!.                                         -பிரபஞ்சன்
Who is online
We have 3 guests online
Visitors Counter
Visitors:You are visitor number 383027You are visitor number 383027You are visitor number 383027You are visitor number 383027You are visitor number 383027You are visitor number 383027

நேர்காணல்

“இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்!”

 நேர்காணல் சந்திப்பு:  தமிழ்மகன், வெய்யில் படங்கள்: மீ.நிவேதன்

தன்னம்பிக்கை மிளிரும் குரல், இளைஞனென்று தன்னை முழுமையாக நம்பும் உடல்மொழி, நேர்த்தியான உடை, தெளிவான உரையாடல்...உற்சாகமாக இருக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

ஒரு பேச்சுலர் அறைக்கே உரித்தான சகல அம்சங்களோடும் இருந்தது, திருவல்லிக்கேணி மேன்ஷன் அறை. புத்தகங்களுக்குப் போக மீதமிருக்கும் இடத்தில் அமர்ந்திருக் கிறார். மாலை வெயில் இறங்கிக்கொண்டிருக்கிறது. தெருவில் ஒரு பெண் ஏதோவொன்றை விற்க கூவிக் கொண்டு போகும் சத்தம்... சற்று காது கொடுத்துவிட்டு,  ஒரு புன்னகையுடன் தயாராகிறார்.

"ஒரு நூற்றாண்டை முழுமைசெய்திருக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``தமிழ்ச் சிறுகதைகள் பாரதியில் இருந்துதான் தொடங்குகின்றன என்பது என் கருத்து. வ.வே.சு அய்யர்கூட அதே காலகட்டத்தில் சிறுகதைகள் எழுதினார் என்றாலும், சிறுகதை என்று சொல்ல முடிகிற தகுதி, பாரதியின் கதைகளுக்குத்தான் உண்டு. பின்னாட்களில் வ.வே.சு அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ தாகூர் கதையின் தழுவல் என்று நிரூபிக்கப்பட்டது. இலக்கிய வடிவங்களிலேயே மிகச் சவாலானது, சிறுகதை வடிவம்தான். சிறுகதை என்கிற வடிவம் எழுதவும் சரி; வாசிக்கவும் சரி; எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. பாரதி தொட்டு இன்று வரைக்குமான சிறுகதைகளின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியம், உலக இலக்கியத்துக்கு வழங்கியிருக்கும் சிறந்த பங்களிப்பு என்று நமது சிறுகதைகளைச் சொல்ல முடியும். சுந்தர ராமசாமி சொல்வதுபோல நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளுமைகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் தமிழில் சிறுகதைகள் எழுதப்பட்டிருக் கின்றன. ஆனால், உலக மொழிகளில் இருந்து தமிழுக்கு கதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அளவுக்கு, தமிழ்ச் சிறுகதைகள் மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. இது தமிழ்ச் சிறுகதைகளுக்கு நிகழ்ந்த மிகப் பெரிய சோகம். நீண்ட காலமாகவே எனக்கு இந்த மனக்குறை உண்டு.’’

"இன்று சிறுகதை உலகம் தேக்கம் கண்டிருக்கிறதா?’’ 

``ஆமாம். இன்று சிறுகதைகளே மிகக் குறைவாகத்தான் எழுதப்படுகின்றன. நன்றாக எழுதுகிறவர்களும் தொடர்ச்சியாக எழுதுவது இல்லை. தனிப்பட்ட முறையில் நாம் யாரிடமும் சென்று, `நீங்கள் ஏன் எழுதவில்லை?’ என்று கேட்க முடியாது. எழுதுவதற்கு எப்படிப் பல காரணங்கள் இருக்கின்றனவோ, அதுபோல ஒருவர் எழுதாமல் இருப்பதற்கும் காரணங்கள் இருக்கக்கூடும். 

இதற்குச் சூழல் ஒரு முக்கியக் காரணம். ஒரு வருடத்தின் இறுதியில் வணிகக் கணக்குகளை முடிப்பதைப்போல, அந்த ஆண்டில் வெளியான சிறுகதைகளைப் பற்றிய உரையாடல்களை நிகழ்த்த வேண்டும்; கருத்தரங்குகளை நடத்த வேண்டும்; அடுத்தகட்ட நகர்வுக்கான முயற்சிகளைப் பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டும். விமர்சனங்களும் பாராட்டுக்களும் படைப்பியக்கத்துக்கு உந்துதலைத் தருபவை. ஆரோக்கியமான சூழலை நாம்தான் உருவாக்க வேண்டும். இந்தத் தேக்கம் விரைவில் உடையும் என்று நம்புவோம். அண்மைக் காலத்தில் (2010-2015) சில அருமையான சிறுகதைகள் வெளிவந்தே இருக்கின்றன.’’

“தமிழ் இலக்கியத்தில் விமர்சனம் என்ற துறையே இன்று இல்லாமல் போய்விட்டதே?’’

"ஆமாம். இந்தத் தலைமுறையில் விமர்சகர்கள் உருவாகவே இல்லை. அப்படி விமர்சிக்கிறவர்களும் கோஷ்டி சார்ந்து விமர்சிக்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்தவர்களை நன்றாக எழுதுவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். தமிழகத்தின் அரசியலைப்போல இருக்கிறது இலக்கியத் துறையும். தத்துவம் அற்றது நம் அரசியல். அறம் குறைந்தது நம் இலக்கியத் துறை. நன்றாக எழுதுபவரை, நன்றாக எழுதுகிறார் என்று சொல்லாதவர்கள் நம் நண்பர்கள்.’’

"விடுதலை அடைந்த இந்தியாவின் முதல் தலைமுறைக் குழந்தைகளில் ஒருவர் நீங்கள். இந்திய தேசமும் நீங்களும் சமகாலத்தில் சேர்ந்து வளர்ந்தவர்கள். உங்களையும் தேசத்தையும் வளர்ச்சியில் ஒப்பிட்டுச் சொல்ல முடியுமா?’’

"இந்தியா சரியாகப் பேணி வளர்க்கப்படாத குழந்தையாக இருக்கிறது. நான் பேணி வளர்க்கப்பட்டவன். எட்டாவது வயதிலேயே நான் நூலகத்துக்குள் நுழைந்துவிட்டேன். க.நா.சு., அ.கி.கோபாலன், அ.கி.ஜெயராமன், ஆர்.சண்முகசுந்தரம் போன்றோர் அப்போது ஏராளமான உலக இலக்கியங்களை மொழிபெயர்த்திருந்தார்கள். எனது 10-ம் வகுப்பை முடிப்பதற்குள் பெரும்பாலான நூல்களையும் வாசித்து முடித்துவிட்டேன். அதற்கான சூழல் எனக்கு இருந்தது. இந்தச் சூழல் இந்தியாவுக்கு இல்லை. 

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயம் நேரு காலத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை நேரு கொண்டுவந்தபோது, `கனரகத் தொழிற்சாலைகள்தான் இந்தியாவைக் காக்கும்’ என்றார். விவசாயத்தை முற்றிலுமாகப் புறக்கணித்து, தொழிற்சாலைகளுக்கான இடத்தை வகுத்துக்கொடுத்தார். இன்றுவரை விவசாயம் மீளவே இல்லை. இன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாடாக இந்தியா மாறி நிற்கிறது. லெனினும் மா சே துங்கும் அடிப்படையில் ஒரே மார்க்ஸியத்தைத்தான் பின்பற்றினார்கள். ஆனால் மாவோ, சீனா ஒரு விவசாய நாடு என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டார். லெனினும் தன்னுடைய தேச வளர்ச்சிக்கு தொழிற்புரட்சிதான் சரியான வழி என்று நம்பினார்.  இந்தியாவுக்கு தலைமையேற்றிருந்த நேருவின் காங்கிரஸுக்கோ, இந்தத் தேசத்துக்கான தத்துவமும் நடைமுறை உண்மையும் புரியவில்லை.

ஆகவே, இந்தியாவின் வளர்ச்சி, கோளாறான வளர்ச்சிதான். அதனால்தான் இன்று மதவாதக் கருத்துக்கள் இவ்வளவு தீவிரமடைந்திருக்கின்றன. அடிப்படை மனிதன் தன்னிறைவு அடையவே இல்லை. அப்படி நடந்திருந்தால், கடவுளின் மீது இவ்வளவு வெறி வரவேண்டிய அவசியமே இல்லை. இதைத்தான் `முழுமைபெற்ற மனிதனுக்கு, கடவுள் அவசியமில்லை’ என்று மார்க்ஸ் சொல்கிறார். வறுமைதான் அவனைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது. சக மனிதன் மீது நம்பிக்கை வைக்கமுடிந்தால், மதம் அவசியமின்றி போய்விடும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் இந்தியாவைப் போல் இல்லை.’’

"ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் கவிதை எழுதினீர்கள். ஆனால், அதை ஏன் தொடரவில்லை?’’

"நான் ‘வானம்பாடி’ இயக்கத்தைச் சேர்ந்தவன். `பிரபஞ்சன்’ என்ற பெயரை வானம்பாடிகள்தான் எனக்குத் தந்தார்கள்.  வானம்பாடி இயக்கம் தொடங்கப் பட்டபோது, அதில் நான் இணைந்தேன். அப்போது ஆந்திர நக்சல்பாரி கவிஞர்கள் சாதி, மத அடையாளமற்ற பெயர்களில் எழுதிக்கொண்டிருந்தார்கள். அதைப் போலவே நாமும் சாதி, மத அடையாளமற்ற பெயர்களில் எழுத வேண்டும் என்று வானம்பாடிகள் தீர்மானித்தார்கள். ரங்கராஜன், `அக்னிபுத்திரன்’ ஆனார்; ஜெகநாதன், `புவியரசு’, பாலசுப்ரமணியன், `சிற்பி’, முகமது மேத்தா, `மு.மேத்தா’, மீ.ராஜேந்திரன், `மீரா’ எனப் பெயர்கள் மாற்றப்பட்டன.

அப்போது நான் நிறையக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் அவை வேறு ஒரு கவிதையின் பாதிப்பில் நான் எழுதுபவையாக இருந்தன. கவிதைக்குத் தொண்டுசெய்வது என்பது, அதை எழுதுவதன் வாயிலாகவும் செய்யலாம்; எழுதாமல் இருப்பதன் வாயிலாகவும் செய்யலாம். ஆத்மாநாம் என் நண்பர். அவர் மூலமாகத்தான் என்னுடையவை கவிதைகள் அல்ல என்ற உண்மையைக் கற்றேன். நான் சிறுகதைகள் எழுதுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். பெரிய வெற்றி பெற்றுவிட்டேன் என்று சொல்வதற்கு இல்லை. என்றாலும், கவனிக்கத்தக்கக் கதைகளை நான் எழுதியிருப்பதாக நம்புகிறேன்.’’

"இன்றைய கவிதைகள்..?’’ 

"ஒரு பாமரனை, ஒன்றும் தெரியாதவனை என்னால் ஏமாற்ற முடியும். இது கவிதை என்று அவனை நம்பவைக்க முடியும். இன்றைக்கு நிறையப் பேர் அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை. ஒரு வெற்றிபெற்ற வடிவத்தை எடுத்துக்கொண்டு அதைப்போலவே எழுதுகிறார்கள். மனுஷ்ய புத்திரன் மாதிரி இருபது பேர் எழுதுகிறார்கள். இங்குதான் விமர்சகர்கள் தேவைப்படுகிறார்கள். க.நா.சு., சி.சு.செல்லப்பா மாதிரி இந்தத் தலைமுறைக்கு பத்துப் பேர் வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கறாராக விமர்சனம் செய்ய வேண்டும். அப்போதுதான் சூழல் சரியாக இருக்கும்.’’

"பெண்கள் உலகம் குறித்து நிறைய எழுதியவர் நீங்கள். தமிழில் பெண்ணியச் செயல்பாடுகள், இலக்கியப் பங்களிப்புகள் நம்பிக்கை தரும்படியாக இருக்கின்றனவா?’’

 ``இலக்கியம் என்று இல்லை, அனைத்து விஷயங்களிலுமே பெண்கள் தங்களது சரிபாதியான இடத்தில் தங்களை நிரப்பிக்கொள்ள வேண்டும். பெண்களின் உரையாடல், பெண்களுக்கான உரையாடல், பெண் மொழியிலான உரையாடல் 70-களுக்குப் பிறகுதான் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, லீனா மணிமேகலை போன்றோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஒரு புதிய உரையாடலையே வாழ்க்கைப் பார்வை பற்றி அவர்கள் உருவாக்கினார்கள். உரைநடை எழுதுவதற்கு அரசியல் தெளிவு வேண்டும். பெண்களிடம் அது இருக்கிறது. ஆனால், அதை அவர்கள் எழுத முன்வரவில்லை. அவர்கள் உரைநடைக்கு வந்திருந்தால், உரைநடை இலக்கியம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஆண்களால் தொட முடியாத பல இடங்களை அவர்களால் தொட முடியும். கவிதையில் தொட்டிருக்கிறார்கள். சல்மாவின் `இரண்டாம் ஜாமங்களின் கதை’யில் பல நுட்பமான விஷயங்களை எழுதியிருக்கிறார் அல்லவா... அந்த மாதிரி நிறையக் கிடைத்திருக்கும். மனுஷி என்ற பெயரில் புதிதாக ஒருவர் கவிதைகள் எழுதுகிறார். கதையும் எழுதுகிறார். எதிர்காலத்தில் அவர் சிறப்பாக இயங்குவார்.’’ 

"உங்களது அப்பா கள்ளுக்கடை நடத்தியவர். நீங்கள் பாண்டிச்சேரிக்காரர் வேறு... இன்று குடிப்பழக்கம் தமிழகத்தின் மிகப் பெரிய பிரச்னையாக மாறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ 

``சமூகத்தில் குடி இவ்வளவு கொண்டாடப்படக் கூடாது. மனிதன் அன்றாட அழுத்தங்களுக்குள் இருந்து தன்னை இளைப்பாற்றிக்கொள்ள இசை கேட்பதுபோல, நடனத்தைக் காண்பதுபோல மதுவைப் பாவிக்க வேண்டும். மது அருந்தக் கூடாது என்று ஒரு சமூகத்துக்கு நான் சொல்ல முடியாது. என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், குடிக்கிறவர்கள் தங்களது உடலுக்கான அளவையும் பொருளாதாரத்தையும் மனதில்கொள்ள வேண்டும். குடி, ஒரு வீட்டில் மனைவியை, குழந்தையைப் பாதிப்படையச் செய்கிறது என்றால், அந்தக் குடி நியாயமற்றது. இதை உணராதவர்களைக் குடிக்க அனுமதிக்கக் கூடாது. 

மதுக்கடைகளை ஒரேயடியாக மூடுவதும் சாத்தியமற்றது. கள்ளச்சாராயம் அதிகமாகும். வார்னீஷைக் குடிப்பான். இது மேலும் சிக்கலாகும். சிகரெட்டுக்கு எதிரான பிரசாரம் இன்று சிகரெட் பழக்கத்தைக் குறைத்திருக்கிறது. அதுபோலவே, குடிக்கு எதிரான பிரசாரங்களையும் நாம் தொடங்க வேண்டும்.’’

"மதவாத வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய அளவில் பலரும் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி அனுப்பினர். தமிழ்நாட்டில் இருந்து விருதை யாரும் திருப்பிக்கொடுக்காதது குறித்து நிறையச் சர்ச்சைகள் நடந்தன. சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் என்கிற முறையில் உங்களது நிலைப்பாடு என்ன?’’ 

``எனக்கு விருதைத் திருப்பிக்கொடுப்பதில் உடன்பாடு இல்லை. இத்தனை வருடங்கள் நான் எழுதியதற்காக வழங்கப்பட்ட அங்கீகாரம்தான் அந்த விருது. அதை, ஒரு சமூக இழிவைக் கண்டித்துத் திருப்பிக் கொடுக்கும் பொருளாக நான் கருதவில்லை. இப்படியான மோசமான சூழல்கள் ஏற்படும்போது நாம் எதிர்வினை செய்யத்தான் வேண்டும். இன்னும் மோசமான நிகழ்வுகள் எல்லாம்கூட நடக்கப்போகின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்துக்களும் முஸ்லிம்களும் தெருவில் அடித்துக்கொண்டு நிற்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுவருவதுபோல அரசியல் நடக்கிறது. எல்லா மாநிலங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் இதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அடுத்த தேர்தலை நோக்கி இதை நகர்த்திக்கொண்டுபோகிறார்கள். அப்போதுதானே தேர்தலில் மதவாதிகள் வெற்றிபெற முடியும்?

மதவாதத்துக்கு எதிராக இயங்க வேண்டிய கட்டாயம் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனக்கு இந்த அகாடமி விருது பிரச்னை பெரிதாகத் தோன்றவில்லை. அகாடமி விருதுபெற்ற பல படைப்புகளைப் பற்றித்தான் நமக்குத் தெரியுமே. நான் தொடர்ந்து எனக்குள்ளாகவே கேட்டுக் கொள்ளும் முக்கியக் கேள்வி ஒன்றும் இருக்கிறது. பிரபஞ்சன் விருதைத் திருப்பிக்கொடுத்தால், `அய்யோ...’ என்று கூனிக்குறுகி வெட்கப்பட இந்த நாட்டில் ஒரு தலைவன் இருக்கிறானா? அப்படி இருந்தால் சொல்லுங்கள்... நான் திருப்பிக்கொடுத்தால் யார் வருத்தப்படுவார்? அரசு வெட்கம்கொள்ளுமா? எந்த விளைவையும் ஏற்படுத்தாத ஒன்றுக்காக ஏன் நான் இதைச் செய்ய வேண்டும்?’’ 

"ஆனால், தொடரும் மதவாதப் பிரச்னைகளில் தமிழ் எழுத்தாளர்கள் பெரிய அளவில் மௌனம் சாதிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறதே...’’

``இந்த விஷயத்துக்கு என்று இல்லை, எல்லாவற்றுக்குமே நமது எழுத்தாளர்கள் மௌனமாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்திலேயே இதுதான் நடந்தது. மனிதன் வாயில் மலம் திணித்தபோது, ஆணவக்கொலைகள் தொடர்ந்து நடக்கும்போது, தமிழ் எழுத்தாளர்கள் எதிர்வினையை யோசிக்க வேண்டியிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு பொதுவான அமைப்பு இல்லை.’’

"மகாபாரதம் குறித்து தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். இன்றைய இளைஞர்கள் மகாபாரதத்தை வாசிக்கவேண்டியது அவசியமா... ஏன்?’’ 

"இன்றைய இளைஞன் ஒருவன் வாழ்க்கையில் எதிர்கொள்கிற எல்லா சிக்கல்களையும் மகாபாரத மாந்தர்களும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அதற்கான தீர்வுகளை அக்காலத்துக்கு ஏற்ப கண்டடைந்து இருக்கிறார்கள்.மகாபாரதத்தில் தர்மங்களை மூன்று விதங்களாகப் பிரிக்கிறார்கள். நாம் சட்டங்களைப் பிரிப்பது போல. முதலாவது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்குமானது. இரண்டாவது, உங்களுக்கும் அரசுக்குமானது. மூன்றாவது, நிரந்தர தர்மம். இந்த நிரந்தர தர்மம் என்பது எல்லா காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. சமூகத்தோடு உங்களுக்கு இருக்கும் அத்தனை உறவுகளிலும் உங்களைப் பாதிக்கும் தர்மங்களைப் பேசுகிறது. இது அறிந்து கொள்ளப்பட வேண்டியது அல்லவா?

யுத்த வெற்றிக்குப் பிறகு பாண்டவர்கள் சொர்க்கத்துக்குச் செல்கிறார்கள். செல்லும் பாதையில் திரௌபதை தவறி விழுந்து மாய்கிறாள். பதறிப்போய் பீமன், தர்மனை அழைக்கிறான். அதற்கு தர்மன், `போகட்டும்... அவள் என்னைவிட அர்ஜுனனைத்தானே அதிகம் நேசித்தாள்!’ என்று சொல்கிறான். பீமனிடம் திரௌபதை ஒருமுறை `நீ எனக்கு முதல் ஆளாக இருந்திருக்கக் கூடாதா!’ என்று நொந்துகொள்கிறாள். துயரம் என்னவென்றால், ஐந்து பேரில் யாருமே திரௌபதையை நேசிக்கவில்லை. எல்லோருமே பயன்படுத்த மட்டுமே செய்தார்கள். இந்தச் சம்பவத்தில் இருந்து ஒரு சமூகத்தையே புரிந்துகொள்ள முடியுமே. ஆணின் மனதை அறிந்துகொள்ள முடியுமே... இதுபோல நூறு விஷயங்களை.’’

"புராணப் பாத்திரங்கள் கடவுளாக மாற்றம்பெற்றிருக்கிற நமது சமூகத்தில், மதவாதப் பிரசாரம் பரவிவரும் நிலையில், இந்த மகாபாரத வாசிப்பு சிக்கலானதாக மாறாதா?’’

"உங்களது கேள்வி முக்கியமானது. நிச்சயமாக இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இப்போது ராமாயணம் குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். தப்பித்தவறிக்கூட மதக் கருத்துகளுக்குத் துணைசெய்யும் விதத்தில் எழுதிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். இன்று பகல் முழுக்க ஓர் உபந்யாசம் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் அயோத்தி பற்றி அவ்வளவு புகழப்படுகிறது. நான் அப்போதே அயோத்தியைக் குறித்து எழுதக் கூடாது என முடிவுசெய்துவிட்டேன். அப்படியே எழுதினாலும் அதை ஓர் இஸ்லாமியரின் பார்வையில்தான் எழுதுவேன். இங்கே பெரிய பிரச்னை என்னவென்றால், ஆன்மிகத்தையும் தத்துவத்தையும் நாம் மதம் சார்ந்த விஷயத்தோடு போட்டுக் குழப்பிவிட்டோம். நான் பக்தி பூர்வமாக மகாபாரதத்தை அணுகவில்லை. 

இந்தச் சிக்கலை நான் ஏற்கெனவே உணர்ந்திருக்கிறேன். `வானம் வசப்படும்’ நாவலில் ஒரு பாத்திரம், ஒரு கிறித்தவக் கோயிலை முன்னின்று இடிப்பதாக வரும். அந்த இடத்தில் ஓர் இந்துக் கோயில் விஸ்தரிக்கப்படும். அயோத்தி ரதயாத்திரை முடிந்து ஒரு `குரூப்’, அந்தக் கிறித்தவக் கோயிலின் முன் நின்று பிரச்னை செய்தார்கள். நாவலின் ஒரு பகுதியை ஆதார மாகவும் அவர்கள் காட்டினார்கள். ஆபத்தைப் பாருங்கள். இந்தச் சம்பவம் குறித்து அ.மார்க்ஸ், ரவிக்குமார் இருவரும் ஒரு புத்தகம் எழுதினார்கள். அதற்கு நான்தான் முன்னுரை எழுதினேன். வரலாற்றைக்கூட அது யாருக்கு உதவும் என்று பார்த்துதான் எழுத வேண்டியிருக்கிறது.’’ 

"நீங்கள் முறையாக இசை கற்றுக்கொண்டவர் அல்லவா? அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்...’’

``கல்லூரிக் காலத்தில் நான் வீணை கற்றுக்கொண்டேன். சிவானந்தம் என்ற குருவிடம் நானும் தஞ்சை ப்ரகாஷும் சேர்ந்து கற்றுக்கொண்டோம். பிறகு மிருதங்கம், வாய்ப்பாட்டு என இசை ஆர்வத்தோடே கழிந்தன அந்த நாட்கள். என்னளவில் இசையில் ஈடுபடும் ஒருவன் ஒருபோதும்  குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டான். மனிதக் கறைகளைக் கழுவிவிடக்கூடியது சங்கீதம். இசையில் ஈடுபடும் ஒருவர் நிச்சயமாகப் பண்பட்டவராகவே இருப்பார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.’’ 

"அப்படியானால் இசையைக் கற்கும் சாத்தியமுள்ள, அதை ஒருவகையில் தங்களது உடைமைபோல் ஆக்கிவிட்ட  மேல்தட்டு வர்க்க மனிதர்கள் எல்லோருமே பண்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியுமா?’’

``இதே கேள்வியை டி.எம்.கிருஷ்ணா எழுப்பியிருக் கிறார். `சங்கீதம் தனிப்பட்டவர்களின் சொத்தா... ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதில் பங்கு இல்லையா என்ன?’ என்று கேட்டிருக்கிறார். அடிப்படையில் கருவி இசையாக இருக்கட்டும், சங்கீதமாக இருக்கட்டும்... எல்லாமே வெகுமக்களிடம் இருந்துதான் பிறந்திருக்கின்றன. காலப்போக்கில் அதை மேல்தட்டு மக்கள் வசப்படுத்தியிருக்கிறார்கள். இசை எல்லோருக்கும் பொதுவானது. சாதி, மத பேதங்களைக் கடந்து இசை ஒரு மனிதனின் உணர்வுகளை, குணநலன்களைப் பண்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாரதகான சபா கூட்டத்தில் நானும் ஒருவன்தான். நான் பண்பட்டவன் அல்ல; பண்பட முயற்சிப்பவன்.’’

"இந்த மிடுக்கான, தீர்மானமான உடைப் பழக்கத்தை எப்போதுதிருந்து, ஏன் கைக்கொண்டீர்கள்?’’

"நான் என் சிநேகிதிகளால் இயக்கப்படுபவன். அவர்கள்தான் என் உடைகளைத் தீர்மானிக்கிறார்கள். உலகத்துக்கு நாம் நம்மை எப்படி வழங்குகிறோம் என்பதன் முதல் சூத்திரமே ஆடைகள்தான். சமூகம் நம்மை அனுமானித்துக்கொள்ள நாம் வழங்கும் உதவிக் குறிப்பே ஆடை. என் வெள்ளை மீசையை டை அடித்துக்கொள்ளச் சொல்லி நண்பர்கள் சொல்கிறார்கள். நண்பிகள், நான் அப்படி இருப்பதில் அழகாய் இருக்கிறேன் என்கிறார்கள். நான் நண்பிகள் பக்கமே!’’

"மேன்ஷன் வாழ்வு உங்களது தனிப்பட்ட வாழ்வில், இலக்கியத்தில் என்னவாக பங்காற்றியிருக்கிறது? முழுவதுமாக இந்த மாதிரியான வாழ்வில் உடன்படுகிறீர்களா?’’

``கடந்த 36 வருடங்களாகவே நான் தனியன்தான். இன்றும் தொடர்கிறது என் மேன்ஷன் வாழ்க்கை. தனிமையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அது என்மேல் திணிக்கப்பட்டது. உறவுகளுக்குள், நட்புகளுக்குள் இருந்து, சில பொழுதுகளை, நாட்களை நான் தேர்வுசெய்து தனிமைப் படுத்திக்கொள்ளும் போது மட்டுமே தனிமை, இனிமை; அல்லாவிடில் அது துயரம். என் கதைகளை ஆய்வுசெய்த ஒரு மாணவர், என் பாத்திரங்கள் `முதல் வரியில் தெருவில் இறங்குகிறார்கள்; அலைகிறார்கள். பிறகு தன் தனிக்கூட்டுக்குள் புகுகிறார்கள்’ என்று எழுதினார். அது சரியாக இருக்கும்.

தனியாக இருப்பது பயம் தருவதாக இருக்கிறது. உறக்கம் கலைப்பதாக இருக்கிறது. நானும் நானும் மட்டுமே என் வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக இல்லை. ஆனாலும், வாழ்ந்தே தீரணும் வாழ்க்கை. கொடுத்தே தீரணும் கடன்.

உணவு விடுதிகளில், இயந்திரங்களில் உருவான சோப்பு டப்பாக்களைப்போல, பலகார, உணவுப் பட்டியல் வெறுப்பைத் தருகிறது. இட்லி, வடை, பொங்கல், பூரி, தோசை என எத்தனை ஆண்டுகள் தின்பது? அறுபது எழுபது ஆண்டுகள் காலைப் பலகாரமாக இட்லி தின்கிற இனம். மகத்தான கண்டுபிடிப்புகளை, படைப்புகளைத் தரும் சாத்தியம் குறைவு. ஐரோப்பிய எழுத்தாளர்கள் பயணங்கள் மூலமே இந்தச் சோர்வை வெல்கிறார்கள்.’’

"உங்களது குடும்பம், மனைவி குறித்து நினைவுகூர விரும்பும் விஷயம்?’’

"என் மனைவி 2011-ம் ஆண்டில் காலமாகும்போது, நான் கனடாவில் இருந்தேன். குழந்தைகள் பிரான்ஸில் இருந்தார்கள். அடக்கம் செய்யவேநாங்கள் ஒன்றுசேர்ந்தோம். 72 ஆண்டுகள் நான் வாழ்ந்தமைக்குக் காரணம், என் மனைவி வாழ்ந்தார் என்பது மட்டும்தான். குடும்பம் எப்படி நடந்தது; குழந்தைகள் எப்படி வளர்ந்தார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. மிகுந்த குற்றவுணர்வில் நான் தள்ளப்பட்டுவிட்டேன்.’’

"உங்களுடைய அடுத்த படைப்பு முயற்சி..?’’

"1673-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று பாண்டிச்சேரி கடற்கரையில் சுருட்டுப் புகையை ஊதியபடி பிரெஞ்சுக்காரன் நம் மண்ணில் கால் ஊன்றினான்.  1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியில் அவன் இங்கிருந்து கிளம்பிச் சென்றான். இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிரெஞ்சு ஆட்சியின் வாயிலாக நமது தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த சமூக, பண்பாட்டு  மாற்றங்களை நான்கு பாகங்களாக எழுத வேண்டும் என்பது எனது நீண்டகால விருப்பம். இரண்டு பாகங்களை எழுதிவிட்டேன். மீதத்தையும் இந்த ஆண்டில் எழுதி முடித்துவிட வேண்டும்.’’

"அற மதிப்பீடுகள் குறைந்துவரும் இந்தச் சூழலை எப்படி உணர்கிறீர்கள்?’’

"இன்னும் அம்மாக்கள் குழந்தைகளுக்கு அம்மாக்களாகத்தான் இருக்கிறார்கள். தங்கைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்கிற அண்ணன்கள் இருக்கிறார்கள். குடித்துவிட்டு கழுத்தை நெரிக்கும் கணவன்களோடு மனைவிகள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அறம் சார்ந்த புதிய நம்பிக்கைகளை நாம்தான் விதைக்க வேண்டும். வேறு யார் செய்வார்கள்? இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது. யுத்த பூமியான ஈழத்தில்கூட பூக்கள் பூக்கத்தானே செய்கின்றன. எல்லாம் ஒரு நம்பிக்கையில்தான். நான் நம்புகிறேன், என்றென்றும் இறுதியில் அறமே வெல்லும்!’’

நன்றி: விகடன் தடம்

Last Updated ( Tuesday, 04 October 2016 09:10 )

 

குடும்பம் என்ற அமைப்பு உருவாகும் முன் இங்கே கற்பு இல்லை!” - பிரபஞ்சன் - ஆனந்த விகடன்

ரீ.சிவக்குமார், தமிழ்மகன்

தய அறுவைசிகிச்சை முடிந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. உடல்நிலை கொஞ்சம் தேறியிருக்கிறது. ஆனாலும் உடலின் பலவீனத்தைச் சமாளித்துக்கொண்டு, உரையாடுகிறார் பிரபஞ்சன். 

''டிசம்பர் 26 அன்று காபி குடிக்க மாடியில் இருந்து கீழே இறங்கியபோது, என்னால் அடி எடுத்துவைக்க முடியவில்லை; நெஞ்சில் ஏற்பட்ட பாரத்தால் மூச்சுவிட முடியவில்லை. பக்கத்து அறையில் இருக்கும் ரவிக்குமார் என்கிற வழக்குரைஞர் நண்பரிடம், 'என்னால் முடியவில்லை. நெஞ்சு வலிக்கிறது. மருத்துவமனையில் அனுமதியுங்கள்என்றேன். உடனடியாக அனுமதிக்கப்பட்டேன். முதலுதவிகள் முடிந்து மருத்துவமனை வாசலுக்கு வருகிறேன். என் நண்பர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள் என 50 பேர் கூடியிருந்தனர். 'நம்மையும் நம் எழுத்தையும் நேசிக்கும் இத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்என்ற எண்ணமே எனக்குத் தெம்பூட்டியது. அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, என் சட்டைப்பையில் இருந்தது 120 ரூபாய்தான். 'அறுவைசிகிச்சை என்றால் லட்சக்கணக்கில் செலவு ஆகுமே, எப்படிச் சமாளிப்பது?’ என்ற எண்ணம், என் உடல் இயலாமையையும் தாண்டி அழுத்தியது. என் மருமகன் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் கட்டினார். திரைக் கலைஞர் ஒருவர், என் அறுவைசிகிச்சைக்கான அத்தனை செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். அவர் பெயரைச் சொல்லக் கூடாது எனச் சொன்னதால், உங்களிடம் சொல்ல முடியவில்லை'' - பிரபஞ்சனின் வார்த்தைகளில் நேசத்தின் மீதான பிரியம் பற்றிப் படர்கிறது.

''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, 'இந்த விஷயங்களை எல்லாம் எழுதாமல் விட்டுவிட்டோமேஎன, உங்கள் மனதில் சிறிய பட்டியல் ஓடியிருக்கும்...?''

''அறுவைசிகிச்சை முடிந்த சில நாட்கள், படுக்கையில்தான் கழிந்தன. ஒருவிதமான மயக்க நிலை. இதற்கு முன்பு நினைவுக்கு வந்தேயிராத என் பால்ய காலச் சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து போயின. ஒரு நாவலுக்கான எண்ணமும் குறிப்புகளும்கூட வந்தன. ஓர் ஆண், பெண்ணாக மாறி வாழ்கிறான் என்பதுதான் கதையின் மையம். நோயால் பாதிக்கப்படும் முன்பு அந்த நாவலை எழுதத் தொடங்கியிருந்தேன். மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு அந்த நாவலில் சில திருத்தங்களைச் செய்யத் தொடங்கினேன். இந்த ஆண்டு முடிவதற்குள் அந்த நாவலை முடித்துவிடுவேன். அறுவைசிகிச்சைக்குப் பிறகும்கூட என் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதற்கான பணத்தை, பல நண்பர்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். என் மீது பிரியம்கொண்டு இத்தனை நண்பர்கள் உதவியிருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் என் எழுத்தை நேசிப்பதுதான். எனவே, தொடர்ச்சியாக எழுதுவது ஒன்றுதான் நான் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு.''

''எழுத்தாளர் பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்நாவல், இந்து மதத்தையும் திருச்செங்கோடு என்கிற ஊரையும் இழிவுபடுத்துவதாக நடைபெற்ற போராட்டங்கள், புத்தக எரிப்பு... போன்றவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''குடும்பம் என்ற அமைப்பு உருவாவதற்கு முன்பு, இங்கே கற்பு இல்லை. இன்னமும்கூட பல பழங்குடிச் சமூகங்களில் குடும்பத்துக்கு வெளியேயான பாலுறவும், திருமணத்துக்கு முன்பான பாலுறவும் சகஜம். ஏன்... சங்க காலத்திலேயே களவு முறை இருந்ததே. கற்பு... கற்பு என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டதற்குக் காரணமே, களவு முறை அதிகமாக இருந்ததால்தானே?

எழுத்தாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். அவர்கள் சிந்திப்பதைத் தடை செய்யக் கூடாது. ஒரு நாவலில் குறிப்பிடப்படும் பகுதிகளையும் கதையையும், அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை ஒரு படைப்பு தங்களை இழிவுபடுத்துவதாகச் சிலர் நினைத்தால், அதற்கு எதிராகப் பேசலாம்; அந்தப் படைப்புக்கு எதிராக, இன்னொரு படைப்பை உருவாக்கலாம். ஒரு படைப்பை இன்னொரு படைப்பு மூலம்தான் எதிர்க்க முடியுமே தவிர, புத்தகங்களை எரிப்பதன் மூலம் அல்ல. இப்போது பெருமாள்முருகன் இனி வரும் பிரதிகளில் 'திருச்செங்கோடுஎனும் பெயரை எடுத்துவிடப் போவதாக அறிவித்துள்ளார். பொது அமைதி கருதி அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் அதே படைப்பில் திருத்தங்களைச் செய்யலாம். எல்லாமே எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கு உட்பட்டவை. புத்தகங்களை எரித்துவிடலாம். ஆனால், உண்மையை எரிக்க முடியாது.''

''மகாபாரதப் பாத்திரங்களின் மீது உங்கள் கவனம் திரும்பியிருக்கிறது. அதைப் பற்றி சொல்லுங்கள்?''

''இந்தியா உலகுக்கு அளித்த முக்கியமான இலக்கியம் என்றால் அது மகாபாரதம்தான். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எழுதப்பட்ட முதல் சுயசரிதையும் அதுதான். வியாசரின் மகன்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோர். அவர்களின் குழந்தைகள், அவர்களுக்கு இடையிலான போராட்டம்... என மகாபாரதக் கதை விரிவடைகிறது. தஞ்சையில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது 'மகாபாரதபிரஸ்என்ற ஓர் அச்சகம் இருந்தது. மகாபாரதத்தை அச்சிடுவதற்கு என்றே இயங்கிவந்த அச்சகம். மகாபாரதத்தை அவர்கள் மிகச் சிறந்த வடிவில் கொண்டுவந்தனர். அதேபோல் விருத்தாசலத்தில் என் பாட்டி வீட்டுக்குச் சென்றபோது மகாபாரதக் கதையை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து, அதன் மீதான என் ஆர்வம் தொடங்கியது. மகாபாரதம் மனித உணர்வுகளின் பலவீனங்களையும் இழிவுகளையும் இருண்ட பக்கங்களையும் அற்புதமாகச் சித்திரிக்கும் காப்பியம். போர் முடிந்து இறுதியில் பாண்டவர்கள் மோட்சத்துக்குச் செல்கிறார்கள். அப்போது பாஞ்சாலி மயங்கி வீழ்கிறாள். அதைப் பார்த்து பதற்றத்துடன் பீமன் தர்மனிடம், 'அண்ணா பாஞ்சாலி வீழ்ந்துவிட்டாள்என்கிறான். 'அவளை அப்படியே விட்டுவிடு. அவள் ஐவரையும் மணந்திருந்தாலும் அர்ச்சுனனைத்தானே அதிகம் நேசித்தாள்என்கிறான் தர்மன். மோட்சத்துக்குச் செல்லும் வழியில்கூட தர்மனின் ஈகோ திருப்தியடையவில்லை பாருங்கள்.

பார்வையற்ற திருதராஷ்டிரன், பகடை ஆட்டத்தில் சகுனி தோற்க வேண்டும், தன் குழந்தைகள் வெல்ல வேண்டும் என விரும்புகிறான். மகாபாரதத்தில் தர்மம் வென்றது என்பது பலரது நம்பிக்கை. ஆனால், அதர்ம வழிகளைப் பயன்படுத்தித்தான் தர்மம் வென்றது. கர்ணன் கொல்லப்பட்டது ஒரு சூழ்ச்சிதானே? இப்படி சூழ்ச்சிகளையும், மனித உணர்வுகளின் பலவீனங்களையும் உள்ளது உள்ளபடி பதிவுசெய்த காப்பியம் அது. ஆனால், பிற்காலத்தில் மகாபாரதம் மத நூல் ஆக்கப்பட்டது.

தோழனாக உணரப்படவேண்டிய கண்ணன், கடவுள் ஆக்கப்பட்டான். பகவத்கீதை போன்ற இடைச்செருகல்கள் நடந்தன. மகாபாரதம் என்பது இந்து மத நூல் அல்ல என்பது என் அழுத்தமான கருத்து.''

''1965-ல் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா இந்த ஆண்டு தொடங்குகிறது. இப்போதைய தமிழர்கள் மனநிலை எப்படியிருக்கிறது?''

''மயிலம் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். நான் உள்பட மாணவர்கள் 11 நாட்கள் சிறையில் இருந்தோம். அப்போது எங்களின் போராட்டத் தளபதிகளாக இருந்தவர்கள் கா.காளிமுத்து,  நா.காமராசன், ராஜா முகமது, பா.செயப்பிரகாசம் ஆகியோர். ஆனால், நாம் இப்போது அந்த உணர்வுகளைப் பாதுகாத்திருக்கிறோமா... அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறோமா என்றால்... இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த இலக்கியப் பதிவே தமிழில் இல்லை. தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய ஒரு போராட்டம் குறித்த பதிவு இல்லை என்பது அவமானகரமானது.  

இப்போது பா.செயப்பிரகாசம் அதுகுறித்து நாவல் எழுதி வருவதாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சி. ஆனால், புனைவைத் தாண்டியும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஆவணப்படுத்தவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி மட்டும் அல்ல, இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள், ஈழ ஆதரவுப் போராட்டங்கள், தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிலவிய அரிசிப் பஞ்சம்... என எது பற்றியும் ஆவணப்படுத்தவில்லை.

பெரியாரின் அரை நூற்றாண்டுக் காலப் பொதுவாழ்வில் அவரது பேச்சுக்கள், எழுத்துக்கள் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. இதை எல்லாம் செய்யவேண்டிய கலைஞர், செய்யத் தவறியிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவர் பேசும் விஷயங்களை, ஆளும் கட்சியாக இருக்கும்போது செய்வதே இல்லை. மத்திய அரசில் செல்வாக்கோடு இருக்கும்போது, அவர்களுடன் சமரசமாகப் போய்விடுவார்.

இப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க., இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் மீண்டும் திணிக்கப் பார்க்கிறது; மதவாதத்தை எல்லா நிலைகளிலும் கொண்டுவர முயற்சிக்கிறது. 'இது பெரியார் பூமி. மதவாதமோ, பண்பாட்டுத் திணிப்போ எடுபடாதுஎன வெறுமனே பேசிப் பயன் இல்லை. பெரியாரின் கொள்கைகளையும் திராவிட இயக்க உணர்வுகளையும் ஆவணப்படுத்தாமல், அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் பெருமை பேசித் திரிவதில் என்ன பயன்? ஆனால், மற்ற மாநிலங்களைப்போல தமிழகம் இந்தித் திணிப்பையும் இந்துத்துவத் திணிப்பையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாது. அதற்கான எதிர்ப்பு கிளம்பும். மத்திய அரசு அந்த நிலையை ஏற்படுத்தக் கூடாது.''

''மக்களின் முதல்வர், தமிழக முதல்வர் என இரண்டு தளங்களில் இயங்கும் அ.தி.மு.க பற்றி...''

''ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக இருந்தாலும், எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அதிகாரம் இன்னமும் ஜெயலலிதாவின் கையில்தான் உள்ளது. ஜெயலலிதாவை, நான் திராவிட இயக்கத் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. திராவிட இயக்கம் என்பது கலைஞரோடு முடிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் எப்போது மூகாம்பிகை கோயிலுக்குப் போனாரோ, அப்போதே அ.தி.மு.க., திராவிட இயக்கம் என்ற தார்மீக அடையாளத்தை இழந்துவிட்டது. ஜெயலலிதாவோ சகல வழிபாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்பவர். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு மதநம்பிக்கை இருக்கலாம். ஆனால், மக்களின் பிரதிநிதி ஆன பிறகு, தன்  தனிப்பட்ட நம்பிக்கைகளைத் தள்ளி வைக்கவேண்டும். திராவிட இயக்கம் என்று இல்லை, நேருவும் காமராஜரும்கூட கோயில்களுக்குப் போனது இல்லை. ஆனால் ஜெயலலிதாவோ, மோசமான கலாசாரத்தைத் தொடங்கிவைத்தவர்.''

''சமூக உணர்வுள்ள எழுத்தாளர் என்ற முறையில் சமகால தமிழ்ச் சூழலின் பிரச்னைகளாக நீங்கள் கருதுபவை..?''

''டாக்டர் ராமதாஸ், தலித் மக்களுக்கு எதிராக இடைநிலைச் சாதி அமைப்புகளைத் திரட்டுகிறார். இது மிகவும் ஆபத்தானது. காதலை இவர்கள் எதிர்ப்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் நடைபெறும் தவறுகளை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக காதல் திருமணங்களை எதிர்ப்பது தவறு.

இன்னொருபுறம் பா.ஜ.க மதவாதத்தையும் பண்பாட்டுத் திணிப்பையும் மேற்கொள்ளப் பார்க்கிறது. இதை எதிர்க்கவேண்டிய திராவிடக் கட்சியான தி.மு.க-வோ தன் அடிப்படைகளை இழந்து நிற்கிறது. தமிழ்த் தேசியவாதிகள், தெலுங்கு, கன்னடம் பேசும் சாதியினரைத் தமிழர்களுக்கு எதிராகச் சித்திரிக்கிறார்கள். இது அடிப்படையிலேயே தவறானது. தமிழர்களின் பண்பாட்டுக்கு, அவர்களின் பங்கு அளப்பரியது.

திருமாவளவன் போன்ற தலித் தலைவர்கள் சமூக மாற்றத்தை முன்னெடுப்பார்கள் என நம்புகிறேன். ஆனால், தலித் மக்களும் அருந்ததியர்களின் விடுதலை பற்றி கவலைப்படுவது இல்லை. ஒரு தலித் தலைவரே அருந்ததியர்களின் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் அருந்ததியர் விடுதலையை நாம் ஆதரிக்க வேண்டும். அதேபோல் எல்லா சாதி ஆண்களாலும் ஒடுக்கப்படுபவளாக பெண் இருக்கிறாள். பெண் விடுதலை இல்லாமல், ஒரு சமூகம் மேன்மையுறாது.''

''20 ஆண்டுகளுக்கு முன்பே 'திருமணம், குடும்பம் ஆகியவை பெண்களை ஒடுக்குகின்றன. அதற்கு மாற்றுகளைத் தேடவேண்டும்என உங்கள் படைப்புகளில் வலியுறுத்தினீர்கள். அதற்குப் பின் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முன்புபோல ஆண்கள், பெண்களை ஒடுக்க முடியாது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள். இந்த மாற்றங்களை வரவேற்று, புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் சில விஷயங்களை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். திருமணம், குழந்தைப்பேறு ஆகியவை இன்றும் பெண்களை ஒடுக்கும் கருவிகளாகத்தான் இருக்கின்றன. ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கான ஒரே நிபந்தனையாக இருவருக்கும் இடையிலான புரிதல் இருக்க வேண்டும். புரிதலில் பிரச்னைகள் ஏற்படும்போது, இயல்பாகப் பிரிந்துபோகும் சூழல் வேண்டும். குழந்தைகளை என்ன செய்வது என இருவரும் பேசித் தீர்மானிக்க வேண்டும். குழந்தைகளைப் பெற வேண்டும் என்று இல்லை; ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கலாம். இத்தகைய மாற்றங்கள்தான் பெண்களுக்கான விடுதலையை அளிக்கும்.''

நன்றி:ஆனந்த விகடன்

 

விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள் - IV

அன்று கர்ஜித்த ஜெயகாந்தன் இன்று மியாவ்என்கிறார்!

விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள்

வாசகர் கேள்விகள்...

 

 இனியா குணசேகரன், திண்டுக்கல்.

''பள்ளிக்கூடங்களில் தமிழ் வழிக் கல்வி அழிந்துவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ், இனி பயன்படாத மொழியா?''

'' 'தமிழே என் மூச்சுஎன்றவர்களே, மூர்க்கமாக ஆங்கில வழிக் கல்வியை சென்ற காலங்களில் வளர்த்தவர்கள். என்னளவில் கல்விக் கொள்கை இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆறாம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வியே கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதன் பிறகே ஆங்கிலமோ, பிற மொழிகளோ, ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் ஒரு மாணவர் பெறும் மதிப்பெண், அவரின் வகுப்புத் தேர்ச்சிக்கு, அதாவது பள்ளி இறுதித் தேர்வு, பட்டப்படிப்பு எதற்கும் அடிப்படையாக இருக்கக் கூடாது. ஆங்கிலம், மற்ற எந்த அந்நிய மொழிகளையும், இன்று வளர்ந்திருக்கும் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மூலம் சுலபமாகக் கற்றுத்தர முடியும். தவிரவும் தமிழர்கள், அமெரிக்காவுக்குப் பிறக்கவில்லை.

தமிழை, நம் தலைவர்களால் அழித்துவிட முடியாது. கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழ் இருக்கும். நாங்கள் இருக்கிறோம். ஆகவே, தமிழ் இருக்கும்!''

பாலகிருஷ்ணன், மதுரை

''காலத்தின் கோலத்தில் இப்போது 'காதல்தன் மகத்துவத்தை இழந்துவிட்டதாக நினைக்கிறேன். உங்கள் எண்ணம் என்ன?

''காதல் ஒருபோதும் தன் மகத்துவத்தை இழக்காது, தோழரே! உலகம் எதனால் சுழல்கிறது என்கிறீர்கள்? உலக உயிர்கள் எதனால் வாழ்கின்றன? எந்த நம்பிக்கையில் பத்து சட்டைகளும் ஆறு பேன்ட்களும், வைத்துக்கொண்டு துவைத்து இஸ்திரி போடுகிறோம்? யுத்த பூமியில், வெடிமருந்து புகைகளின் ஊடாக, எங்கோ ஒரு புல் முளைத்து, ஒரு பூவும் பூக்கிறதே, எதனால்... காதலால் தான்! மூடர்களின் தேசத்தில், காதல் இளவரசர்கள் முதலில் கொல்லப்படுவார்கள். ஆனால், அவர்கள் ஆயிரமாயிரமாக உயிர்த்து எழுவார்கள்... காதலைச் சிலாகித்து எழுதுவார்கள்!''

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

''ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்திவிட்டது  தேக்கநிலையா... விரக்தி மனப்பான்மையா?''

''போதும் என்று நினைத்தார். ஆகவே, ஜெயகாந்தன் நிறுத்திக்கொண்டார். அதுதான் நாணயம்; நாகரிகமும்கூட. எழுதத் தெரிவது அல்ல... ஓர் எழுத்தாளனுக்கு நிறுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். நிறுத்தியது அவருக்கும் நல்லது; தமிழுக்கும் நல்லது. ஒருகாலத்தில் அவர் 'கர்ஜித்ததாகச் சொல்வார்கள். அண்மைக்காலத்தில் பல சமயங்களில் 'மியாவ்என்பதுக்கும் மேலாக அவர் போகவில்லை. தமிழ் எழுத்தாளர்கள் பலரின் கடைசிக் காலம், ஆரோக்கியமாக இல்லை. இது தமிழின் சாபக்கேடு!''

தி.மீனாக்குமாரி, அம்பாசமுத்திரம்.

''மகாபாரதத்தில் இருந்து, நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம் என்ற ஒரு செய்தியைச் சொல்லுங்கள்!''

''பலமும் பலவீனமும்கொண்டவனாகவே உருவான மனிதன், குற்றமும் குற்றமற்ற தன்மையோடும்தான் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை உணர்ந்து, தன் இருட்டுப் பக்கத்தை நீக்கிக்கொண்டு, வெளிச்சத்தின் பக்கம் தன்னைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதே மகாபாரதம் சொல்லும் செய்தி. இது என் புரிதல்!''

மகாலிங்கம், திருத்தங்கல்.

''இந்திய அளவில் தங்களைக் கவர்ந்த சினிமா இயக்குநர் யார்?''

''மிருணாள் சென், எனக்குப் பிடித்த கலைஞர். 'ஏக் தின் பிரதிதின்என்ற அவரது சினிமா, ஒரு சிறந்த படைப்பு. மாலை ஏழு மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பெண், வரவில்லை. கீழ் மத்தியதரக் குடும்பம் அது. அந்தப் பெண்ணின் சம்பளம்தான், அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம். குடும்பம் அலைபாய்கிறது. விபத்தா... ஓடிப்போனாளா... என்ன சிக்கல்? பக்கத்து வீட்டுக் குடும்பங்கள் எட்டிப்பார்த்து, அதீத (இந்திய)  அக்கறை காட்டி 'என்ன பிரச்னை?’ என விசாரிக்கின்றன. நாலு மணி நேரம் அந்தக் குடும்பம் எதிர்கொள்ளும் அவஸ்தை படமாக விரிகிறது. கடைசிப் பேருந்தில் அந்தப் பெண் வந்து இறங்குகிறாள். உணவுகொண்டு, உறங்கப் போகிறாள்.

படத்தின் திரையிடலின்போது மிருணாள் சென் உடன் இருந்தார். பார்வையாளர்களில் நானும் இருந்தேன். ஒரு தமிழர் எழுந்து, 'சார்... அந்தப் பெண் எங்குதான் போனாள்?’ என்று ஆவலுடன் கேட்டார். தமிழ்க் கவலை! சென், மிக அமைதியாக, 'I don’t know sir’ என்றார். 'என் பிரச்னை அது அல்ல. கீழ் மத்தியதரக் குடும்பத்து, ஓய்வுபெற்ற அப்பா, அம்மா, வேலை தேடும் தம்பி இவர்களுக்குச் சம்பாதித்துச் சோறு போடும், வேலைக்குப் போகும் பெண், திடுமெனக் காணாமல்போனால், அந்தக் குடும்பம் படும் அவஸ்தையும் பயமும்தான் நான் சொல்ல விரும்பியதுஎன்றார் அன்பார்ந்த ஒரு நண்பனின் குரலில். மனிதர்களைப் பேசுவது அல்ல... மனிதர்களின் அர்த்தத்தைப் பேசுவதே சினிமா!

சட்டென்று தோன்றுகிறது... ஓர் உலக இயக்குநரையும் சொல்கிறேனே! 'இல் போஸ்டினோ: தி போஸ்ட்மேன்என்ற படம். பாப்லோ நெரூடா நாடு கடத்தப்பட்டு, ஒரு கடற்கரையோரக் கிராமத்தில் வாழ்ந்த, வாழ்க்கையைச் சொன்ன படம். ஒரு பெரிய படைப்பாளியை, அவரது மனிதாம்சத்தைச் சொன்ன படம். எளிய, உண்மையான படம். சினிமா என்பது, கதை அல்ல; சினிமாவைப் பார்க்க, சினிமா மொழியைப் புரிந்துகொள்ள, சினிமா என்பதன் அர்த்தம் தெளிய, தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!''

சி.கேசவன், கடம்பங்குடி.

''சினிமா நடிகர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?''

''இன்றைய நடிகர்களில் அஜித், சூர்யா, தனுஷ். நேற்றைய நடிகர்களில் சுப்பையா, ரங்காராவ், சிவகுமார், ரஜினிகாந்த். முந்தாநாள் நடிகர்களில் பி.யூ.சின்னப்பா!''

அப்துல் சலாம், திருச்சி.

''இலக்கியத்தால், இலக்கியவாதிகளால் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைக்க முடியுமா?''

''கலை இலக்கியங்கள், ஆத்மாவில் செயல் புரிபவை; அவை நுண்மையானவை; மனத்தில் அசைவை ஏற்படுத்துபவை. 'அறம் இது, அறமற்றது இது...என்பதைச் சுட்டிக்காட்டுவதே இலக்கியத்தின் பணி. உலக மொழிகளிலேயே அதிகமாக நீதி இலக்கியங்கள் உள்ள மொழி தமிழ். எனினும் தமிழர்க்குள் அவை எந்த அளவில் அசைவை ஏற்படுத்தின? பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால், தமிழர்கள் சாதியை முன்வைத்து, மதத்தை முன்வைத்து, தமக்குள் யுத்தம் செய்வார்களா? தீண்டாமை இன்னும் நீடிக்கிறது என்றால், நீதிகள் அறங்கள் செத்துப்போய்விட்டன என்றுதானே அர்த்தம்.

அரசியல்வாதிகள் 'விமாதிரி விரல்களைக் காட்டிக்கொண்டு (வி ஃபார் விக்டரியாம்) சிறை செல்லும் குற்றவாளிகளாக வாழ்கிற நாடு இது. ஆனால், கலையும் இலக்கியமும் உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டிய நேரமும் இதுதான். நான் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர், இலக்கியம் படித்து, ஐநூறு ரூபாய் வாங்கினாலேகூட இப்போதைக்குப் போதும்தானே?''

மன்னர் மன்னன், திருவாடானை.

 ''நமது சமூக அமைப்பில் அனுதினமும் போராடிக்கொண்டே இருப்பதுதான் நேர்மையாக வாழ்பவர்களுக்கான பரிசாக இருக்கிறதே... ஏன்?''

''இந்தியாவில், நேர்மையாக வாழ்வதே ஒரு போராட்டம்தான். ஊழலிலும் சுரண்டலிலும் தலைசிறந்த நாடாக இந்தியா மிகுவளர்ச்சி பெற்று, நேருவின், இந்திராவின், ராஜீவின், சோனியாவின், ராகுலின், பிரியங்காவின், பிரியங்கா வளர்க்கும் நாய்க்குட்டிகளின் கனவை நனவாக்கிக்கொண்டு இருக்கிறது. மாப்பிள்ளை முறை வைத்து அழைத்து நட்பு பாராட்டிய சுலைமான், நான் வாரந்தோறும் என் சர்க்கரை நோய்க்கு மருந்து வாங்கும் கடைக்காரர். மசூதி இடிப்புக்கு மறுநாள் சந்திக்கையில், முகத்தைத் திருப்பிக்கொண்டு, கடைப் பையனை விட்டு விசாரிக்கச் சொன்ன அந்தக் கணம், என்னை இந்துவாக அவர் நினைத்துவிட்ட அந்தக் கணம், நான் இந்தியனாக இருப்பதில் அவமானம் அடைந்தேன். என் மனதில் ஏற்பட்ட ஆறாத ரணம் அது. ஆனால், போராடத்தான் வேண்டும். போராட்டத்துக்கு மாற்று, இன்னொரு போராட்டம்தான். ஜீவிப்பது என்பதன் இன்னோர் அர்த்தம் போராடுவது!''

 நன்றி: விகடன்

 

விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள் - III

நடிகைகளை உறுப்புகளாகவே ஊடகங்கள் பார்க்கின்றன!

விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள்

வாசகர் கேள்விகள், படம்: கே.ராஜசேகரன்

 

அ.ராமநாதன், ஒரத்தூர்.

''சரித்திர நாவல்கள் தமிழில் எப்படி இருந்தன? 'வானம் வசப்படும்அவற்றில் இருந்து எப்படி வேறுபட்டது? நாவல்கள் அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''ஜன்னல் ஓரம் நின்று தங்கள் பூரித்த மார்பகங்களை வெளியே தெரியக் காட்டிக்கொண்டு, தங்களைச் சிறைமீட்க இளவரசர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள் இளவரசிகள், ஒருகாலத்து நாவல்களில். அரசர்கள், அவர்களது மனைவிமார்கள், காதலிகள், குடும்பம் என்பதான வட்டங்களுக்குள் இருந்தன வரலாற்று நாவல்கள், இந்திய அளவிலுமே!

எந்தக் காலகட்டத்துக் கதையோ, அந்தக் காலகட்டத்து சமுதாயச் சொல்நெறி, மொழி, கலாசார விழுமியங்கள், மக்கள் வாழ்ந்த முறை, அவர்களின் போராட்டங்கள் என்பதுபோன்ற ஒரு 'சமூகக்கதையாக, படைப்பாக வரலாற்று நாவல்கள் அபூர்வமாகத்தான் பின்னர் வெளிவரத் தொடங்கின. சரித்திரம் தேர்ச்சிகொள்ளச் சொன்னார் பாரதி. வரலாறு என்பது, பழைமை அல்ல; நிகழ்காலத்தோடு உரையாடுகிற நீட்சி.

'மானுடம் வெல்லும்’, 'வானம் வசப்படும்இரண்டு நாவல்களும், சமூகத்தின் அடித்தட்டில் வைக்கப்பட்ட தாசிகள், நாட்டியக் கலைஞர்கள், மதம் மாறிய தலித்துக்கள், ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்த உலுத்தர்கள், அந்நிய ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்த ஆட்சியாளர்கள் என்று விரிகிற நாவல்கள். அண்மையில் பா.வெங்கடேசன் எழுதிய 'தாண்டவராயன் கதைஎன்ற நாவல் ஒரு முக்கிய படைப்பு. அசோகன் நாகமுத்து, 'போதியின் நிழல்நாவல் மூலம் குறிப்பிட்ட வரலாற்றுவெளியை உருவாக்க முயன்றிருக்கிறார்!''

து.அஸ்வகோஷ், தீர்த்தமலை.

''மூத்த செம்மொழியான தமிழுக்கு இதுவரை இரண்டு ஞானபீட விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது நம் படைப்பிலக்கியவாதிகளின் குறையா? அரசியல்வாதிகளின் அக்கறையின்மையா?''

''முதல் தமிழுக்கான ஞானபீட விருது, பாரதிதாசனுக்கு என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தலைமையிலான குழு தீர்மானித்திருந்தது. விருது கொடுப்பதற்கு முன்பு பாரதிதாசன் காலமானதால், வாழும் படைப்பாளிக்கே விருது தரப்பட்ட வேண்டும் என்ற கமிட்டியின் நிபந்தனைபடி, அகிலனுக்கு முதல் ஞானபீட விருது அளிக்கப்பட்டது. அகிலனுக்குப் பிறகு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகே ஜெயகாந்தனுக்குச் சென்றது அந்த விருது. மலையாளிகள், தங்கள் மாநிலத்தில் சக எழுத்தாளர்கள் மேல் எத்தனை வெறுப்பு காட்டினாலும், தேர்வுக் கூட்டத்தில் 'யாரேனும் ஒரு மலையாளிக்குக் கொடுஎன்று கோரிக்கை வைக்கிறார்கள். தமிழ்ப் பிரதிநிதிகள், அழுத்தமாக அப்படிப்பட்ட கோரிக்கைகளை, உரிய சான்றுகளோடு வைப்பதில்லை என்றும், கூடுமானவரை அமைதிகாத்துக் கூட்டத்தைச் சிறப்புற நடத்திக்கொடுத்து ஊர் திரும்புகிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன. தமிழர்கள், யார் அடைய வேண்டும் என்பதைவிடவும், யார் அடைந்துவிடக் கூடாது என்பதில் முனைப்போடு செயல்படுகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். செத்த பிறகு சிலை வைக்கும் முயற்சிகளை நாம் சிறப்பாகச் செய்வோம்தானே!

ஆனால், உண்மையான படைப்பிலக்கியவாதிகள் இதில் எல்லாம் கவனம் குவிப்பதில்லை!''

அ.சுவாமிநாதன், குன்றத்தூர்.

 ''உங்கள் குடும்பம் பற்றிய பகிர்வுகள் எதுவும் இல்லையே... ஏன்?''

 ''மிக எளிய குடும்பப் பின்னணி. நான்தான் முதல் தலைமுறைப் படிப்பாளி. குடும்பம் புதுச்சேரியிலும், நான் சென்னையிலுமாக வாழ நேர்ந்துவிட்டது. குடும்பத்துக்குள் மனிதர்க்கு விடுதலை இல்லை என்பது, குடும்பத்துக்குள் இருந்தும் இல்லாமலும்தான் புரிந்துகொள்கிறேன். பாதி வானத்தைத் தாங்குகிறவர்கள் பெண்கள். அவர்களின் சிறகுகள், குடும்ப அமைப்புக்குள் வெட்டப்பட்டுவிட்டன. மனிதகுல நெடும் பயணத்தின் இடையில் ஏற்பட்ட 'குடும்பம்என்ற அமைப்பு, அரசுகள் ஆதிக்கம் செய்ய ஆசைப்பட்ட வர்க்கு உதவ என்றே உருவாக்கப்பட்டது. இது விரைவில் உதிரும்; உதிர வேண்டும்!''

அ.சத்தியநாராயணன், மேகளத்தூர்.

''நடிகைகள் சில்க், ஷோபா, விஜி போன்றோரின் தற்கொலைக்கு யார் காரணம்?''

 ''நடிகைகள் என்பவர்கள், சொந்த விருப்பங்கள், வெறுப்புகள், தேர்வுகள் உள்ளவர்கள் என்பதை சினிமாவும் சமூகமும் ஒப்புக்கொள்வது இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் பணம்கொழித்த பிரமுகர்கள் என்று பலரும், நடிகைகளை விளையாட்டுப் பொருட்களாக, தங்கள் அந்தரங்கத்துக்கான வசந்த பொருட்களாக ஆக்க விரும்புகிறார்கள். அதிகாரம் உள்ளவர்கள், நடிகைகளை அச்சுறுத்தி தங்கள் வசம் ஆக்க முயல்கிறார்கள். நடிகைகள், தாங்கள் விரும்பும் வெளிகளில் சஞ்சரிக்க அனுமதி மறுக்கப்படு கிறார்கள். நடிகைகளின் குடும்பங்கள், தங்கள் தேவைகளை நிறைவேற்றும் இயந்திரமாக அவர்களை இயக்குகிறார்கள். தகர்க்கமுடியாத வளையத்துக்குள் சிக்கவைக்கப்படுகிறார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடுமோ என்ற அச்சத்தில் நடிகைகள் உழல்கிறார்கள். அந்த மன உளைச்சலே தற்கொலையை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது.

நடிகைகளை, வெறும் உறுப்புகளாகவே நம் ஊடகங்கள் பார்க்கின்றன. அந்தரங்க வெளி மறுக்கப்படும் நடிகைகள், மனம் சலித்து தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். ஒரு நடிகையின் தற்கொலைக்குப் பின்னால், இயக்குநர்கள், முதலாளிகள், அரசியல்வாதிகள் கட்டாயம் இருக்கிறார்கள். இவர்களே கொலைகாரர்கள். ஆனால், தப்பித்து வாழ்பவர்கள்!''

த.சத்யா, விக்கிரவாண்டி.

 ''உங்களுக்கு இசையில் ஈடுபாடு இருக்கிறது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்கள் கதைகளிலும் அதைப் பார்க்க முடிகிறது. சங்கீதம் கற்றிருக்கிறீர்களா?''

''எட்டாம் வகுப்பு வரும்போது, சங்கீதம் கற்ற ஒரு நண்பரிடம் சரளி வரிசை வரை வந்தேன். பிறகு நின்றுபோனது. சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என்று நினைத்தேன். நானும் என் நண்பரும் (அவர் பெரிய இலக்கியவாதி) வெண்ணாற்றங்கரைக்குப் போனோம். பெரும் ஆசிரியர் அங்கு இருந்தார். ஏதோ கொஞ்சம் மொழிப் பயிற்சி தொடங்கும்போது, நண்பர் ஆசிரியர் மகளுக்கு லவ் லெட்டர் கொடுத்து, வெற்றிகரமாக மொழிப் பயிற்சியை முடித்துவைத்தார். அதனால் என்ன? அவர் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் கொடுத்திருப்பேன்!

அப்புறம் மிருதங்கம். தஞ்சை ஐயன் கடைத் தெரு, அக்ரஹாரமே விதிர்விதித்துப்போயிற்று. சாதகம் என்றால் சாதாரண சாதகம் இல்லை; அசுர சாதகம். ஒருநாள் திடுமென என் மற்றும் நண்பரின் பார்வை வீணையை நோக்கித் திரும்பியது. என் அறையில் புதிய வீணை, என் படுக்கையில் வீற்றிருந்தது. வீணை வாங்கிய மறுநாளே, சிட்டிபாபு அணிகிற மாதிரியான ஜிப்பாக்கள் தைத்துக்கொண்டேன். இரவு 12 மணி வரை வாசிப்புதான். வீணை வாங்கிய இரண்டாம் நாளே 'கிருஷ்ணா நீ பேகனே...வந்துவிடும் என்று நான் நம்பினேன். ஆனால், நல்ல காது உள்ளவனுக்கு, அபஸ்வரம் மிகப் பெரிய அவஸ்தை. தெருவைப் பார்த்திருக்கும் என் அறையைக் கடந்து செல்லும் மாமிகளில் யாராவது ஒருத்தி என்னை ஒரு நாள் கொலையே செய்துவிடுவாள் என்று நம்புவது மாதிரி அவர்களின் முகத்தில், ஏனோ ஆத்திரத்தைக் கண்டேன். ஆனால் மாமிகளில், இளம்பெண்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு போவார்கள். அது கேலிச்சிரிப்பு என்பதை உணர்ந்துகொள்ள பல நாட்கள் ஆயிற்று.

இசையைக் கேட்டு, பெண்கள் காதலிப்பார்கள் என்றுதான் நான் எண்ணி இருந்தேன். என்னுடையது இசை இல்லை... இம்சை என்று அவர்கள் உணர்ந்தார்கள். மாமிகள் மாமாக்களிடம் சொல்லி, மாமாக்கள் வீட்டுக்காரருக்கு அழுத்தம் கொடுத்து என்னை அறையைக் காலிபண்ணச் செய்துவிட்டார்கள். என் வீணை ஆசிரியர் சத்யவான், 'ஏதோ கவிதை கிவிதையெல்லாம் எழுதறேளே... அத்தோடு நிறுத்திண்டா என்ன?!’ என்று வேறு ஒருநாள் மெள்ளச் சொன்னார். 'என் வாசிப்பு எப்படி?’ என்று ஒருநாள் கேட்டேன். அதற்கு சுமதியும்கூட, 'ஏதாவது நல்ல விஷயம் பேசலாமேஎன்றாள்.

ஒன்று தெரிகிறது, சார். இன்னும் ஒரு 'ஈமணி சங்கர சாஸ்திரி’(வீணை வித்வான்) உருவாகும் அரிய வாய்ப்பைக் கொடுக்கச் சமூகம் தயாராக இல்லை.

ஆனால், என் கேள்வி ஞானம் மிகவும் அடர்த்தியானது. சங்கீதத்தின் அடிக்கரும்பின் ருசியும் எனக்குத் தெரியும்; நுனிக்கரும்பின் கைப்பும் தெரியும். 'சித்தூரார்’ (சித்தூர் சுப்ரமணிய பிள்ளை) முதல் 'சிக்கில் குருசரண்வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். வசந்த கோகிலம் முதல் ரஞ்சனி காயத்ரி வரை, ராம்நாட் கிருஷ்ணன் முதல் இன்று வரும் குழந்தைகள் வரை கேட்டுக்கொண்டிருக்கிறேன். தனிமையில் எனக்குத் துணையாக, என் துன்பங்களில் ஆறுதலாக, என் ஆத்மாவை நிரப்புவது சங்கீதம்தான். இப்போது நான் சஞ்சய் சுப்ரமணியத்தின் ரசிகன்!''

ஜே.பரஞ்சோதி, அம்பத்தூர்.

 ''உலகத்தில் உங்களுக்குப் பிடித்த 'ஹீரோயார் சார்?''

''சந்தேகமே வேண்டாம். 'பிரபஞ்சன்தான்!''

 நன்றி: விகடன் 

 

விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள் - II

எழுத்தாளர்கள் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்களா?”

வாசகர் கேள்விகள்... படம்: உசேன்

 

சங்கர், சத்துவாச்சேரி.

 ''இப்போதைய இளம் எழுத்தாளர்கள் நீங்கள் பொறாமைப்படும் அளவுக்கு எழுதுகிறார்களா?''

 ''நான் யாரைப் பார்த்தும் பொறாமைப்பட்டது இல்லை. இல்லாதவன்தான் இருப்பவரைப் பார்த்துப் பொறாமைப்படுவான். நான் எல்லாம் உள்ளவன். (பணம் இல்லாதது என் குறை அல்ல!) புதிய எழுத்தாளர்களைப் படித்து நான் பெருமிதம் அடைகிறேன். நாங்கள் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளில் அடைந்த முதிர்ச்சியை, இன்று வரும் எழுத்தாளர்கள் தங்களின் முதல் தொகுப்பிலேயே அடைகிறார்கள். உண்மையில் 1970, 80-களுக்குப் பிறகான தமிழ் இலக்கியப் பரப்பில் இருந்த படைப்பு உக்கிரம் இன்றுதான் ஏற்பட்டிருக்கிறது என்பது என் கணிப்பு. இசை, கே.என்.செந்தில், மனோமோகன், மாரி செல்வராஜ், அசோகன் நாகமுத்து, சுதாகர் கத்தக் என்று எத்தனை மேன்மையான கலைஞர்கள். நான் பொறாமைப்பட்டால் கூடத் தப்பே இல்லை!''

புவனேஷ்வரி, திருச்சி.

''உங்கள் படைப்புகள்... திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவே இருக்கின்றன. ஆனால், நமது வாழ்க்கையில் நவீன மாற்றங்கள் எவ்வளவோ வந்தபோதும் குடும்ப அமைப்பு மாறாமல் இருக்கிறதே... இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?''

''என் கதைகள் வீட்டுக்கு வெளியே தொடங்குகின்றன. வீட்டில் நுழையும் முன் முடிகின்றன. குடும்பம், மனிதர்களின் சிறகுகளை வெட்டுகின்றன. இரண்டாயிரம் வருஷத்துக் குடும்ப அமைப்பு பற்றி பரிசீலிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த இரண்டாயிரம் வருஷத்தில் மனித இன நகர்வுக்கு, அடுத்தப் பாய்ச்சலுக்கு குடும்பம் என்ன செய்திருக்கிறது என்பதை ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம். சகோதரி நிவேதிதா, 'உங்கள் மனைவி எங்கே?’ என்று பாரதியிடம் கேட்டதற்கு, 'நாங்கள் அரசியல்போன்ற பொது விவகாரங்களில் பெண்களைக் கலப்பது இல்லைஎன்றார். இது, 1907-1910ம் ஆண்டுகளின் நிலை. பாரதியே இப்படி. பெண்கள் தாங்களாகவே தங்கள் இயக்கத்தைத் தீர்மானித்து இயங்கவேண்டிய காலம் இது. இதில் ஆண்கள் சக போராளியாக மட்டுமே இருக்க முடியும்; ஆதிக்கம் செலுத்த முடியாது. மனைவி பெறுகிற பணத்துக்கு புருஷன் கையெழுத்துப் போடக் கூடாது. பொருளாதாரம், பெண்ணைச் சார்ந்து இருக்க வேண்டும். நண்பர்களாக, தோழர்களாக இருக்க, ஒரு கூரை தேவை இல்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்துகொண்டு, விரும்பும்போது சந்திக்கிற வாழ்க்கைமுறையையே நான் விரும்புகிறேன். ஆண்கள், பெண்களுக்குத் தோழர்களாகவே இருக்க முடியும்; தலைவர்களாக இருக்க முடியாது. குழந்தை..? இது ஒரு பிரச்னையே இல்லை. குழந்தை ஒரு பேறு அல்ல; அது ஒரு நிகழ்வு. குழந்தை இல்லாதவர்கள் புராணம் சொல்லும் 'புத்என்கிற நரகத்துக்கே போகவேண்டி இருக்காது. அந்த நரகம், குடும்பத்துக்குள் கொண்டு வரப்படக்கூடாது!''


மாதேஷ், சென்னை.

''பிரெஞ்சுக் கலாசாரத்தின் தாக்கம் அதிகம் உள்ள புதுச்சேரி மண்ணில் பிறந்தவர் நீங்கள். அந்தக் கலாசாரப் பின்னணியில் இருந்து தமிழ்நாட்டுக் கலாசார வாழ்க்கை குறித்து என்ன கருதுகிறீர்கள்?''

''சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர அரசர்கள் முதலான தமிழக மன்னர்கள் தமிழகத்தை ஆண்டதுபோலவே, எங்கள் புதுச்சேரியையும் ஆண்டார்கள். ராஜராஜன், தஞ்சைப் பெரிய கோயிலைப் போலவே எங்கள் ஊரிலும் (திருக்குந்தன்குடி மகாதேவர் கோயில், மதகடிப்பட்டு) ஒரு கோயில் கட்டியிருக்கிறான். பின்னர், பிரெஞ்சுக்காரர்கள் என்கிற வியாபாரிகள், எங்களை சுமார் 260 ஆண்டுகள் ஆண்டார்கள். சாதி, மதப் பிரச்னைகள் எங்கள் பிரதேசத்தில், ஒப்புநோக்கு அளவில் குறைவு. காரணம், பிரெஞ்சுக் காரர்களுக்கு சாதி தெரியாது. ஒரு பிரெஞ்சு கவர்னரின் வீட்டில் தலித் ஒருவர், சமையல்காரராக வேலை பார்ப்பார். ஒரு பிரெஞ்சு அதிகாரி, தன் காரை விட்டுக் கீழிறங்கி, ஓட்டுநருக்குக் கைகொடுத்து நன்றி சொல்வார். தமிழகத்துக்கு முன்பே, எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. 'பெண் கல்விஅமலுக்கு வந்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்கள், நீதிமன்றம் நிறுவி 'சாதிக்கொரு நீதிஎன்ற தீமையை ஒழித்தார்கள். பிரெஞ்சு ஆசிரியர்கள் பெற்ற சம்பளத்தை, தமிழ் ஆசிரியர்களும் பல சமயங்களில் பெற்றார்கள்.

எங்கள் ஊரில் இந்திய தமிழ்க் கணவரும் பிரெஞ்சு தமிழ் மனைவியும் ஒரு கூரையின் கீழ் இயல்பாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தமிழனாகப் பிறந்து பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற பல ஆயிரம் பேர் எங்கள் ஊரில் வாழ்கிறார்கள். மொழியால் தமிழர்கள்; தேசத்தால் பிரெஞ்சுக்காரர்கள்.

தினப்படி வாழ்வுமுறையில் பல பிரெஞ்சுப் பழக்கவழக்கங்கள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன. 1970-க்குப் பிறகான, தமிழகத் தமிழர்கள், தமிழ்நாட்டுக்காரர்கள், எங்கள் ஊரில் குடியேறி, எங்கள் தனித்தன்மையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற பேச்சு, எங்கள் மாநிலத்தில் உண்டு. தவிர, நான் தமிழ்நாட்டுக்காரன் இல்லை; புதுச்சேரிக்காரன்!''

சண்முகம், காஞ்சிபுரம்.

''புலமைக் காய்ச்சல் தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு அல்லவா?''

''தர்மசங்கடம் என்பது அயோக்கியர்களுக்கு வராது. தர்மவான்களுக்கே அந்தச் சங்கடம். புலமை உள்ளவர்களுக்குக் காய்ச்சல் வராது. 'பிறருக்கான நாற்காலியில் நாம் உட்கார முடியாதுஎன்ற ஞானம் பிறக்காத மூடர்களுக்கே காய்ச்சல், சளி, இருமல் எல்லாம் வரும். உலகம் முழுக்க இந்தப் புலமைக் காய்ச்சல் இருக்கிறது. ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் பணம் இவற்றைச் சார்ந்து வாழும் எழுத்தாளர்கள், அவற்றைச் சாராதவர்களை ஒடுக்குவார்கள்!''

 ராஜமாணிக்கம், கோனேரிராஜபுரம்.

''ஈழத் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''

''ஈழ மக்கள், இவ்வளவு துயரங்களுக்குப் பிறகு சிங்களர்களோடு இணைந்து வாழ முடியாது. அவர்களுக்கென அதிகாரமிக்க தனி ஈழமே சரியான தீர்வு. தன் மக்களையே இரண்டாம்பட்சமாகப் பார்க்கும் அரசில் தமிழர்கள் எப்படி வாழ முடியும்? தமிழகத்தில் இயங்கும் கட்சிகள், இங்கு இருக்கும் அகதிகளுக்கு உரிய உரிமை சென்றுசேரப் பாடுபட வேண்டும். பிறகு, ஈழத் தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அரசியலை நகர்த்த அழுத்தம் தர வேண்டும்!''

கோபாலகிருஷ்ணன், தஞ்சாவூர்.

''நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் வாங்கப்படுவது இல்லை என்று பதிப்பகங்கள் சார்பில் அறிக்கைகள் வருகின்றன. நூலகங்களை நம்பித்தான் பதிப்பகங்கள் செயல்பட வேண்டுமா? வேறு வழி இல்லையா?''

''அரசு நூலகங்களை நம்பியே பதிப்பகங்கள் வாழ்வது ஓர் அவலம். இங்கு மக்கள் இன்னும் புத்தகங்களோடு சேர்ந்து வாழும் நிலை உருவாகவில்லை. புத்தகத்தின் வெகுமதி உணரப்படவில்லை. இது ஒரு பக்கம். தமக்குரிய நூல்களைத் தேர்ந்து வாசிக்கும் பயிற்சி, வாசகர்களுக்குப் போதவில்லை. சமையல், வாஸ்து, அழகுக் குறிப்புகள், ஆண்மை விருத்தி, பத்து நாட்களில் பணக்காரர் ஆகும் வழி முதலானவைகூட இங்கு புத்தகம் என்றே அழைக்கப்படுகின்றன. வங்க நாவலாசிரியர் விபூதி பூஷண் (பதேர் பாஞ்சாலி நாவல் ஆசிரியர்) எழுதிய வங்க நாவல் 'வனவாசியை சாகித்ய அகாதமி முன்னர் தமிழில் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற, நேர்மை மிகுந்த டி.என்.குமார சாமி-டி.என்.சேனாபதி சகோதரர்கள் வங்க மொழி பயின்று வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்த சில அரிய படைப்புகளில் ஒன்று 'வனவாசி’. இது 'ஆரண்யம்என்ற பெயரில் மொழிபெயர்ப்பாளர் பெயர் இல்லாமல், அநாதையாக இப்போது வெளியாகி இருக்கிறது. இதையும் காசு கொடுத்து, நூலகத் துறை வாங்கும்.

பதிப்பாளர்கள் சிலர், எழுத்தாளர்களுக்கு ராயல்ட்டி கொடுக்காமல் பட்டினி போட்டுச் சாகடிக்கிற தமிழ்த் தொண்டு செய்கிறார்கள். என்றாலும், பதிப்பாளர்களுக்கு அரசியல், கட்சி முதலான காரணங்களால் அவர்கள் உரிமை பறிக்கப்படும்போது நாம் அவர்கள் பக்கமே நிற்க வேண்டும். அதே சமயம், பாதிக்கப்படுகிற எழுத்தாளர் பக்கமும்தான்!''

பாக்கியலட்சுமி, சோழவரம்.

'' 'சமூகம், எழுத்தாளர்களைக் கொண்டாட மறுக்கிறதுஎன்ற கவலையை, சில எழுத்தாளர்கள் பகிந்துகொள்கிறார்களே?''

''சமூகம், எழுத்தாளர்களைக் கொண்டாடுவது இருக்கட்டும். எழுத்தாளர்கள் எத்தனை பேர் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் அரசியல் சார்ந்த பிரக்ஞையோடு இருக்கிறார்கள்? மையம் குலைத்து, விளிம்பைக்கொண்டாடுகிறார்கள்? ஜப்பானிய எரிமலைகள் போல அவ்வப்போது மேலெழும் சாதி மதக் கலவரங்கள், காதல் கொலைகள், பாலியல் வன்முறைகள் முதலான விஷயங்களில் குறைந்தபட்ச அக்கறை, புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? எனக்கு முன்னால், ஒடுக்குகிற சக்தி, ஒடுக்கப்படுகிற சக்தி என்று இரண்டு இருக்கிறது. சிந்தனையாலும், எனக்குள்ள யோக்ய உணர்வாலும், என் செயல்பாட்டிலும், நான் ஒடுக்கப்படுகிற சக்தியோடுதான் இணைய முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்கள், அவர்களை நேசிப்பவர்களைக் கொண்டாடுபவர்களாகவே இருக்கிறார்கள்!''

நன்றி: விகடன்

 

 
More Articles...
<< Start < Prev 1 2 Next > End >>
Page 1 of 2
cheap ugg boots moncler doudounecheap nfl jerseys Packers Jerseyscowboys jerseyspatriots jerseysSteelers Jerseysclassic tall ugg bootsugg australiaugg clearancediscount moncler jacketsmoncler jacketscheap canada goosecanada goose outlet Cheap Thomas Sabo Jewelry